Wednesday, 3 February 2021

வில்வம்... மனஅழுத்தம் குறைக்கும்.:


வில்வம்... மனஅழுத்தம் குறைக்கும்.:

சித்த மருத்துவத்தில், பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கியமான மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. பண்டைய நாட்களில், `பழங்களின் ராஜா’ எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டவை.

வில்வம், மஹாவில்வம் என இதில் இரண்டு வகைகள் உண்டு. பெரும்பாலும், மருத்துவத்துக்கு வில்வமே பயன்படுகிறது. சர்க்கரைநோய், வயிற்றுப்போக்கு, பித்தக் கிறுகிறுப்பு, தலைசுற்றல், ஒவ்வாமை (அலர்ஜி), அஜீரணம், வயிறு உப்புசம் எனப் பல நோய்களுக்கும் வில்வம் மிகச் சிறந்த மருந்து.

வில்வம்... விசேஷம்.:
* நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy), மூக்கில் நீர்வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட நோய்களுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடித்துக்கொள்ள வேண்டும். இதில் அரை டீஸ்பூன் அளவுக்கு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், படிப்படியாக நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்பும் குறையத் தொடங்கும்.

* ஒவ்வாமையால் வரும் இரைப்பு (ஆஸ்துமா) நோய்க்கு, இரவில் ஒன்பது வில்வ இலைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஒன்றரைக் குவளைத் தண்ணீர்விட்டு வைத்திருந்து, காலையில் இலைகளை அகற்றிவிட்டு, தண்ணீரை மட்டும் குடிக்கலாம். படிப்படியாக ஒவ்வாமையைக் குறைத்து, அதனால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.

* 50 கிராம் வில்வ இலைத்தூளுடன் 10 கிராம் மிளகு சேர்த்து, நன்கு பொடி செய்து கலந்துகொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் இதில் அரை டீஸ்பூன் அளவுக்குப் பொடியை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது, ஈஸ்னோபோலியா (Eosinophilia) என்ற ஒவ்வாமையினால் வரும் நீரேற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு நல்ல பயன் அளிக்கும். இந்தப் பழக்கம் இன்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒரு பாரம்பர்ய முறையாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது.

* வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. இதன் துவர்ப்புத் தன்மையும் மலமிளக்கித் தன்மையும் பசியை உண்டாக்கும்.

* வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்கு (பெப்டிக் அல்சர்) கொடுக்கலாம். இதை நாமே வீட்டில் செய்துகொள்ளலாம். வில்வம் பழச் சதையை 100 கிராமுக்கு 200 மி.லி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி, ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சிரப் பதத்துக்கு காய்ச்சி, சிறிது தேன் கலந்துகொள்ளவும். காலையில் ஒரு டீஸ்பூன், இரவில் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

* அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும் வில்வப் பட்டையைக் கொண்டு செய்யும் வில்வாதி லேகியம் நல்மருந்து.

* சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, வில்வம் ஓர் அற்புத மூலிகை.

* வில்வ இலை, வில்வம் பழம் இரண்டும் குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்து.

* வில்வப் பட்டை, விளாப் பட்டை, நன்னாரி, சிறு பயறு, நெற்பொரி, வெல்லம் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீர்விட்டு 200 மி.லியாகக் கொதிக்கவைத்து அந்தக் கஷாயத்தைக் கொடுத்தால் வாந்தியோடு வரும் காய்ச்சல் நீங்கும்.

* வில்வ இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி, காது நோய்களுக்கு காதில்விடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

உளவியல் நோய்களில் முதலாவதான மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்னர் கூறியதுபோல் ஊறவைத்தோ, கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும். வில்வம் பழத்தின் `சிரப்’ மணப்பாகு சந்தைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, தினமும் ஓரிரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

வில்வம் சிவனுக்கு மட்டுமல்ல... நம் ஆரோக்கியத்துக்கும் விசேஷம்.

5 comments:

  1. அய்யா..! வெ.சாமி அவர்களே..! நானும் தமிழ் மருத்துவம் கூறுகிறேன்..தங்கள் ஆசியுடன். வில்வம் சர்பத் தயாரிக்கலாம்.

    வில்வம் சர்பத் :

    வாயுத்தொல்லை, வயிற்றுக்கோளாறு, உடல் சூடு நீங்கும்.

    தேவையான சரக்குகள் :

    வில்வம் இலை : 200 கி.
    எலுமிச்சம் சாறு : 50 கி.
    தேன் : 100 கி.
    சர்க்கரை : 1 கி.கி.

    செய்முறை :

    வில்வ இலைகளை நீர்விட்டுக் காய்ச்சி க௯ஷாயமாக்கி, அத்துடன் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு கலந்து, காய்ச்சி, பதத்தில் எடுத்து தேனுடன் கலந்து வடிகட்டி, பாட்டிலில் பத்திரப்படுத்தவும். அளவு : 20−30மி.லி சர்ப்பத்துடன் 150மி.லி. நீர் கலந்து பருகவும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete