இல்லத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாள் முதல் திருமணம் முடியும் வரை பலவிதமான சடங்குகள் செய்கிறோம். இந்த சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது முகூர்த்தக்கால் நடுதல் ஆகும். இதை பந்தக்கால் நடுதல் என்றும் கூறுவர். இந்த பந்தக்கால் நடும் விழா பிரம்ம முகூர்த்தம் அல்லது ஏதேனும் முகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து திருமணத்திற்கு முன்பு நடைபெறும்.
இந்த சடங்கில் தனித்தனியே மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் ஒன்று நடப்படும். இந்த பந்தக்கால் நடும் விழாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கல்யாண முருங்கை மரம் ஆகும். சில வீடுகளில் கல்யாண முருங்கைக்கு பதிலாக பால மரமும் நடுகின்றனர்.பந்தக்கால் நடும் முறை :
கல்யாண முருங்கை மரத்தில் ஒரு கிளையை வெட்டி அதில் உள்ள இலைகளை அகற்றிவிட்டு அந்த மரத்தின் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும்.
உறவினர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் உள்ள பெரியவர் அந்த மரத்தை நட வேண்டிய இடத்தில் வைத்து, பின் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும். அதனடியில் நவதானியத்தோடு நீர் மற்றும் பால் ஊற்றி மரத்திற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு மற்றும் பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பின் பந்தக்காலை நிலத்தில் ஊன்றுவர். பந்தக்கால் நட்ட பிறகு பந்தல் போடும் வேலையும் தொடர்ந்து செய்வர். பின் உறவினர்களுடன் சேர்ந்து இருவீட்டாரும் அவரவர் வீட்டில் விருந்துண்டு மகிழ்வர்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இருவீட்டாரும் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது.
பந்தக்கால் நடும் முறை வந்தது எப்படி?
முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைத்து திருமணத்திற்கும் அரசனால் செல்ல இயலாது. எனவே, அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது.
No comments:
Post a Comment