Saturday, 16 January 2021

முன்னோர் செய்த பாவங்களை தீர்க்கும் இந்திர ஏகாதசி...

முன்னோர் செய்த பாவங்களை, நாம் தீர்க்க வழி செய்யும் இந்திர ஏகாதசி... 


நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் ஏகாதசி விரதம் என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட. 

'அஸ்வினி' (Aswini) மாதம், (August / September)  தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "இந்திர ஏகாதசி" (அ) "அஸ்வினி கிருஷ்ண பட்ச  ஏகாதசி" (Indira Ekadasi)  என்று  அழைக்கப்  படுகின்றது. 

ஒவ்வொரு ஏகாதசியின் பெருமைகளையும், அதன் புண்ணியங்களையும் விவரிக்கும் "பிரம்ம வைவர்த்த புராணத்தில்" இருந்து இந்திர ஏகாதசிக்கு உண்டான மகிமையை பார்ப்போம்...

ஸ்ரீ கிருஷ்ணருக்கும், மஹாராஜா யுதிஷ்டிரருக்கும் இடையில் நடைபெறும் சம்பாஷணையில், யுதிஷ்டிரர் அஸ்வினி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரக்கூடிய ஏகாதசி பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விளக்கமாகக் கூறும் படி ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்..

அதற்கு, ஸ்ரீ கிருஷ்ணர், மஹாராஜா யுதிஷ்டிரரே, இந்த ஏகாதசி "இந்திர ஏகாதசி" என்று அழைக்கப் படுகிறது. மேலும், இந்த ஏகாதசி விரதத்தை ஒருவர் கடைபிடிப்பதன் மூலம், அவரது முன்னோர்கள் செய்த பாவத்திலிருந்து அவர்களை விடுவிக்க கூடிய வல்லமையை தர வல்லது என்று கூறி மேலும் விளக்குகிறார்...

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...

சத்யயுகத்தில், "இந்திரசேனா" என்ற பெரும்புகழ் பெற்ற அரசர் "மஹிஷ்மதி-புரி" என்ற பகுதியை அரசாட்சி புரிந்து வந்தார். அவர் நீதியை பின்பற்றுவதிலும், பகவான் விஷ்ணுவை துதிப்பதிலும், நல்லாட்சி வழங்குவதிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இதனால், அவரது ஆட்சியில் பொன், பொருள் மற்றும் அனைத்து செல்வங்களும் செழிப்பாக இருந்தது.


ஒருநாள் அவர் அரண்மனையில் வீற்றிருக்கும் பொழுது, "நாரத முனிவர்" அவரது அரண்மனைக்கு வந்தார். அவரைக் கண்டதும், இந்திரசேனா தனது இருக்கையில் இருந்து தானே எழுந்து சென்று அவரை இருகரம் கூப்பி வரவேற்று உபசரித்து, அவருக்கு சகல மரியாதைகளையும் வழங்கி ஆசனத்தில் அமர வைத்தார். 

பின்னர் நாரத முனி, ராஜ்யத்தின் ஏழு அங்கங்கள் நலமாக உள்ளதா என்று நலம் விசாரிக்கிறார்... 

அதென்ன ஏழு அங்கங்கள் ?
மன்னரின் உடல் நலன். 
மன்னரது மந்திரி பிரதானிகளின் நலன்.
ராஜ்யத்தின் கருவூல நலன்.
ராணுவப் படைகளின் நலன்.
மன்னரது கூட்டாளிகளின் நலன். 
ராஜ்யத்தில் உள்ள ப்ராமணர்களது நலன்.
மற்றும்,
ராஜ்யத்தை பாதுகாப்பதற்காக  தனது உயிர் அல்லது உடமைகளை தியாகங்கள் செய்தவர்களது குடும்ப நலன். 

