Saturday 16 January 2021

உலகம் முழுக்க புகழைத்தரும் 'அபரா ஏகாதசி' விரத மகிமை ...

அபரா ஏகாதசி' விரத மகிமை ...

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 
'ஜேஷ்ட மாதம்', (May / June)  தேய்  பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "அபரா  ஏகாதசி" (Apara Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது. 

அபரா ஏகாதசி பற்றி 'பிரம்மாண்ட புராண' விளக்கம்: 
யுதிஷ்டிர மஹராஜ் ஸ்ரீ கிருஷ்ணரிடம்,  கேட்கிறார்... ஓ பரந்தாமா, வாசுதேவா,  ஜேஷ்ட மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன, அதனை உங்கள் மூலம் கேட்க விரும்புகிறோம் என்று கேட்கிறார். 

ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார்; ஓ தர்ம புத்திரனே, 
ஜேஷ்ட மாத தேய் பிறையில்  வரும் ஏகாதசி 'அபரா ஏகாதசி' என்று அழைக்கப்படும். உலக மக்களின்  நன்மைக்காக நீ கேட்ட கேள்விக்கு நான் விளக்கம் அளிக்கிறேன் கேள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். 
இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், பிரபஞ்சம் முழுவதும் புகழினை அடைவார்கள்.  மேலும், இந்த ஜென்மத்தில் அவர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த ஒரு பிராமணனைக் கொன்ற பாவம், பசுவைக் கொன்ற பாவம், சிசுவைக் (கரு) கலைத்த பாவம், பிறரது மனைவியை மோஹித்த பாவம் இவை அனைத்து பாவங்களையும் நீக்கி மோட்சத்தை தரவல்லது. அதன் மகிமையை நான்  உனக்கு கூறுகிறேன் கேள் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான்  கூறியதை நாம் இங்கு விவரிக்கின்றோம்... 
எவையெல்லாம் பாவ விஷயங்கள்:
பொய் சாட்சியம் கூறுவது மகா பாவமாகும். வியாபாரத்தில் எடையை குறைத்து (ஒரு கிலோ பொருளுக்கு 900 gm கொடுத்து ஏமாற்றுவது)  கொடுத்து விற்பதும் பாவமாகும். போலி ஜோதிடம், போலி மருத்துவம், போலி கணக்கு எழுதுபவர் ஆகிய அனைவரும் பாவத்தை சம்பாதித்து அதன் மூலம் நரகத்தை அடைவர். அவ்வாறு செய்தவர்கள், மனமார ப்ரார்த்தித்து செய்த தவறை உணர்ந்து இந்த அபரா ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால், அவர்கள் செய்த பாவங்கள் விலகி நல்ல நிலையை அடைவர்.
மேலும், பல புண்ணிய ஷேத்ரங்களுக்கு விஜயம் செய்து புண்ய விஷயங்களை செய்வதன் மூலம் கிடைக்கும் புண்ணியத்தினை இந்த அபரா ஏகாதசி விரதத்தினை கடைபிடிப்பதன் மூலம் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே எளிதாக பெற முடியும். 
எவையெல்லாம் புண்ணிய விஷயங்கள்:
1.கார்த்திகா மாதத்தில் (October/November), புஷ்கர ஷேத்திரத்தில் மூன்று வேளை நீராடுதல். 
2. மக மாதத்தில், (January/February) ப்ரயாக்ராஜ்-ல் (Allahabad) நீராடுதல்.
3. சிவராத்திரி அன்று, காசியில் சிவபெருமானுக்கு விரதம் இருந்து கைங்கர்யம் செய்தல்.  (கோவிலில் தொண்டு புரிதல்-உழவாரப்பணி என்று கூட வைத்துக்கொள்ளலாம்)
4. 'கயா'வில் முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் (திதி) செய்தல். 
5. 'வியாழன்',(Jupiter) சிம்மத்தில் இருக்கும்பொழுது, 'கெளதமி' நதிக்கரையில் நீராடுவது. (கோதாவரி-யின் ஒரு கிளை) 
6. 'வியாழன்',(Jupiter) சிம்மத்தில் இருக்கும்பொழுது, 'கேதார்நாத்' சிவ பெருமானை தரிசனம் செய்வது. 
7. 'சூரியன்', (Sun) கும்பத்தில் இருக்கும்பொழுது, 'பத்ரிநாத்' விஷ்ணு பகவானை தரிசனம் செய்வது. 
8. 'சூர்ய கிரகணத்தின்' பொழுது, குருஷேத்திரத்தில்  (Kurukshetra, Haryana) நீராடி, பின்னர் பசு, யானை மற்றும் தங்கத்தை தானமாக வழங்குவது.  

மேற்குறிப்பிட்ட, புண்ய விஷயங்களுக்கு சமமாக 'அபரா ஏகாதசி' விரத பலன் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
மிகப்பெரிய மரம் அளவுக்கு, நாம் சேர்த்து வைத்துள்ள பாவங்களை வலிமையான கோடாரி கொண்டு ஒரே அடியில் வீழ்த்தவல்ல பலனை தரவல்லது அபரா ஏகாதசி விரதம். 
ஆகவே யுதிஷ்டிரா, எவர் ஒருவர், இந்த அபரா ஏகாதசி விரதத்தை முழுமையாக, முழு நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறாரோ, அவர் இக வாழ்வில் அனைத்து இன்பங்களையும் பெற்று, பர வாழ்வில் முக்தியினைப் பெற முடியும், என்று ஸ்ரீ கிருஷ்ணர் ப்ரம்மாண்ட புராணத்தில் விவரிக்கிறார். 

இவ்வாறு, இதன் பெருமைகளை யுதிஷ்டிரனிடம்  கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் கூறுகையில், ஓ  யுதிஷ்டிரா, இந்த 'அபரா ஏகாதசி' விரத கதையினை படித்தவர்களும், கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகின்றனர். அவர்கள் 'கோ தானம்' செய்த புண்ய பலனைப்பெறுவர், என்று கூறினார். 

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'அபரா ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

No comments:

Post a Comment