Saturday 13 April 2024

பூனை குறுக்கே சென்றால்...




பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா? சகுனம் பார்த்து பார்த்து நிறைய நல்ல விஷயங்களை இழந்துவிட்டீர்களா?


.


What is the story behind cat running across or cat sagunam
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போலத்தான் நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் இருக்கிறது. நாய் ஊளையிட்டால் ஆகாது, நரி முகத்தில் முழித்தால் நல்லது என்றெல்லாம் சொலவடை உள்ளது.




அப்படிப்பார்த்தால் இன்று எல்லார் வீட்டு படுக்கை அறையிலும் நாய்க்கு பதிலாக நரிகள்தான் இருந்திருக்க வேண்டும். அது போல் பூனை குறுக்கே போய்விட்டால் கெட்ட சகுனம் என்பார்கள். சிலரை இந்த வேலை செய்துவிட்டாயா என கேட்டால், நாளை செய்கிறேன் என்பார்கள். அதற்கு "ஏன் இன்று என்ன பூனை குறுக்கே போய்விட்டதா" என கிண்டலாக கேட்பார்கள்.

உண்மையில் பூனை குறுக்கே போனால் அபசகுனமா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. இதெல்லாமே மூடநம்பிக்கை என்கிறார்கள். பல வீடுகளில் பூனைகளை வளர்க்கிறார்கள், அது வீட்டுக்குள் சுதந்திரமாக சுற்றித் திரியும், அப்படி நாம் வெளியே செல்லும் போது குறுக்கே வந்துவிட்டால் உடனே போற காரியம் விளங்காதா?


அப்படி கிடையாது, பூனை குறுக்கே சென்றால் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்ற மூடநம்பிக்கையை இன்று சந்திர மண்டலத்திற்கு ராக்கெட் விட்டுள்ள காலத்திலும் மக்கள் நம்புகிறார்கள். இந்த பூனைக்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.

அதாவது அந்த காலங்களில் மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கும் காலங்களுக்கு முன்பு மக்கள் குதிரை வண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும்தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வர். இதனால் 50 கி.மீ.ரில் உள்ள பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட பலமணி நேரம் தாமதமாகும்.


சில நேரங்களில் நீண்ட தூர பயணங்கள் நாள் கணக்கில் இருக்கும். இதற்காக கட்டு சோறு கட்டிக் கொண்டு வண்டியை நிறுத்தி சாப்பிட்டு விட்டு இரவெல்லாம் பயணிக்க வேண்டிய சூழல் வரும். அப்போது இரவு நேரத்தில் காட்டு பகுதியில் பூனைகள் வரும் அதன் கண்கள் பார்ப்பதற்கு ரேடியம் விளக்கு போல் மின்னும், உடல் எல்லாம் தெரியாது, கண்கள் மட்டும் மின்னும்.

அது பூனையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, புலி, சிறுத்தை, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் கண்களும் இரவு நேரத்தில் மின்னும். இதனால் அந்த மின்னொளியை பார்த்து குதிரையோ மாடோ பயந்தால் மிரளும், இதனால் வண்டி ஆட்டம் காணும். பின்பு பயணமே பாதிக்கப்படும். இதனால்தான் இது போல் பூனையின் கண்களை பார்த்துவிட்டாலே அது பூனையோ இல்லையோ சிறிது நேரம் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துவிட்டு குதிரைக்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டிவிட்டு செல்வார்கள்.

இதுதான் பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என்றாகிவிட்டது. எனவே இனியாவது மூடநம்பிக்கையை விட்டொழியுங்கள். பூனைக்காகவும் யானைக்காகவும் எந்த செயலையும் தள்ளி போடாதீர்கள். விதி என்ற ஒன்று தாயின் கருவறையில் நாம் இருந்த போதே எழுதியாகிவிட்டது. எனவே எல்லாம் அதுபடிதான் நடக்கும் என சொல்லிவிட்டு தன்னம்பிக்கையுடன் செல்லுங்கள். ஜெயம் நிச்சயம்! உழைப்பை நம்புங்கள். உன் வாழ்க்கை உன் கையில்!


No comments:

Post a Comment