பொதுவாக ஒருவரது சஞ்சித கர்மாவைக் குறிக்கும் முன்ஜென்மாவைப் பற்றி குறிப்பிடும் பாவகம் பாக்கிய ஸ்தானமென்னும் 9 ம் பாவகமாகும்.
அதேபோல், அடுத்த பிறவியாகிய ஆகாமிய கர்மாவைக் குறிப்பிடுவது பூர்வ புண்ணியமென்று சொல்லக்கூடிய 5 ம் பாவகம்.
அதுபோலவே, ஜாதகர் இப்பிறப்பில் அனுபவிக்க வேண்டிய சுகாசுக போகங்களைப் பற்றிய குறிப்பை பஞ்சமத்திற்கு சத்ருவாகி வருகின்ற கர்ம ஸ்தானம். இவ்வாறு வருகின்றபோது எதைக் கொண்டு வந்திருக்கின்றோமென்று அறியாமல் என்ன அனுபவிக்க இருக்கின்றோம் என்பதை எவ்விதம் அறிந்து ப்ராப்தத்தங்களை அடைவது அல்லது கடப்பது என்ற கேள்வியோடு சிந்தித்தால் , சஞ்சித கர்மாவிற்குக் கர்மஸ்தானமாக அமையும் சத்ரு ஸ்தானம் அதன் பாக்கியஸ்தானமாக அமைந்த குடும்பஸ்தானமாகிய தனபாவம் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே, முன் ஜென்மம் என்பது தந்தையின் வழியாகவும், அடுத்த ஜென்மம் என்பது தனது வாரிசுகளின் மூலமாகவும் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்தவர்கள் தர்ம நியதிகளுக்கு மாறாக நடக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், அல்லது மனதிற்குள்ளாகவேகூட " யோவ் , எனக்கு 5 மிடம் வலுத்து சுப பலத்துடன் நல்ல விதமாகவே இருக்கின்றபோது நான் செய்யும் துரோகங்கள் எப்படி எதிர்தாக்குதலைச் செய்யும் " என்று கேட்கலாம்.
ஆனால், உண்மையிலேயே சிந்தித்துப் பார்த்தீர்களென்றால் உங்களின் முன் ஜென்ம விதிப்படி அதாவது பாக்கியப்படி, உங்களின் தந்தையின் பாக்கியத்தால் உங்களுக்கான பூர்வ புண்ணியம் வலுத்துக் கொடுக்கப்பட்டதை ப்ராப்த கர்ம வினையினால் அதாவது நீங்கள் செய்யும் கர்மாகர்ம பலன்களுக்கேற்ப சீராக்கப்பட்டு உங்களின் ஆகாமியமாக வரும் சந்ததிகளின் பாக்கியஸ்தானத்தை பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதே உண்மை.
உதாரணமாக., சில பல ஜாதகங்களில் கண்கூடாகவே, லக்னத்திற்கு 5 ,9 ம் பாவகங்கள் நல்ல நிலையிலிருந்து லக்னம், லக்னாதிபதி கெட்டிருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கையில் அவர்களது வாரிசுகளின் நிலைமையை சிந்தித்துப் பாருங்கள். சொத்து சுகம் இருக்கும் ஆனால் அனுபவிக்க இயலாதிருக்கும் அல்லது எல்லாவிதமான சுகபோகங்களும் நிறைந்திருந்தாலும் அவர்களின் வாரிசுகள் முடமாகியோ அல்லது அவைகளை அனுபவிக்கும் தகுதியோ இல்லாமல் கண்ணீர் வடித்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், வரிசையாகப் பிள்ளை பிறந்தாலும் பிறக்கின்றதெல்லாம் மரணித்துப் போனால் எப்படி இருக்குமோ அந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் .
ஆகவே, முடிந்தவரை ஒருவருக்காவது உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்திடுவோமானால் அதனால் பெறுகின்ற புண்ணியமாவது நம் எதிர்காலத்திற்குச் சென்றடைந்து சுகப்பட வைக்கும் .
No comments:
Post a Comment