Wednesday, 31 March 2021

விஷ்ணு சஹஸ்ர நாமம்".



" போர்க்களத்தில் கிடைத்த புத்திமதி. "

குருஷேத்திரப் போர்முனை.
மாலை நேரம்.
கங்கா புத்திரர் பீஷமர் அம்பு படுக்கையில் தன் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
கர்ணன் போரில் மடிந்துவிட்டான். தாய் குந்திதேவி "என் மகனே போய்விட்டாயா  "என்று உரத்த குரலில் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். கர்ணன் மனைவியும் அழுது கொண்டிருக்கிறாள். சற்று தள்ளி இன்னொரு பெண்மணியும் அழுது புலம்பி கொண்டு இருக்கிறாள். அதைக்கண்ட யுதிஷ்த்திரன் கண்ணனிடம் சென்று "அவள் யார், ஏன் அழுகிறாள்" என்று கேட்கிறான். அதற்கு கண்ணன் " இவள்தான் தர்ம தேவதை. தர்மத்தின் தலைவனான கர்ணன் மறைந்தபின் இந்த பூவுலகில் தனக்கு வேலையில்லை. அதனால் பூமியை விட்டு போவதாக சொல்லி அழுகிறாள்." என்றான்.
யுதிஷ் திரனுக்கு பயம் வந்து விட்டது. தன் நாட்டில் இனி தர்மம் இருக்காதோ? நம் சந்ததியினர் தர்மம் இல்லாத இந்த நாட்டில் எப்படி ஆட்சி செய்ய போகிறார்கள்? என்ற கவலையில் இதற்கு என்ன பரிகாரம் என்று கண்ணனை கேட்க, கண்ணனோ " என்னை கேட்பதை விட ஏதோ அங்கு அம்பு படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறாரே அந்த பீஷ்மரிடமே கேள் " என்கிறார்.
அப்போது பீஷ்மர் யுதிஷ்திரருக்கு செய்த உபதேசம்தான் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் கொண்ட  "விஷ்ணு சஹஸ்ர நாமம்".

மகாபாரதத்தின் 'அனுசாசனிக பர்வ'த்தில் 149 ஆவது அத்தியாயம் இது.' அனுஷ்டுப் ' என்ற சமஸ்கிருத யாப்பிலக்கண முறையில் 107 சுலோகங்களும், அவற்றுக்கு முன் பின்னாக 40 சுலோகங்களும் கொண்டது.
இதை இயற்றிய வேத வியாசர் விஷ்ணுவின் அம்சமாகவே கருதப் படுகிறார்.
" வியாசாய விஷ்ணு ரூபாய, வியாச ரூபாய விஷ்ணவே.. "
என்கிறது விஷ்ணு சஹஸ்ர நாமம்.

பகவத் கீதை கிருஷ்ணன் பகவான் சொன்னது. விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கிருஷ்ணன் பகவானே அருகில் இருந்து கேட்டது. அதனால் கீதையை விட விஷ்ணு ஸஹஸ்ரநாமம் மேலானது என்பர்.

இந்த உபதேசம் சத்வ குணவான் பீஷ்மரால், சத்வ குணவான் யுதிஷ்திரருக்கு போதிக்கப் பட்ட சத்வ வழிபாட்டு ஸ்தோத்திரம்.

யுதிஷ்திரன் தன் ஐயங்களை ஆறு கேள்விகளாக பீஷமரின் முன் வைத்து, எவ்வாறு தர்மத்தை மீண்டும் தழைத்து ஒங்க செய்வது என்று வினவுகிறான்.

1. இறைவன் பற்றி கூறும் எல்லா நூல்களிலும் சொல்லப்பட்டுள்ள ஒரே சிறந்த தெய்வம் எது?

2. அதை அடையும் மேலான நிலை என்ன?

3. எந்த தெய்வத்தின் குணாதிசயங்களை புகழ்ந்து பாடினால், தர்மம் தழைத்து மானிடர் நலம் எய்துவர்?

