Friday, 16 October 2020

சர்வ பாக்கியங்கள் அளிக்கும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை

பௌர்ணமி ஸ்பெஷல் !

சர்வ பாக்கியங்கள் அளிக்கும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை !

ஸ்ரீ மன் நாராயணனே சத்ய நாராயணன். வாழ்வும் வளமும் மங்காத செல்வமும் பெற சத்ய நாராயண பூஜை செய்யலாம். எளிதான இந்த பூஜையை இல்லத்திலேயே செய்துவிடலாம். அருகில் உள்ள கோயில்களில் இப்பூஜை செய்யப்பட்டால் கலந்து கொண்டு நலம் பெறலாம். பொதுவாக இந்தப் பூஜை செய்யப்படுவதே பதினாறும் பெற்று பெருவாழ்வு அடையத்தான்.

பூஜை தொடங்குவதற்கு முன்பே கலந்துகொள்பவர்கள் வந்துவிட வேண்டும். பின்னர் இறுதிவரை அங்கேயே இருந்து பிரசாதத்தைப் பெற்று அங்கேயே சிறிது உண்டுவிட்டுப் பின்னர் இல்லத்துக்கும் எடுத்து வரலாம்.

இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், குடும்பத்தில் கஷ்டங்கள் குறையும், செல்வ வளம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்கிறது கந்த புராண சுலோகம்.

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அன்னாவரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சத்யநாராயண சுவாமி ஆலயம்.
ஸ்ரீ சத்யநாராயணன் பற்றிய கதை கந்த புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பூஜையை செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கந்த புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

     இந்த பூஜை ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பு செய்வது உண்டு. பொதுவாக பௌர்ணமியன்று மாலை வேளையில் இந்த பூஜை செய்யப்படுகிறது. சித்ரா பௌர்னமி மிகவும் விசேஷம் என்றாலும் மற்ற  விசேஷ நாட்களிலும் இந்த பூஜையை செய்யலாம். அக்‌ஷய திருதியை நாளிலும் இந்த பூஜையை செய்வது விசேஷமே. குடுப்பத்தில் நல்ல காரியங்கள் நிகழ்வதில் தடை இருந்தாலோ, பொருளாதாரத்தில் தடை இருந்தாலோ இந்த பூஜையை வருடம் முழுவதும் எல்லா பௌர்ணமி, ஏகாதசி போன்ற நாட்களில் செய்து வரலாம்.

 ஸ்ரீ சத்யநாராயணா பூஜையை தொடங்கும் முன் விநாயகர் பூஜையையும், நவகிரக பூஜையையும் செய்ய வேண்டும். ஒரு கலசமும் அதன் பின்புறமாக சத்ய நாராயணன் உருவம் சேர்ந்த படத்தை வைத்து இந்த பூஜையை செய்யலாம். படத்திற்கும் பூ கொண்டு அலங்கரித்து வெற்றிலை பாக்கு, பூ, பழம், தேங்காய் வைத்து ஊதுபத்தி ஏற்றிவைத்து பூஜையை தொடங்க வேண்டும் இந்த பூஜைக்கு தேவையான அர்ச்சனை நாமாவளி, பூஜையின் போது படிக்கும் கதை மற்றும் பூஜை செய்யும் முறைகளெல்லாம் புத்தக வடிவில் கிடைக்கிறது. அர்ச்சனைக்கு பூ, குங்குமம் மற்றும் அட்சதையை உபயோகிக்கலாம். இந்த பூஜைக்கு வறுத்த கோதுமை மாவுடன் நெய்யும் சர்க்கரையும் கலந்து நைவேத்தியமாக படைக்கலாம். கோதுமை பொங்கல் அல்லது அரிசியில் செய்த வெண்பொங்கலையும் நைவேத்தியமாக படைத்து அனைவருக்கும் கொடுக்கலாம்.

     இந்த பூஜையின் போது படிக்கப் படும் கதைகளில் இருந்து தெரிவது என்னவென்றால் எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத குணம் உள்ளவர்களே வாழ்வில் எல்லா நலங்களையும் பெற முடியும். சத்ய நாராயணன் என்ற பெயருக்கு ஏற்ப சத்தியத்தை கடைபிடித்து வாழ்பவர்களுக்கே சர்வ சௌபாக்கியங்களையும் அளிக்கக்கூடியவராக இந்த கடவுள் இருக்கிறார், உண்மை பேசுபவராக, உண்மையை வழிபடுபவராகவும் இருப்பதே நம் கர்மாக்களை அழித்து வாழ்வில் கஷ்டங்களை போக்கி, தடைகளை அகற்றி நன்மைகளை கொடுக்கவல்லது என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த பூஜை அமைகிறது. 

ஓம் நமோ நாராயணாய !🙏🙏

No comments:

Post a Comment