Saturday, 16 January 2021

அனைவரின் 'பஞ்சம்' மற்றும் 'வறுமை' நீக்கும் ஸயன ஏகாதசி விரத மகிமை...

கடும் பஞ்சம் / வறுமை தீர்க்கும் தேவ ஸயனி' ஏகாதசி விரதம் ...
நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 

'ஆஷாத' (Ashadha) மாதம், (June / July) வளர் பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "ஸயன ஏகாதசி" (அ) "பத்ம ஏகாதசி" (அ) "தேவஸயனி ஏகாதசி" (அ) "ஆஷாத சுக்ல பட்ச ஏகாதசி" (Sayana Ekadasi / Padma Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது. 

ஸயன ஏகாதசி பற்றி 'பவிஷ்ய உத்தர புராண' விளக்கம்: 
யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, கேசவா,  ஆஷாத  மாதத்தில், சுக்ல பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, இதனைப்பற்றி ஒரு முறை நாரத முனி, தனது தந்தையான ப்ரம்ம தேவரிடம் கேட்டுப்பெற்ற விளக்கத்தை உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள் என்று கூறி தொடர்கிறார்...

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...

நாரத முனி, தனது தந்தையாகிய ப்ரம்ம தேவரிடம், ஆஷாட மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி அன்று நான் என்ன செய்ய வேண்டும், யாரைத்தொழ வேண்டும் அதன் மகிமை பற்றி எடுத்துரையுங்கள் தந்தையே என்று கேட்க, ப்ரம்ம தேவரும் மனமகிழ்ந்து, மைந்தா, மானிடர்களின் நன்மைக்காக நீ கேட்ட இந்த ஏகாதசி விரத மகிமை பற்றி கூறுகிறேன் கேள், என்று சொல்லி விளக்குகிறார். 
முன்னர், சத்ய யுகத்தில்,  சூர்ய குலத்தில் தோன்றிய "மந்ததா" எனும் அரசர்களில் சிறந்த, மிகுந்த நேர்மையுடன் கூடிய, வேத நெறிகளை முற்றிலும் கடைபிடிக்கக் கூடிய அரசன் ஒருவன் இருந்தான். அவனது ஆட்சி முறை நேர்மையாகவும், வேத நெறிகள் படி நடந்ததாலும், அவனது நகரம் மிகவும் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருந்தது. மக்கள் செல்வச் செழிப்புடன் இருந்தனர். மன்னரது கஜானாவில், நேர்மையான முறையில் வரி செலுத்திய பொன், பொருள்கள் மட்டுமே இருந்தது. 

அவ்வாறு இருந்த சூழ்நிலையில், என்னவென்றே தெரியாத காரணத்தால், அந்த நகரில் சிறிது சிறிதாக பஞ்சம் ஏற்பட ஆரம்பித்தது. மும்மாரி பொழிந்த அந்த நகரத்தில், தொடர்ந்து மூன்று வருடங்களாக மழை பொழியாத அளவு நிலைமை தலைகீழாய் மாறியது. வானம் பொய்த்ததால், பூமி வறண்டது. தானியங்கள் உற்பத்தி குறைந்தது.  மன்னரும் பல்வேறு ஆலோசனைகள் செய்து மந்திரி பெருமக்களுடன் விவாதித்து செய்த நடவடிக்கைகள் பலன் அளிக்காமல் போயிற்று. மக்கள் பஞ்சத்தில் வாட ஆரம்பித்தனர், இதனால், மன்னர் மந்ததா மக்களை நினைத்து மிகுந்த கவலை அடையும் சூழ்நிலை உண்டானது. 

