Sunday, 7 January 2024

சந்திராஷ்டம நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் பரிகாரம்


சந்திராஷ்டம நாளில் மன உளைச்சல்.. நல்ல காரியம் செய்யலாமா? 12 ராசிக்காரர்களுக்கும் பரிகாரம்
ஒரு சில நாட்களில் காரணமே இல்லாமல் எரிச்சலும் கோபமும் வரும். காலண்டரை பார்த்தால் அன்றைய தினம் சந்திராஷ்டமம் என்று இருக்கும்? சந்திராஷ்டம நாட்களில் நல்ல காரியம் செய்யலாமா? எந்த ராசிக்கார்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஒருசிலருக்கு மாதத்தில் சில நாட்கள் மன உளைச்சலும் கோபமும் வரும். எதற்கெடுத்தாலும் எரிச்சலாக பேசி பதில் சொல்வார்கள். அன்றைய தினம் காலண்டரைப்பார்த்தால் அவர்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் என்று இருக்கும். ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்று ஜோதிடத்தில் கூறுகின்றனர்.


What is Chandrashtamam: Chandrashtama Palangal and Effects remedies
மனோகாரகன் சந்திரன் எட்டாம் இடத்தில் மறையும் போது மன உளைச்சல் ஏற்படுவது இயற்கைத்தானே. சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம' காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.

சந்திரனை மனநிலைக்கு உரியவன் என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்றவை ஏற்படும் எனவேதான் சந்திராஷ்டம நாட்களில் பெரும்பாலும் மவுன விரதம் இருப்பது நல்லது என்கின்றனர் ஜோதிடர்கள்.


மனோகாரகனான சந்திரன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நீசம் அடைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் வரும்போது மேஷ ராசிக்காரர்களுக்கு எண்ண அதிர்வுகளில் சில மாற்றம் ஏற்படுகிறது. பொதுவாகவே கால புருஷனுக்கு எட்டாம் வீட்டை எந்த கிரகம் கடந்தாலும் அது போகிர போக்கில் சில கெடுதல்களை செய்துவிட்டுதான் போகிறது.

அந்த விதத்தில் சந்திரன் மனோகாரகன் மற்றும் பயண காரகன் என்பதால் மனதிலும் பிரயாணத்திலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் சந்திரன் எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.
பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன.


சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

இன்றைய தினம் சந்திரன் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். மேஷ ராசிக்கு எட்டாவது விருச்சிகம். எனவே இன்றைய தினம் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. சந்திரன் சஞ்சரிக்கும் ராசிக்காரர்களும், சந்திராஷ்டம ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

சந்திராஷ்டம நாளில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். அதே போல வெண்மை நிற பொருட்கள் பாதிப்படைவது. அடுப்பில் வைத்த பால் பொங்குவது. உணவு வீணாவது என இயற்கையாக நடப்பது சந்திராஷ்டம தோஷத்தை போக்கிவிடும்.

சந்திராஷ்டம நாட்களில் மேஷம் விருச்சிக ராசியினர் சந்திராஷ்டம நாளில் முருகப்பெருமானை வழிபடலாம். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் மகாலட்சுமியை வழிபடலாம். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் பெருமாளை வழிபடலாம். கடக ராசிக்காரர்கள் அம்மனை வழிபடலாம். சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானையும் சூரியனையும் வழிபடலாம். தனுசு மீனம் ராசிக்காரர்கள் சந்திராஷ்டம நாளில் பைரவரை வழிபடலாம். மகரம், கும்ப ராசிக்காரர்கள் சந்திராஷ்டம நாளில் ஆஞ்சநேயரை வழிபடலாம்.


No comments:

Post a Comment