Sunday, 8 November 2020

குரு பெயர்ச்சி பலன் 2020-2021

ஸ்ரீ குருப்யோ நமஹ!!!

குரு பெயர்ச்சி பலன் 2020-2021
----------------------------------------------------

 சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய கோள்  ஜூபிடர் எனும் குரு. ஜோதிடத்திலும் குரு கிரகம்  முக்கிய பங்கு வகிப்பதை நாம் அறிவோம் . குருவே ஜீவ காரகன்  . ஜாதகத்தில் குருவுடன் இணையும் கிரகத்தினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். ஒருவருக்கு திருமணம் கைகூட,   குழந்தை பிறப்பு, சமூகத்தில் நல்ல அந்தஸ்து  பெற ஏற்ற காலமாக கோச்சார குருவின் நகர்வை எடுத்துக்கொள்வோம்.

நிகழும் சார்வரி வருடம் ஐப்பசி மாதம் முப்பதாம் நாள் 15- 11 -2020  வாக்கிய படி,  கார்த்திகை மாதம் ஐந்தாம் நாள் அதாவது  20 -11 -2020 அன்று திருக்கணிதப்படி  தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறது.  சுய ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களின்  பொறுத்து  பலன்கள் மாறுபடும். இங்கு நாம் பிருகு நந்தி நாடி விதிப்படி கிரகங்களின் சேர்க்கை அல்லது இணைவை கொண்டு , குருபெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம் .

பிருகு நந்தி நாடி விதிப்படி குரு கிரகத்திற்கு எந்த கிரகமும் பகையில்லை எல்லா கிரகமும் நட்பே. 1,2,5,9 ஆகிய இடங்களை சேர்கையாக கொள்ள வேண்டும். (ஏழாமிடம் சேர்க்கை 50% பாலனாக பார்க்கலாம்).   குருவை மகர ராசியில் மையமாகக் கொண்டு ஒவ்வொரு கிரகங்களும் எந்த கட்டத்தில் இருந்தால்‍,  எப்படிப்பட்ட பலன் என்பதை  பார்ப்போம். 

 சூரியன்:
----------------
 சுய ஜாதகத்தில் கன்னி , மகரம் , கும்பம், ரிஷபம் , கடகத்தில் சூரியன் இருக்கப் பெற்றவர்கள் , ஜீவ காரகனும் -ஆத்ம காரகனும் இணையும் இந்த காலகட்டம் தந்தையால்/மூத்தமகனால் ஆதாயம் உண்டு. சமூகத்தில் நல்ல மதிப்பு உயரும். அரசியல் ஆதாயம் நன்கு இருக்கும்.  தந்தை உடல்நலம் மேம்படும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு ஆண் வாரிசு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. 

சந்திரன் :
---------------
கன்னி , மகரம் , கும்பம், ரிஷபம் ,கடக ராசி அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் தாய்/ மூத்த சகோதரி/மூத்த வயது பெண்களால் ஆதாயம் உண்டு . தாய் உடல்நலம் சீராகும் அல்லது மேம்படும் . மனோகரனுடன் - ஜீவ காரகன் இணையும் பொழுது மனதில் தைரியமும் நேர்மறை எண்ணங்கள் உண்டாகும்.   பிரயாணம் செய்யக்கூடும். அதனால் ஆதாயம் உண்டு.  ஆன்மீக நாட்டம்  உண்டாகும்.

செவ்வாய்:
-----------------
கன்னி , மகரம் , கும்பம், ரிஷபம் , கடகம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருக்கப் பெற்ற திருமண வயதை எட்டியிருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும். திருமணமான பெண்களுக்கு  கணவனின் அந்தஸ்து உயரும். இளைய தம்பிக்கு இந்த குரு பெயர்ச்சியினால் அதிக நன்மை உண்டு . அவர்களுக்கு வேலை  கிடைக்கும்.  நிலபுலன்கள் வாங்குவீர்கள். ஏற்கனவே இருக்கும் நில பிரச்சினைகள் சுமூகமாக தீரும். பகைவரும் நட்பு பாராட்டுவர்.

