Saturday, 16 January 2021

ஸ்ரீ இராம பிரானுக்கே வெற்றியை அருளிய விஜய ஏகாதசி...

விஜய ஏகாதசி - முறை மற்றும் மகிமை ...

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 

'மக / பல்குண' மாதம், (February/March)  தேய்  பிறையில்(கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "விஜய ஏகாதசி" (Vijaya Ekadasi) என்று   அழைக்கப் படுகின்றது.  

விஜய ஏகாதசி பற்றி 'ஸ்காந்த புராண' விளக்கம்: 
நாரத முனி, ப்ரம்ம தேவரிடம், ஓ தேவர்களில் சிறந்தவரே, பல்குண  மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் மகிமை பற்றி விவரியுங்கள் என்று கேட்கிறார். 

ப்ரம்ம தேவர் கூறுகிறார், ஓ நாரதா, 
ஸ்ரீ இராம பிரானுக்கே போரில் வெற்றியை தேடி தந்த, அதன் பெயரிலேயே அதன் மகிமையை உணர்த்தும் இந்த ஏகாதசி (விஜய என்றால் வெற்றி என்று ஒரு பொருள் உண்டு)  ,'விஜய ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. அதனைப் பற்றி விரிவாக கூறுகிறேன் கேள் என்று ப்ரம்ம தேவர் கூறியதை, நாம் இங்கு விவரிக்கிறோம்.

தனது தாயின் உத்தரவை ஏற்று ஸ்ரீ இராமபிரான், சீதா தேவியுடனும், தம்பி லக்ஷ்மணருடனும்  14 ஆண்டுகள் வனவாசம் சென்ற பொழுது, சீதா தேவியை, அரக்கர் குல இராவணன் கடத்தி சென்ற பின்னர், சீதா தேவியை மீட்கும் பொருட்டு போர் புரிய வேண்டி இலங்கை  நோக்கி பயணிக்க, தனது அனைத்து வானர சேனைகளுடன் சமுத்திரத்தை கடப்பதற்கு வழி தேடி தவித்த பொழுது, லக்ஷ்மணரின் யோசனையின் படி அருகில் இருந்த மஹா தபஸ்வியான 'பக்தால்ப்ய' முனிவரின் ஆசிரமத்திற்கு சென்று அவரின் பாதங்களை வணங்கி,  தமக்கு ஒரு உபாயம் கூறுமாறு வேண்டுகிறார்.

முனிவருக்கோ, வந்திருப்பது பாற்கடலில் வீற்றிருக்கும் அந்த பரந்தாமன் தான் என்று தெளிவாகத் தெரியும். இருப்பினும், மானிட அவதாரத்தில் இருக்கும் ஸ்ரீ இராமபிரானிடம், புன்னகையுடன் உபாயத்தை கூறுகிறார்.


ஓ, ஸ்ரீ ராமா, இந்த சமுத்திரத்தை கடப்பதற்கு மட்டும் அல்ல அதனோடு சேர்ந்து போரில் வெற்றி பெறவும், அனைத்து உபாயங்களும் சிந்தையில் தோன்றிட, நீயும் மற்றும் அனைத்து படை வீரர்களும்  ஒரு முக்கியமான விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி விளக்குகிறார்...

இந்த பல்குண மாதத்தில் தேய்பிறை திதியில் வரக்கூடிய ஏகாதசி திதியில், ஒரு பொன் அல்லது வெள்ளி அல்லது செம்பு குடத்தில் இது எதுவும் இல்லாதபொழுது ஒரு மண் குடத்தில் தூய நீரை நிரப்பி அதில் மாவிலை நிரப்பி, தேங்காயும் வைத்து  (பூர்ண கும்பம் போன்று) பூக்கள், மாலை சாற்றி, சந்தணம்,குங்குமம் இட்டு, நறுமண புகை இட்டு (பத்தி) அதற்கு கீழாக ஏழுவகை தானியங்களை நிரப்பி அதில் பூர்ண கும்பத்தை வைத்து, மாதுளம்பழத்தை (Pomegranate) பூஜையில்  சமர்பித்து, தங்கத்தில் ஆன பகவானின் மூர்த்தியை வைத்து (தற்பொழுது நாம் பெருமாளின் படத்தினை வைத்து பூஜிக்கலாம்)  அன்று முழுவதும் எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து பூஜை செய்ய வேண்டும். மேலும் ஏகாதசி அன்று இரவும் உறங்காமல் இருந்து, பகவான் விஷ்ணுவின் நாமத்தை பாராயணம் செய்து அடுத்த நாள் துவாதசி அன்று காலையில் குளித்த பின்னர், அந்த பூர்ண கும்பத்தில் உள்ள நீரை ஆறு, கடல் அல்லது குளங்களில் (நீர்நிலைகளில்) சேர்த்துவிட வேண்டும்.  அதன் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட ஏழு வகை தானியங்கள், தேங்காய், மாதுளை ஆகிய அனைத்தையும் ஒரு அந்தணருக்கு தட்சணையுடன் சேர்த்து தானம் செய்து அவருக்கு உணவையும் அளித்து அதன் பின்னர், ஓ ராமா நீயும் உனது சேனைகளும் உண்டு விரதத்தை பூர்த்தி செய்வதன் மூலம், இந்த சமுத்திரத்தை கடக்கும் உபாயமும் கிட்டும், அதனோடு போரில் வெல்லும் வாய்ப்பும் கிட்டும் என்று கூறி ஆசி வழங்கினார். 

ஸ்ரீ இராமபிரான்,
மஹா தபஸ்வியான 'பக்தால்ப்ய' முனிவரிடம் மீண்டும் அவரது பாதங்களை நமஸ்கரித்து ஆசி வாங்கி, மனதார  தமது நன்றியை தெரிவித்துக் கொண்டு கிளம்புகிறார். பின்னர் அவர் கூறியபடியே, இந்த 'விஜய ஏகாதசி' விரதத்தினை அவரும் மற்றும் அனைத்து வானரப்படைகளும் கடைபிடித்து, சமுத்திரத்தை கடக்க பாலத்தினை கட்டி அதன் பின்னர் போரில் வெற்றியும் பெறுகிறார். 


இவ்வாறு, 'விஜய ஏகாதசி'யின் பெருமைகளைக் கூறிய  ப்ரம்ம தேவர் , மேலும் கூறுகையில், ஓ எனதருமை புத்திரனே, ஸ்ரீ இராமபிரான் இந்த விரதத்தை மிகவும் நேர்த்தியாக கடைபிடித்து, மஹா பலனை பெற்றார். அதனைப் போலவே அனைவரும் இந்த விரதத்தினை கடைபிடித்து, இக வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று பர வாழ்வில் விஷ்ணுவின் பரமபத வாயிலை அடைய முடியும். 
இந்த விரத பலனை படிப்பவர்கள் மற்றும் விரத பலனை பிறருக்கு தெரியப்படுத்துபவர்கள், என அனைவரும் 'வாஜ்பேய' யாகத்தை செய்த பலனைப் பெறுவார்கள் என்று கூறுகிறார்.   

ஆகவே, நமது வாழ்வில் வெற்றி பெற, வாழ்வில் நமக்கு இருக்கும் பெரும் தடைகளை தகர்த்தெறிய  நாம் செய்த பாவங்களை போக்கஇந்த 'விஜய ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அருகில் உள்ள பெருமாள் கோவில் சென்று பெருமாளை ஸேவிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் மற்றும் சந்தனம், பத்தி  கொண்டு  பெருமாளை வழிபடலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், மேலே நாம் கூறிய 'பூர்ண கும்பம்' வைத்து பூஜிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அந்தணருக்கு தானம் அளிக்கலாம். 
  • இவை எல்லாவற்றையுமோ அல்லது முடிந்த ஏதேனும் ஒன்றையோ செய்யலாம். இதில் எதுவுமே முடியவில்லை என்றால், இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'வாஜ்பேய யாகம்' செய்த புண்ணியம் பெறுகிறார்கள். 

No comments:

Post a Comment