மன்னரும், சிறந்த பக்திமான் என்பதால், அவரது தியானத்தின் மூலம் தான் இழைத்த தவறு பற்றி அறிய முற்பட்ட போது, தன் மேல் எந்த பிழையும் அல்லது பாவமும் இல்லை என்று மட்டுமே உணர முடிந்ததே தவிர சரியான காரணம் புலப்படவில்லை. இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அரண்மனைக்கு வேதம் ஓதும் அந்தணர்கள் ஒரு குழுவாக வந்தனர். அவர்கள், மன்னருக்கு தங்களது மரியாதையை செலுத்தி விட்டு, மன்னரிடம் தங்களது குறையை தெரிவிக்க  ஆரம்பித்தனர்.  மன்னவா, நாட்டில் பஞ்சம் மிக அதிகமாக உள்ளதாலும், குடிக்கக் கூட நீர் இல்லாத சூழ்நிலை நோக்கி நமது நகர் போய்க் கொண்டிருப்பதாலும், நாங்கள் செய்யவேண்டிய நித்ய ஹோமங்கள் செய்து தேவர்களுக்கு செலுத்த வேண்டிய அவிர்பாகத்தை (தானியங்கள் மற்றும் நெய்யுடன் கூடிய ஹோமத்தில் இடப்படும் ஆகுதி) எங்களால் வழங்க இயலவில்லை. இது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் மற்றும் முக்கியமாக நாட்டை ஆளும் மன்னருக்கும் நல்லதல்ல என்றனர்.

மேலும் அந்தணர்கள் கூறுகையில்; மன்னவா, நீரை வேதங்களில் 'நாரா' என்று ஒரு சொல் மூலமும் அழைப்பதுண்டு. நீரிலேயே ஸயனித்திருப்பதால், பகவான் விஷ்ணுவை "நாரா யணன்" என்று கூறுகின்றோம். இந்த உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களுக்கும், ஜீவ ராசிகளுக்கும் மிக முக்கிய தேவையே நீர் தான்.   நீரின்றி மூன்று பொருள்கள் இல்லையென்றே சொல்லலாம். முத்துக்கள், மனிதர்கள் மற்றும் தானியங்கள். ஆகவே, மன்னவா, ஒரு தேசத்தில் நீர் இன்றி எந்த விஷயமும் நடைபெறாது, மேலும் ஆட்சி புரியும் மன்னரின் தன்மை பொறுத்தே தேசம் வளம் பெறும். தாங்கள் நல்ல நீதிமானாக இருந்தும் இவ்வாறு பஞ்சம் தேசத்தை பாடாய் படுத்துகிறது என்றால், வேறு என்ன காரணம் என்று கண்டறிய  முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.   

மன்னர் மந்ததா, ஏற்கனவே வேதங்களை மதித்து நடக்கக்கூடியவர் என்பதாலும், அந்தணர்களின் கூற்றில் உள்ள உண்மையை உளமார உணர்ந்ததாலும், அந்தணர்களிடம், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே, விரைவில் இதற்கு ஒரு தீர்வு காண்கிறேன் என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தார். பின்னர், தனது மந்திரி பிரதானிகளுடன் மற்றும் சில படை வீரர்களையும் அழைத்துக்கொண்டு நகரின் அருகில் உள்ள வனத்திற்கு சென்றார். அங்கு ஏதாவது ஒரு முனிவர் தென்பட்டால் அவரிடம் தனது நிலையை எடுத்துக்கூறி விடை காணலாம் என்று நினைத்து கானகம் முழுவதும் சுற்றித்திரிந்தார். 

அவரது எண்ணம் வீண் போகவில்லை. ஆம், ப்ரம்ம தேவரின் புதல்வர்களில் ஒருவரானவரும், சப்த ரிஷிகளில் ஒருவருமான 'ஆங்கிரஸ' மகரிஷியின் தியானக்குடில், மன்னரின் பார்வையில் பட்டது. ஆங்கிரஸ மகரிஷி மஹா தேஜஸ்வரூபியாக இருந்தார். அந்த இடத்தில் இருந்த அனைத்து அசையும் மற்றும் அசையா வஸ்துக்களும் அவரது எண்ண ஓட்டத்திற்கேற்ப இயங்கிக் கொண்டிருப்பதை மன்னர் மந்ததாவால் உணர முடிந்தது . 