4. எந்த தெய்வத்தை அகத்திலும் புறத்திலும் வழிப்பட்டு முக்தி அடையலாம்?

5. எது எல்லா வழிபாட்டு முறைகளிலும் சிறந்த நெறி?

6. எதனை ஜபித்து மனிதன் பிறவி பெருங்கடலில் இருந்து மீளலாம்?

இந்த ஆறு கேள்விகளுக்கும் பீஷ்மர் அளித்த ஒரே விடை :

" விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை தியானித்தும், துதித்தும், வணங்கியும் பக்தி செய்தால் நாம் எல்லா துக்கங்களையும் கடக்கலாம்" என்று விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உபதேசிக்கிறார்.

1. விஷ்ணுவின் வடிவத்தை மனதில் நிறுத்து.
2. அவர் திருநாமங்களை வாயாரப் பாடு.
3. விஷ்ணுவை சிரம் தாழ்த்தி வணங்கு.

இதையே தான் ஆண்டாள்
" வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும்.. "
என்கிறாள்.

இந்த 1008 பெயர்களும் விஷ்ணுவின் அனந்த கல்யாண குணங்களை குறிக்கின்றன.

" பேரான், பேராயிரம் உடையான்' பிறங்கு சிறை வண்டு அறைகின்ற,
தாரான், தாரா வயல் சூழ்ந்த சாளகிராமம் அடை நெஞ்சே. "
என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

இறைவன் பெயர்களுக்கு அப்பாற்பட்டவன். எந்த பெயர் கொண்டும் அவனை அழைக்கலாம்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் எனப்படும் உரையை முதலில் எழுதியவர் ஆதி சங்கரர். பின்பு ' பராசர பட்டர் ' உரையும் மற்றும் மத்வ பரம்பரை சம்பந்தப்பட்ட ' சத்யசந்தயதி ' போன்ற பன்னிரண்டு உரைகளும் எழுதப் பட்டன.

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் சுலோகத்தின் முதல் பெயர் " விஸ்வம் ". நாம் பார்க்கும் இவ்வுலகம்தான் விஸ்வம். இதுவே ஆண்டவன் பெயராக அறிமுகம் ஆகிறது.

இரண்டாம் சொல் " விஷ்ணு ". விஸ்வம் என்ற உலகத்தையும் தாண்டி நிற்பதால் அவன் விஷ்ணு.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் எதிர்மாறு சொற்கள்( oxymoron) அதிகம்:
1. நிமிஷ, அனிமிஷ- கண்களை மூடிய, மூடாத.
2. நைக ரூப, பிருகத் ரூப -ஒன்றானவர், ஒன்றில்லாதவர்.

வைணவர்கள் விஷ்ணுவின் பன்னிரண்டு பெயர்களான கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா,பத்மனாபா, தாமோதரா என்பனவற்றை முறையாக உச்சரித்து கொண்டே உடலின் பன்னிரண்டு இடங்களில் திருமண் காப்பு அணிவதால் அதற்கும் ' நாமம் ' என்று பெயர் வந்தது.

இந்த கருத்தை நம்மாழ்வார் தன் திருவாய் மொழியில் :
" உயர்வற உயர் நலம் உடையவன் எவனவன்,
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்,
துயரறு சுடரடி தொழுதெழு என் மனமே"
 என்கிறார்.

'பலசுருதி' என்பது ஒரு நூலை பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள். விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி கடைசி இருபது சுலோகங்கள் கூறுகின்றன:

1. இம்மை, மறுமையிலும் கெடுதல் அண்டாது.

2. தர்மம், பொருள், காமம், வம்ச விருத்தி உண்டாகும்.

3. ஆரோக்கியம் வாய்க்கப்பெறும்.

4. ஆன்ம சுகம், பொறுமை, மன உறுதி, நினைவாற்றல், புகழ் கைகூடும்.

இந்த நிலையை தான் ஆண்டாள் :

" எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு,
உற்றமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்,
மற்றை நம் காமங்கள் மாற்று "
என்று கண்ணனை வேண்டுகிறாள்.

No comments:

Post a Comment