அதன் பின்னர், மன்னரிடம் பகவான் சிந்தனையுடன் ஆட்சி நடத்தப்படுகிறதா? என்று நலம் விசாரிக்கிறார் நாரத முனி. 
இவை அனைத்திற்கும், ஆம் மிக்க நலமுடன் நடைபெறுகிறது என்று புன்னகையுடன் பதில் கூறிய மன்னர் இந்திரசேனா, மேலும் கூறுகையில், நாரத முனி அவர்களே, இன்று தங்களது வருகையால் எங்களது நாடும், நாட்டு மக்களும் மேலும் பெரும் பாக்யம் பெற்றனர் என்று பெரு மகிழ்ச்சியுடன் கூறி அவரை உபசரிக்கிறார். 

இந்த இடத்தில், இந்த 'சிறியவன்', சிந்தையில் தோன்றிய எண்ணம்...
ஒரு நாடு நலம் பெற, ஒரு அரசன் ஆட்சி புரியும் பொழுது கவனிக்கப்பட வேண்டிய அல்லது பாதுகாக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏழு. மேலும் பகவான் சிந்தனையுடன் கூடிய வகையில் அந்த ஆட்சி இருக்க வேண்டும். இது யுகம், யுகமாக நமக்கு சொல்லப்பட்டு வந்திருக்கின்றது. இதனை நாட்டின் பிரஜைகளாகிய நாமும் நமது சிந்தையில் தெளிவாகக் கொண்டு, இந்த கலியுகத்தில் அவ்வாறு தெய்வ சிந்தனையுடன் ஆட்சிப் பொறுப்பினை நடத்தும் நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இது மிக, மிக முக்கியம்.   
இங்கு அரசியல் பேசவில்லை. புராணத்தில் உள்ள கருத்துக்களை தற்போதைய நடைமுறையில் நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்...

சரி மீண்டும், புராணத்தினுள் புகுவோம்...

அதன் பின்னர், மன்னர் இந்திரசேனா, நாரத முனியிடம், அவர் வருகை புரிந்த நோக்கத்தை கேட்கிறார். 

இந்திரசேனா-வின் வரவேற்பில் உளம் மகிழ்ந்த நாரத முனி, இவ்வாறு கூறலானார்... ஓ, அரசர்களில் சிறந்த அரசனே, நான் பிரம்ம லோகத்தில் இருந்து யமலோகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு, யமராஜர் எம்மை வரவேற்று ஆசனம் அளித்து உபசரித்தார். அப்பொழுது உனது தந்தையார் அங்கு "யமலோகத்தில்" இருக்க கண்டேன். அவர், பூலோக வாழ்வில் மிகவும் பக்தி, சிரத்தையுடன் இருந்திருந்த போதிலும் ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டிக்காமலும், விரதத்தை முன்கூட்டியே முடித்த காரணத்தாலும் அவர் "வைகுண்டம்" செல்வதற்கு பதில் "யம லோகத்தில்" வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.   

இந்த இடத்தில், மற்றுமொரு விஷயமும் நாம் புரிந்து கொள்ள வேண்டும், கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள படி, நமது பாவ-புண்யம் காரணமாக ஒரு ஆன்மா யமலோகம் சென்று விட்டால், அந்த இடத்தில் அனுபவிக்கும் வேதனைகள் காரணமாக அதன் பின்னர் அங்கிருந்த படியே முழு மனதுடன் பக்தி செய்யும் எண்ணம் வராது. அதனால், அவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்காக (அந்த ஆன்மாவிற்காக) நாம் ப்ரார்த்தனை செய்வதன் மூலம் அவரை மீண்டும் வைகுண்டம்  சென்றடைய முயற்சி செய்யலாம். குறைந்த பட்சம் அவரது பாவங்கள் குறைவதற்காக  பூலோகத்தில் வாழும் நாம் செய்யும் முயற்சி இது என சொல்லலாம். 
இப்பொழுதும் பலர் தொடர்ந்து முன்னோர்களுக்காக 'தர்ப்பணம்' (அ) 'திதி கொடுப்பது' என்று செய்து வருவதை இதற்கு நிகரான உதாரணமாக சொல்லலாம்... 

மீண்டும் புராணத்தினுள் புகுவோம்...
உன் தந்தை, இதில் இருந்து மீள ஒரு உபாயத்தையும் கூறினார், அஸ்வினி மாத கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய "இந்திர ஏகாதசி" விரதத்தை நீயும், உனது குடும்பத்தாரும் முறையாக அனுஷ்டித்து அதன் முழு பலனையும்  அவருக்கு தானமாக வழங்க முடியும். அதன் மூலம் அவர் "யம லோகத்தில்" இருந்து விஷ்ணுவின் பாதத்தில் உள்ள "வைகுண்டம்" சென்று மோட்சத்தை அடைவார், என்று நாரத முனி இந்திரசேனா-விடம் கூறினார்.

இதனை, மிகவும் சிரத்தையாக கேட்டுக்கொண்ட அரசர் இந்திரசேனா, நாரத முனிவரிடம், "இந்திர ஏகாதசி" விரதம் அனுஷ்டிக்கும் முறையை பற்றி தெளிவாகக் கூறுமாறு வேண்டினார்...

நாரத முனி கூறிய விரத முறை என்ன ?

நாரத முனியும் மகிழ்ந்து, 
ஓ, மன்னா, "இந்திர ஏகாதசிக்கு முதல் நாள் (தசமி திதி) அன்று ஒருவேளை மட்டும் உணவு அருந்தி அன்று முழுவதும் பகவான் விஷ்ணுவை நாமஜெபம் செய்து அன்று இரவு தரையில் படுத்து உறங்கி, ஏகாதசி அன்று முழுவதும் எந்த உணவும் எடுத்துக்கொள்ளாமல் உபவாஸம் இருந்து விஷ்ணு நாமாவை ஜெபித்துக்கொண்டு இருந்து விட்டு, அதற்கு அடுத்த நாள் (துவாதசி திதி) அன்று பிராமணர்களுக்கு உணவளித்து விட்டு அதன் பின்னர் நீயும், உனது குடும்பத்தாரும் உண்டு உபவாஸத்தை நிறைவு செய்து கொள்ளலாம்". அதன் பின்னர் உங்கள் அனைவரது புண்ய பலனை உனது தந்தைக்கு தானம் செய்வதன் மூலம், அவர் 'வைகுண்ட பிராப்தி'  பெறுவார் என்று கூறினார். 

இதனைக் கேட்ட இந்திரசேனா, மிகவும் மகிழ்வுற்று அவ்வாறே செய்வதாக உறுதி அளித்தார். உடனே, நாரத முனி, மன்னரை ஆசிர்வதித்து விட்டு அந்த இடத்தில் இருந்து மறைந்து விட்டார்.

மன்னரும், அவர் மட்டுமல்லாது, மன்னரது புத்திரர்கள் மற்றும் அவரது அரண்மனை ஊழியர்கள் உட்பட அனைவரும் "இந்திர ஏகாதசி" விரதத்தை அனுஷ்டித்தனர்.  அனைவரும் அந்த பலனை இந்திரசேனனின் தந்தைக்கு தானம் அளித்தனர். இதன் மூலம், அவரது ஆன்மாவும், யம லோகத்தில் இருந்து பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பரமபதம் சென்று அடைந்தது...

அதன் பின்னர், பல வருடங்கள் மன்னர் இந்திரசேனன் நல்லாட்சி புரிந்து அவரது மறைவுக்கு பின் நேரடியாக "வைகுண்டம்" சென்று சேர்ந்தார்... 

இவ்வாறு, ஸ்ரீ கிருஷ்ணர், "இந்திர ஏகாதசி" விரத மகிமையை பற்றி மஹாராஜா யுதிஷ்டிரரிடம்  எடுத்து கூறினார்.

மேலும், இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களும், இந்த புண்ய கதையை கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்து சொல்பவர்களும் மிகுந்த புண்யத்தை அடைவார்கள் என்று "ப்ரம்ம வைவர்த்த புராணம்" எடுத்துரைக்கின்றது...

ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

No comments:

Post a Comment