மன்னர் மந்ததா, உடனே மகரிஷி காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அவரது ஆசியை வேண்டினார். மகரிஷியும், மன்னருக்கு ஆசி வழங்கி, நாட்டு நலனை விசாரித்தார். 
அவற்றை முறையே குறிப்பிடும்போது;
மன்னரின் நலம், மந்திரி பிரதானிகளின் நலன், மன்னரது கருவூல செழிப்பு, மன்னரின் படை பலம், மன்னரின் உடனிருப்போர் நலம், தேசத்தில் உள்ள அந்தணர்களின் நலம் மற்றும் தேசத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேத, யாகங்கள் ஆகியவற்றை மகரிஷி விசாரித்து அறிந்தார். 

அதன் பின்பு, மன்னரிடம் இவ்வளவு தூரம் வரக்காரணம் என்ன என்று வினவினார் மகரிஷி. ? மன்னரும், ஏழு நலன்களைப் பற்றி தெரிவித்த பிறகு, தேசத்தில் நிலவும் கடும் நீர் வறட்சி அதனால் ஏற்பட்ட தானியங்கள் பஞ்சம் பற்றி கூறி அதற்கான காரணம் என்ன என்று மகரிஷியின் ஞான திருஷ்டி மூலம் அறிந்து கூறுமாறு வேண்டுகிறார், மன்னர். 

மகரிஷி கூறிய மார்க்கம் என்ன ?

மகரிஷியும், மன்னரின் வேண்டுகோளை ஏற்று, தனது ஞான திருஷ்டி மூலம் பஞ்சத்திற்கான காரணத்தை கண்டறிந்து மன்னரிடம் கூறுகிறார்; மந்ததா, இந்த சத்ய யுகத்தில், அவரவர் குலத்திற்கு உரிய கடமையை மட்டும் உரிய முறையில் ஆற்ற வேண்டும், ஆனால், உனது தேசத்தில் முறையான வேத முறைக் கல்வி இன்றியும், யாகங்களுக்கு உரிய முறையில் மரியாதை அளிக்காமலும், தேவர்களுக்கு உரிய யாக அவிர்பாகத்தை முறைப்பட செய்யாமலும், சூத்திர குலத்தில் இருந்த ஒருவன் தொடர்ந்து யாகங்களை பிறர் அறியாவண்ணம் செய்து வந்துள்ளான். அதன் விளைவாகவே உனது தேசத்தில் மழை பொய்த்துள்ளது என்றும் கூறினார். மேலும், தொடர்ந்து வேண்டுமென்றே, தவறு என்று தெரிந்தும் இவ்வாறு செய்த காரணத்தால் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். 
(Editors Note: இங்கு சத்ய யுகத்தில் அந்தந்த குல தர்மத்தினை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றே சொல்லப் பட்டுள்ளது. மேலும் முறையான வேதநெறிக்கல்வியின்றி செய்யப்பட்ட தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் கால சூழ்நிலையில் சொல்வதென்றால், நன்றாக போர் பயிற்சி பெற்ற ராணுவ வீரர் ஒருவர் செய்த இருதய மாற்று சிகிச்சை போல என்று எடுத்துக் கொள்ளலாம். "வர்ணாஸ்ரம தர்மம்" பற்றிய புரிதலோடு இந்தக் கருத்தினை அணுகினால் மட்டுமே இதன் உண்மையான அர்த்தம் விளங்கும்.)

மகரிஷியின் வாக்கினைக் கேட்ட மன்னன், அவரிடம் பணிந்து; தயை கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டும், எமது தேசத்தின் பிரஜை தெரிந்தே தவறு செய்திருப்பினும், அவனுக்கு மரண தண்டனை வழங்க எனது மனம் ஒப்புக் கொள்ளவில்லை, ஆகவே இதற்கு வேறு ஏதாவது ஒரு பிராயச்சித்தம் கூறுங்கள் சுவாமி என்று மனமுருகி வேண்டினார். 

