Monday, 7 June 2021

எந்த கிரக தோஷத்தையும் நீக்கும் அற்புத பூரி ஜெகநாதர்






puri-jegannath

பூரி ஜெகநாதர்
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம்.  இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர். இவர்களது சிலையானது மரத்தால் செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மூன்று சிலைகளும் முறையான வழிபாடுகளுடன், புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. மற்ற கோவில்களில் இல்லாத அதிசயங்கள் இந்த கோவிலில் தினம் தோறும் நடந்து வருகிறது.


 puri-jegannath

இந்த ஆலயத்தில் பறக்கப்படும் கொடியானது காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

இந்தக் கோவிலானது அமைந்துள்ள பூரி என்ற ஊரில், எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் கோவிலின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.

இந்த கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழலானது பகலில் எந்த நேரத்திலும் நம் கண்களுக்கு தெரியாது.


  

இந்தக் கோவிலில் அன்னதானத்திற்கு சமைக்கப்படும் உணவின் அளவானது தினம்தோறும் ஒரே அளவாகத்தான் சமைக்கப்படும். ஆனால் வருகின்ற பக்தர்களது எண்ணிக்கையானது ஒரு ஆயிரமாக இருந்தாலும் சரி, பத்தாயிரமாக இருந்தாலும் சரி சமைக்கப்பட்ட உணவு என்பது பத்தாமல் போனதே கிடையாது. மிச்சமாகி கீழே கொட்டப்படுவதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தில் அடுப்பின் மேலே ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு உணவு சமைக்கப்படும். இப்படி சமைக்கும்போது அடுப்பின் மேலே முதலில் வைக்கப்பட்ட பாத்திரத்தின் இருக்கும் உணவானது வேகுவதற்கு முன்பாகவே, மேலே உச்சியில் உள்ள பாத்திரத்தில் இருக்கும் உணவு வெந்துவிடும். இப்படி பல அதிசயங்களை உள்ளடக்கியதாக இன்றளவும் ஜெகநாதர் கோவில் சிறந்து விளங்கி வருகின்றது.


 puri-jegannath

தல வரலாறு
ஜரா என்ற பெயரைக்கொண்ட வேடன் ஒருவன் எய்த அம்பானது எதிர்பாராமல் கிருஷ்ணரை தாக்கியது. அந்த சமயம் கிருஷ்ணர் தன் உயிரை இழந்து மரக்கட்டை போல காட்சியளித்தார். இந்திரத்துய்மன் என்னும் அரசன் அப்போது பூரியை ஆண்டு வந்தான். அந்த அரசனின் கனவில் தோன்றிய பெருமாள் ‘பூரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு பெருமாளின் சிலையை செதுக்க வேண்டும். என்று கட்டளையிட்டார்’. இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்காக அரசன் தன் சேனைகளை கடலுக்கு அனுப்பினான். கடலில் மிதந்து வந்த ஒருபெரிய கட்டையை பத்திரமாக காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மர கட்டைக்கு சரியான பூஜைகளை நடத்தி தச்சர்களை அழைத்து, பெருமாள் சிலை செய்வதற்கு உத்தரவிட்டார். தச்சர் ஒருவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன், உளி உடைந்து விட்டது. அந்த சமயம் பெருமாளே, அரசனின் முன்பு ஒரு முதிய தச்சர் வேடத்தில் தோன்றினார். வந்திருப்பது பெருமாள் தான் என்பதை அரசனால் உணரமுடியவில்லை. வயது முதிர்ந்த அந்த தட்சர் அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், வேலை முடியும் வரை தான் வேலை செய்யும் அறையை யாரும் திறக்க கூடாது எனவும் அரசனிடம் கேட்டுக்கொண்டார். அரசரும் இதற்கு சம்மதித்தார்.


 puri-jegannath

ஒரு அறையில் 15 நாட்கள் தொடர்ந்து வேலை நடந்து வந்தது. வேலை செய்யப்படும்போது உளி சத்தமும் வெளியில் கேட்டது. அறைக்கு வெளியில் உள்ளவர்களுக்கு, அறையினுள் வேலை நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சியாக அந்த சத்தம் இருந்தது. ஆனால் அதை தொடர்ந்து மூன்று நாட்கள் சத்தமே வரவில்லை. உள்ளே என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடியாத அரசன் அந்தக் கதவினை அவசரப்பட்டு திறந்து விட்டான். இதன் மூலம் தச்சருக்கு கோவம் வந்து விட்டது. இன்னும் மூன்று நாட்கள் மீதமுள்ள காரணத்தால் சிலைகள் அரைகுறையாகவே செதுக்கப்பட்டிருந்தது.

வயது முதிர்ந்த தச்சராக இருந்த பெருமாள் மன்னனைப் பார்த்து ‘பொறுமையை கடைபிடிக்காமல் இந்த கதவை நீ திறந்து விட்டாய். இதனால் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளும் அரைகுறையாகவே தான் இருக்கும். இதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடு. இதனை காண வரும் பக்தர்கள் எதிலும் அவசரப்படக்கூடாது, பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள். என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார் அந்த முதியவர் வேடத்தில் இருந்த பெருமாள்.



தான் செய்த தவறினை உணர்ந்த மன்னன் அரைகுறையாக செதுக்கப்பட்ட ஜகந்நாதர், பலராமன், சுமித்ரா இந்த மூன்று சிலையையும் அப்படியே பிரதிஷ்டை செய்து விட்டார்.

ஆனால் இந்த இடத்தில் இந்திரத்துய்மன் மன்னனால் கட்டப்பட்ட கோவிலானது காலப்போக்கில் பாழடைந்து விட்டது. அதற்கு பின் அந்த இடத்தில் பல கோயில்கள் பலரால் கட்டப்பட்டது. ஆனாலும் அந்த கோவில்கள் எல்லாம் கடலில் மூழ்கிக் கொண்டே தான் இருந்தது. இப்போது இருக்கும் பூரி ஜெகநாதர் ஆலயமானது 1135ல் அனந்தவர்மனால் கட்ட தொடங்கப்பட்டு, 1200 ஆம் ஆண்டில் அவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் கட்டி முடிக்கப்பட்டது.



பலன்கள்
எந்த வகையான கிரக தோஷத்தை உடையவர்களாக இருந்தாலும் இந்த கோவிலில் உள்ள ஜெகநாதரை தரிசித்தால் அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பூர்வஜென்ம காலத்தில் செய்த பாவங்களும் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையினை வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருந்துவருகிறது.

செல்லும் வழி
புவனேஸ்வரத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூரி என்ற இடத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment