Wednesday, 13 January 2021

மரபும் அறிவியலும், பொங்கல்.

மரபும் அறிவியலும், பொங்கல்.
-------------------------------------------------------

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.....
இது நன்றி தெரிவிக்கும் விழா...

தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தமிழர் திருநாள் என்று கூறப்பட்டாலும் தை மாதத்தில் முதல் மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் என விமர்சையாகத் தமிழகத்தில் மட்டுமல்ல. உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களால் (மலேசிய இந்தியர்கள், இந்திய அமெரிக்கர்கள், ஸ்ரீலங்கா தமிழர்கள், இந்தோ மொரிஷியர்கள், இந்தியன் சிங்கப்பூர்க்காரர்கள், பிரிட்டிஷ் இந்தியர்கள், இந்தியன் சவுத் ஆப்பிரிக்கர்கள், இந்தோ கன்னடியர்களாலும்) கொண்டாடப்படுகிறது. பொங்கல், மகரசங்கராந்தி, சங்கராந்தி லோஹ்ரி அறுவடைத் திருநாள், உழவர் திருநாள் என வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது இப்பண்டிகை. 

உழைக்கும் மக்கள் உழவுக்கும் தொழிலுக்கும் சூரியனுக்கும் தமது கால்நடைகளுக்கும் வயலுக்கும் இயற்கைச் சக்திகளான ஐம்பெரும்பூதங்களுக்கும் வந்தனை செய்து தங்களது நன்றியைத் தெரிவிக்கவே தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.  

பொங்கலுக்கு முதல்நாள் பழையன கழிந்து புதியன புகும் போகிப்பண்டிகை. ஆதிகாலத்தில் இந்திரவிழா எனக் கொண்டாடப்பட்ட இது கிருஷ்ணர் கோவர்தனகிரியைக் குடையாகப் பிடித்து ஆவினங்களையும் கோபியரையும் காத்தபின்னர் சூரியநாராயணபூஜையாக சூரியனை வணங்கும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

பழையன கழிதல் பொருட்டு மார்கழி கடைசி நாள் போகியாக (இந்திரனின் இன்னொரு பெயர் – போகத்தை, விளைச்சலைத் தந்தவன் என்று பொருள்) பழையன கழித்துக் கொண்டாடுகிறார்கள். அன்று வீட்டில் பூலாப்பூ செருகி வைப்பார்கள். சில ஊர்களில் புத்தர் இறந்ததினமாக அனுஷ்டித்து போகியன்று ஒப்பாரி வைப்பார்களாம். ஹோலிகா என்ற பண்டிகையைப் போல நெருப்பு வளர்த்து பழைய பொருட்களைப் போட்டுக் கொளுத்திவிட்டு வீட்டுக்கு வெள்ளை அடிப்பார்கள். 

விவசாயிகள் பொங்கல் அன்று வீட்டில் புத்தாடை அணிந்து, ரங்கோலி போன்ற கோலமிட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டுவார்கள். புதுப்பானை சட்டி வாங்குவார்கள். மாதம் பிறக்கும் குறிப்பிட்ட நேரத்தில் கோலமிட்ட புதுப்பானையில் மஞ்சள் கொத்து இஞ்சிக் கொத்துக் கட்டி புது மண் அடுப்பில் ஏற்றி பால் ஊற்றிப் பொங்க வைப்பார்கள். அதில் புதிதாக அறுவடை செய்த பச்சரிசியுடன் பாசிப்பருப்பு வெல்லம் பால் நெய் ஏலம் கிஸ்மிஸ் முந்திரி போன்றவை சேர்த்து இனிப்புப் பொங்கலும் வெள்ளைப் பொங்கலும் ஏழுகாய் கூட்டும் குழம்பும் செய்து பூ, கரும்பு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்குடன் வாழையிலையில் படைத்து சூரியனுக்குப் பூஜை செய்து பொங்கல் பொங்குவது போல செல்வம் பொங்கவேண்டுமென சங்கை ஊதிப் "பொங்கலோ பொங்கல்" என்று உரக்கக் கூறி மகிழ்வர். ஏனையோரும் இதையே பின்பற்றுவர். 

"பால் பொங்கிருச்சா" என்று கேட்கும் மரபும் உண்டு. "கொப்பி கொட்டுதல்" என பெண் குழந்தைகளைத் தூக்கிச் சென்று கோயிலில் வணங்கி வருதலும் உண்டு. சிறியவர்களுக்குப் பெரியவர்கள் "பொங்கப் பணம்" அளிப்பார்கள். இந்தப்பொங்கலைப் பெரும்பொங்கல் என்றும் சூரியப் பொங்கல் என்றும் அழைப்பார்கள்.

மகரத் திருநாள் என்று தமிழ்நாட்டிலும் மகர சங்கராந்தி என்று ஆந்திரா, கேரளா, பீஹார், கோவா, கர்நாடகா, ஒரிஸ்ஸா, மத்யப் ப்ரதேஷ் மகாராஷ்ட்ரா, மணிப்பூர், தெலுங்கானா, உத்தர் பிரதேஷிலும், உத்தராயணா என்று குஜராத், ராஜஸ்தானிலும், லோஹ்ரி என்று ஹரியானா, இமாசல் பிரதேஷ், பஞ்சாபிலும், மக் பிகு/போகலி பிகு என அஸ்ஸாமிலும், மஹே சங்க்ராந்தி/ மகர் சங்க்ராந்தி என்று நேபாளிலும் அழைக்கப்படுகிறது.

பொங்கலுக்கு அடுத்த நாள் ஆநிரைகளின் விழா அதாவது மாட்டுப் பொங்கல். பால் பொருட்கள், உரங்கள் தந்து விவசாயத்துக்கும் உழைத்து தம்மைச் செழிப்பாக வைத்திருக்கும் கால்நடைகளை கௌரவிக்கும் தினம். கட்டுத்துறையில் நிற்கும் மாடுகளின் (எருதுகள், பசுக்கள்) கொம்புகளில் வர்ணம் தீட்டி, குளிப்பாட்டித் திலகமிட்டு துண்டு மாலை போட்டுப் பூஜை செய்து தீபம் காட்டிப் பொங்கல் படைப்பார்கள். இன்று கொம்பில் அல்லது மாலையில் பரிசப்பணம் கட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு ஆகியனவும் நடைபெறும். 

நப்பின்னையைத் திருமணம் செய்ய கிருஷ்ணரே ஏழு எருதுகளை அடக்கியதாக புராணம் சொல்கிறது. உறியடித்தல் போன்ற விழாக்களும் நடைபெறும். தென்னை ஓலையில் தீப்பிடித்து மாடுகளை மூன்று முறை சுற்றி திருஷ்டி கழித்து ஊரெல்லையில் கொண்டுபோய்ப் போடுவார்கள். ஸ்பானிஷ் போன்ற நாடுகளில் கூட எருது அடக்கும் திருவிழா புல் ஃபைட் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தைமாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் எனவும் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கலன்று "காக்கபிடி கணுபிடி" என கலர்கலரான சித்திரான்னம், காய், வாழைப்பழம், மஞ்சள் இலை, இஞ்சி கலந்து கணுபிடி எனப் பிடித்துப் பெண்கள் தங்கள் சகோதரனின் நீண்ட ஆயுளுக்காக வேண்டிக் கொண்டு பறவைகளுக்கு உணவளிப்பார்கள். அன்று மாக்கனுமா என்று ஆந்திராவில் அசைவம் உண்பதும் உண்டு. இன்று கூட்டாஞ்சோறு ஆக்கி நதிக்கரைகளுக்கு குடும்பத்தோடு எடுத்துச்சென்று உண்பதும் உண்டு. 

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணை
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகை
"தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறு
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறு
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும் கூறுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடைக்கால சோழர் காலத்தில் பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளது. மணிமேகலையில் இந்திரவிழாவாக 28 நாள் கொண்டாடப்பட்டதாகக் குறிப்பு உள்ளது. கிராமங்களில்  மாமன்மார் தமது முறைப்பெண்களுடன் ஆவாரம்பூ பறிக்கச் செல்வார்கள். காணும் பொங்கலன்று உறவினர்களைக் காணச் செல்வார்கள். சிதம்பரம் போன்ற ஊர்களில் கோயில்களில் பெண்கள் குழுமி கூடை வைத்துச் சுற்றிக் கும்மி, கோலாட்டம் அடித்துக் கொண்டாடுவார்கள். ஏனைய பெண்கள் இக்கூடைகளில் காய்கறிகளைப் போடுவார்கள். 

தெப்பத் திருநாள் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், தேசியப் பட்டம் விடும் நாள் என்று குஜராத்திலும், கிராமியத் திருவிழா என்று கேரளாவிலும், பிகானீர் ஒட்டகத் திருவிழா என்று பிகானீரிலும், கீச்டி என்று பீகாரிலும், பட்டடாக்கல் ( சாளுக்கியரின் தலைநகரம் ) நடனத் திருவிழா என்று கர்நாடகாவிலும், வசந்த பஞ்சமி என்று வடநாட்டிலும் கொண்டாடப்படுகிறது. 