மகரிஷியும், மன்னரின் மனதை எண்ணி மகிழ்ந்து, மந்ததா, உனது தேசத்தின் பஞ்சம் தீர மக்கள் அனைவரும் செல்வச்செழிப்போடு வாழ, ஆஷாட மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியன்று உமது தேசம் முழுவதும் உள்ள அனைவரும் சேர்ந்து, முழு மனதுடன், ஏகாதசி விரதம் இருந்து பகவான் விஷ்ணுவை ப்ரார்த்தனை செய்யுங்கள். உமது தேசத்தில் தேவையான மழை பொழிந்து, மக்கள் அனைவருக்கும் தேவையான தானியங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று கூறி வாழ்த்தி அருளினார். 

மகரிஷியின் இந்த வாக்கினை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு அவருக்கு மீண்டும் தனது பணிவான நமஸ்காரத்தினை தெரிவித்து விட்டு  மன்னரும் தனது தேசம் சென்றார். பின்னர் தனது தேசத்தில், அந்தணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் அனைவருக்கும் ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசி விரதம் இருக்க உத்தரவிட்டு தானும் விரதத்தினை சிரத்தையுடன் மேற்கொண்டார்.  

தேச நலனிற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து இருந்த விரதம் அவர்களுக்கு மழையாகப்  பொழிந்து கை மேல் பலன் கொடுத்தது. அதன் பின்னர் தேசம் மீண்டும் செழிப்புற்றது.
இவ்வாறு, நாரத முனியிடம் ஸயன ஏகாதசி பற்றி எடுத்துக்கூறிய ப்ரம்ம தேவர், அனைவரும் கண்டிப்பாக இந்த ஏகாதசி விரதம் இருந்து அனைத்து வளங்களும் பெற்று அதன் பின்னர் முக்தி அடையலாம் என்று கூறினார். 

இதனை, யுதிர்ஷ்ட மஹாராஜாவிடம்  கூறிய ஸ்ரீ கிருஷ்ணர்; 
எனதருமை யுதிர்ஷ்ட்ரா, மிகவும் சக்தி வாய்ந்த பத்ம ஏகாதசி விரதம் இருந்து ஒருவர் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு வளமான வாழ்வை அடையலாம், என்றார்.  மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகையில், பாண்டவர்களே, என்னை மகிழ்விக்கும் இந்த ஏகாதசி "தேவ ஸயனி ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது, இந்த ஏகாதசி விரதக் கதையினைப் படிப்பவர்களும், கேட்பவர்களும் பிறருக்கு எடுத்துக் கூறுபவர்களும் மிகுந்த புண்யத்தினை பெற்று இக வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று பின்னர் பர வாழ்வில் முக்தி அடைகின்றனர் என்று கூறினார். 

ஓ, அரசர்களில் சிங்கம் போன்ற யுதிஷ்டிரா, முக்தி பெற விரும்பும் ஒருவர், சாதுர்மாஸ்ய விரதத்தினை கடைபிடிக்க வேண்டும், அதனை இந்த தேவ ஸயனி ஏகாதசி தினத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறி அருளினார் ஸ்ரீ கிருஷ்ண பகவான். 

பகவான் ஸ்ரீ விஷ்ணு ஸயனிக்கும் காலமாக கருதப்படும் இந்தக்கால கட்டத்தில் அனுஷ்டிக்கப்படும் விரதமானது  "சாதுர்மாஸ்ய விரதம்" என்று அழைக்கப்படுகின்றது. நான்கு-ஐந்து மாதங்கள் தொடரும் இந்த ஸயனம் 'கார்த்திகா' மாதம் "உத்தன்ன ஏகாதசி" வரை தொடர்கிறது. இந்த வருட (2020) காலக்கணக்கீட்டின் படி சொல்வதென்றால், 1-ஜூலை-2020 முதல் 25-நவம்பர்-2020 வரை. இந்த காலக் கட்டத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் முடிந்த வரை தள்ளி வைக்கப்படுகின்றது. 

இவ்வாறு "தேவஸயனி ஏகாதசி" விரத மகிமை பற்றி  "பவிஷ்ய  உத்தர  புராணம்" விளக்குகின்றது.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'தேவ ஸயன ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

No comments:

Post a Comment