Thursday, 8 July 2021

எளிய முறையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி ?

எளிய முறையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி ?

வாழ்க்கையில் சந்தர்ப்பம் எப்போதாவது தான் கிடைக்கும். அதை தவற விடுபவர்கள் புத்திசாலிகள் அல்ல. சில குடும்பங்களில், துன்பம் துரத்திக் கொண்டே இருக்கும். குறிப்பாக, வாழாவெட்டியாய் வரும் பெண்கள், அங்கஹீனர்களாகப் பிறப்பவர்கள், திருமணமாகியும் நிம்மதியில்லாமல் இருக்கும் ஆண்கள், பணக்கஷ்டத்தால் அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் இருப்பவர்கள்... இதற்கெல்லாம் காரணம் என்ன என்றால், பிதுர் தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றைச் செய்யாமல் இருப்பது தான். ஒவ்வொரு அமாவாசையும், பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதப்பிறப்புகளில் பிதுர் தர்ப்பணம் செய்யலாம். இவையெல்லாம் சாத்தியமில்லாவிட்டால், தை அமாவாசை, ஆடி அமாவாசையாவது தர்ப்பணம் செய்யலாம். இதுவரை என் வாழ்க்கையில் தர்ப்பணம் செய்ததே இல்லை, அதற்கு ஏதாவது மாற்று இருக்கிறதா என்றால், அதற்கும் மாற்று வைத்திருக்கிறது சாஸ்திரம்.

புரட்டாசி மாத பவுர்ணமி துவங்கி, அமாவாசை வரையுள்ள, 15 நாட்கள் மகாளயபட்ச காலம். மகாளயம் என்றால், மொத்தமாகக் கூடுதல் என்று பொருள் கொள்ளலாம். பிதுர்கள் எனப்படும் முன்னோர்கள் இந்த, 15 நாட்களும் கூட்டமாக பூமிக்கு வந்து விடுகின்றனர். தங்களது சந்ததியர், தங்களை நினைத்துப் பார்க்கின்றனரா என சோதிக்கின்றனர். அவர்களை அந்த, 15 நாட்களும் நினைத்து தர்ப்பணம் செய்தால், அவர்கள் மகிழ்கின்றனர்.

இதற்கு அதிக செலவாகுமோ என்று எண்ணத் தேவையில்லை. வசதி படைத்தவர்கள், தகுதியுள்ள அந்தணர்களை அழைத்து, இதை சில ஆயிரங்கள் செலவழித்து செய்யலாம். மற்றவர்கள் என்ன செய்யலாம் என்றால், சில விதிமுறைகளை சாஸ்திரம் சொல்கிறது.

நதிக்கரைகளுக்கு சென்று, அந்தணர்களுக்கு தட்சணை கொடுத்து தர்ப்பணம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை தானம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை கையில் எடுத்து, தீர்த்தத்தை விட்டு கீழே விடலாம். இதெல்லாம் முடியாவிட்டால், பசுவை வலம் வந்து வணங்கலாம். அதற்கும் முடியாவிட்டால், வெட்டவெளியில் நின்று இரண்டு கைகளையும் உயரே தூக்கி, "பித்ரு தேவதைகளை வணங்க வேண்டும் என்பது என் ஆசை தான். ஆனால் முடியவில்லை. எனவே, பித்ரு தேவதைகளே... நீங்கள் எல்லாரும், நான் சிரார்த்தம் செய்ததாக எண்ணி திருப்தி அடையுங்கள்...' என்று வேண்டலாம்.

இதை விட சாஸ்திரம் நமக்கு என்ன சலுகையைத் தந்துவிட முடியும். மேற்கண்ட பரிகாரங்களுக்கு ஒரு பாக்கெட் எள் போதாதா. எள் எந்த அளவுக்கு வேண்டும் என்றால், கை கட்டை விரலில் எள்ளை ஒற்றிக்கொண்டு, அதில் தண்ணீரை விட்டு கீழே விட்டால் கூட போதும் என்கிறது சாஸ்திரம்.

மகாளயபட்சத்தின், 15 நாட்களும் இவ்வாறு செய்யலாம். முடியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தன்றாவது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

 இந்த வழிபாட்டை கடமைக்குச் செய்யாமல், சிரத்தையாக செய்தால், கிடைக்கும் பலன் என்ன தெரியுமா?

இனிமேல், நம் குடும்பங்களில் ஊனமான குழந்தைகள் பிறக்க மாட்டார்கள். இப்போது, மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை அமையும். மேலும், நம் முன்னோர்கள் பாவம் செய்து நரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அவர்களுக்கு விமோசனமாகி சொர்க்கத்தை அடைவர். அவர்களின் ஆசிர்வாதம், நம்மை மனநிம்மதியுடனும், செல்வச்செழிப்புடனும் வாழ வைக்கும்.

மகாளயபட்ச காலமான 15நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.முடியாதவர்கள் மகாளய அமாவாசைக்கு அவசியம் செய்தல் வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் செதலபதி கிராமத்தில், முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கே, ராமபிரான் பூஜித்த பிதுர்லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை மகாளயபட்ச காலத்தில் ஒரு நாளாவது சென்று தரிசித்து வாருங்கள். அங்கே தர்ப்பணம் செய்வது இன்னும் விசேஷம். திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில், கூத்தனூர் சென்று, 2 கி.மீ., தொலைவில் உள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ் பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. பிதுர் தர்ப்பணத்தின் பலன் அளவிட முடியாதது; அனுபவத்தின் மூலமே இதை உணர முடியும்.

No comments:

Post a Comment