இந்த உத்தராயண புண்ணியகாலத்தில் ( ஜனவரி – ஜுன் ) இறப்பவர்கள் நேரடியாக சொர்க்கலோகத்தை அடைகிறார்கள் என்றும். அதனாலேயே குருஷேத்திரப் போரில் சிகண்டி விட்ட அம்புப் படுக்கையில் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் உத்தராயணம் வரும்வரை காத்திருந்து உயிரை விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் பொங்கல் திருநாளில்தான் ஹேமா என்ற முனிவர் கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தில் விஷ்ணுவை வணங்கினார். உடனே விஷ்ணு சாரங்கபாணியாகத் தோன்றி அருள் பாலித்தாராம். அதேபோல்  சிவன் நிகழ்த்திய அற்புதமாய் கல்யானைக்குக் கரும்பு கொடுத்த திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

சூர்ய சித்தாந்தா என்ற இந்திய ஜோதிடமுறைப்படி மகரத்தில் சூரியன் நுழையும் காலம் மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. குளிர்காலம் முடிந்து பூமி சூடாகி சூரியன் பூமத்தியரேகையிலிருந்து வடக்கில் பிரயாணம் செய்ய ஆரம்பிப்பதைக் குறிக்கிறது. உத்தராயணம் ஆரம்பிப்பதால் சூரியன் பத்தாவது ராசிவீடான மகரத்தில் நுழைகிறது. சூரியன்தான் பிரத்யட்ச பிரம்மம். தெய்வீகத் தன்மையுடன் முடிவற்ற பொருளாக சுயஒளிதந்து ஒளிர்ந்துகொண்டிருக்கிறார். தேச கால வர்த்தமானம் அற்று காலக்கடிகாரத்தைச் சுழற்றுபவர் அவர் ஒருவரே. போகியன்று லோஹ்ரியில் நெருப்பைச்சுற்றி ஆடுவார்கள். இந்த நெருப்பிலிருந்து சூரியனின் கதிர்கள் சூடாகி குளிர் காலத்திலிருந்து வேனில் காலத்தை உருவாக்கிறது. சூரியனின் மறுமலர்ச்சி நம் வாழ்வையும் புதுப்பிக்கிறது. 

5000 ஆண்டுகளுக்கு முன்பே சூரியன் தான் வானவெளிக் குடும்பத்தின் மையம் எனக் கண்டுபிடித்தனர். சூரியனைச் சுற்றி பூமியும் மற்ற கோள்களும் 360 டிகிரியில் சுற்றி வருகின்றன. பூமி சுற்ற 365 நாட்கள் ஆகின்றது. சூரிய நாட்காட்டியின்படி பன்னிரெண்டு மாதங்கள்/ராசிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 டிகிரி பாகை அளவு பிரிக்கப்பட்டுள்ளது. இதுவே பருவகாலங்களை உருவாக்குகிறது.

எனவே ஜுலையிலிருந்து டிசம்பர் வரை குறைவான சூரிய ஒளியும் ஜனவரியிலிருந்து ஜூன் வரை அதிக சூரிய ஒளியும் கிடைக்கிறது. இது தட்சிணாயனம் என்றும் அடுத்து வருவது உத்தராயண புண்ணியகாலம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் பகல் நேரம் அதிகமாவும் இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். இந்து நம்பிக்கையின்படி இந்த தட்சிணாயனம் தேவர்களின் இரவுப் பொழுது என்றும் , உத்தராயணம் என்பது தேவர்களின் பகல்பொழுது என்றும் தைமாதம் அதில் விடிகாலைப் பொழுது என்றும் அதை வரவேற்கவே பொங்கல் செய்து கொண்டாடுகிறோம் என்று சொல்லப்படுவதுண்டு.  

இதன்படி மகரராசியில் சூரியன் நுழைவதையே மகரசங்கராந்தி என்கிறோம். ஒவ்வொரு ராசியிலும் சூரியன் நுழைவது சங்ராந்தி என்று சொல்லப்படுகிறது. எனவே ஒவ்வொரு வருடமும் 12 ராசிக்கும் 12 சங்ராந்திகள் உண்டு. இதில் மகரராசி மட்டும் ஏன் விசேஷமானது என்றால் இது சூரியனைப் புதுப்பிக்கிறது. சூரிய ஒளி குளிர், பனிக்காலப் பருவம் முடிந்து இன்னும் வெப்பம் பெற்று பூமியும் சூடாகி இந்த மாதத்தில் இருந்துதான் இளவேனில் உருவாகத் தொடங்குகிறது. அது தைமாதம் ஒன்றாம் தேதி அதாவது ஜனவரி 15 ஆம் தேதிநடைபெறுவதால் இது மகரசங்கராந்தி என்றும் கூறப்படுகிறது. 

எனவே இந்த உழவர்கள் வாழ்வை மட்டுமல்ல நமது வாழ்வையும் புதுப்பிக்கும் இந்தத் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்வோம்.

No comments:

Post a Comment