புதன்:
----------
சுய ஜாதகத்தில் கன்னி , மகரம் , கும்பம், ரிஷபம் ,  கடகத்தில் புதன் இருந்தால்    மாணவர்களெனில்  அதிக நாட்டம் ஏற்படும், நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்  வர்த்தகம், கூட்டுத்தொழில்  செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலம். நண்பர்களால்  நன்மை உண்டாகும் . தாய்மாமனால் ஆதாயம் உண்டு .  வீட்டுமனை வாங்குவீர்கள். பாகப்பிரிவினை போன்றவற்றில் சுமூகமான நிலை கிட்டும்.  தொழில் தொலைத்தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகமான காலம். தகவல் பரிமாற்றத்தினால்  வளர்ச்சி பெறலாம் .

குரு:
-------
கன்னி , மகரம் , கும்பம், ரிஷபம் ,  கடகம்  இடங்களில் குரு இருக்கப் பெற்ற அன்பர்களுக்கு , சுய முன்னேற்றம் ஏற்படக் கூடிய  காலம். குழந்தை பிராப்தம் உண்டு. நிரந்தர சொத்து அல்லது தங்கம் சேரும் பொன்னான காலம் எனலாம்.

சுக்கிரன்:
---------------
சுய ஜாதகத்தில் கன்னி , மகரம் , கும்பம், ரிஷபம் ,  கடகம்  ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால், ஆண் எனில் திருமணம் நடக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். பொதுவாக நல்ல வருமானம் வரும் காலம் . வீடு , வாகனம், புது நகை  வாங்கும் யோகமான காலம் . 

சனி:
--------
கன்னி , மகரம் , கும்பம், ரிஷபம் , கடகம் ஆகிய இடங்களில் சனி இருக்கப் பெற்றவர்களுக்கு உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும் காலமிது.   உத்தியோகத்தில் வேண்டும் உங்களின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். அல்லது புதிய நல்ல வாய்ப்புகள் வரும். இது நடக்குமா என்று ஏங்கியிருந்த விருப்பங்கள் நிறைவேறும் காலம். வாயு தொல்லை அதிகரிக்கும்.  பொதுமக்களிடம் தங்களின் மதிப்பு உயரும் . வீட்டில் வயது மூத்தவர்களிடமிருந்து  அன்பையும், ஆசியையும் பெறுவீர்கள்.

ராகு:
--------

சுய ஜாதகத்தில் கன்னி , மகரம் , கும்பம், ரிஷபம் ,  கடகம் ஆகிய இடங்களில் ராகு இருக்க பெற்றவர்களுக்கு , அனாசாரமான  எண்ணங்கள் தோன்றும்.   வேற்று மத காரர்களால்/வெளிநாட்டிலிருந்து  ஆதாயம் உண்டு . சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் உடல்நலத்தில் அதிகம் கவனம் தேவை.

கேது:
---------
கன்னி , மகரம் , கும்பம், ரிஷபம் ,  கடகம் ஆகிய இடங்களில் கேது இருக்கப் பெற்றவர்களுக்கு , ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும் . ஜீவ சமாதி மற்றும் சித்தர்களின் தரிசனம்  கிடைக்கக்கூடும். அந்நிய மத காரர்களால் ஆதாயம் உண்டு.  விரக்தி தன்மை ஏற்படும். 

குறிப்பு:

 கிரகங்கள் வக்கிரம் பெறாமல்  இருந்தால், மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்.

1.அவரவரின் குருவை தினமும் வணங்கி அடிக்கடி அவர்களிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவது நல்லது .

2.  அனைவரும் குருவின்  அதிதேவதையான குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

3. ஆசிரியருக்கு நன் மதிப்பளியுங்கள். 

4 . கோவில் பராமரிப்புக்கு உங்களால் இயன்ற உதவிசெய்யுங்கள். 

5. கோதானம் அல்லது கோரக்ஷை(பசு பராமரிப்பு) செய்வதால் குருவின் அருளைப் பெறலாம். 

6.   எளிய மக்களுக்கு தங்களால் இயன்றதை வழங்குங்கள் .  குரு அருளைப் பெறுங்கள்.

 

No comments:

Post a Comment