Saturday, 18 May 2024

அஷ்டகவர்கா மூலம் ஜாதகத்தை ஆராய்வது எப்படி?


அஷ்டகவர்கா மூலம் ஜாதகத்தை ஆராய்வது எப்படி?

அஷ்டகவர்கா மூலம் பலன்களை ஆராய்வதற்கு, நாம் காணவேண்டியவை யாதெனில், ஒவ்வொரு கிரகமும் அந்த கிரகம் தான் நின்ற இடத்திற்கு அளித்த பரல்களும்  மற்றும் அந்த ராசியில் பெற்ற மொத்த பரல்களுமே ஆகும். ஒரு கிரகம் தான் நின்ற இடத்திற்கு 5 பரல்களுக்கு மேல் அளித்திருந்து மற்றும் அந்த ராசியில் மொத்தம் 28  பரல்களுக்கு மேலாக சர்வாஷ்டக பரல்களை அளித்திருப்பின், அந்த வீடு / ராசி சிறந்த முடிவுகளை அளிப்பதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் அதிக பரல்கள் ஒரு கிரகத்தை  நன்கு செயல்பட வைக்கும். 

உதாரணத்திற்கு ஒருவரின் சொத்து நிலையைப் பற்றி அறிய, அவரின் ஜாதகத்தில், 2ஆம் இடத்தில் பெற்ற சர்வாஷ்டக பரலையும், அந்த இரண்டாம் அதிபதி இருக்கும்   இடத்தில் அவர் அளித்த பரல்கள் மற்றும் அவர் நிற்கும் வீட்டில் பெற்ற சர்வாஷ்டக பாலைகளைப் பொறுத்ததே ஆகும். இரண்டாம் இடத்தில் பெற்ற பரல்கள் 28க்கு  மேலாகவும் மற்றும் இரண்டாம் அதிபதி நின்ற இடத்தில் அவரின் தனிப்பட்ட பரல்கள் 5க்கு மேலாகவும் இரண்டாம் அதிபதி நின்ற ராசியில் 28 பரல்களுக்கு மேலாகவும்  பெற்றிருப்பின் அந்த ஜாதகர் நிச்சயம் ஒரு பணக்காரராக இருப்பார் எனலாம்.

நன்கு ஞாபகத்தில் வைக்கவேண்டிய விஷயம் யாதெனில், ஒரு கிரகம் உச்சம் அடைந்திருந்தாலோ அல்லது ஆட்சி பெற்றிருந்தாலோ, அதனால் முழு பலனையும் வழங்க  முடிவது இயலாததாகும். ஏனெனில், அஷ்டகவர்கத்தில் சரியான பரலைப் பெற்றிருந்தால் ஒழிய அது சாத்தியமாகாது என்பதனை அறியமுடிகிறது.

ஒரு கிரகமானது, மிகவும் வலிமை பெற்றுள்ளது என்று கூறுவதற்கு, அது தனியாக 5 பரல்களுக்கு மேலேயும், அது நின்ற இடத்துக்கு அதிகமான சர்வாஷ்டக பரல்களை  கொண்டிருப்பதை பொறுத்தே அமையும். சூரியன், சந்திரன்  அல்லது செவ்வாய் போன்ற கிரகங்கள் தாம் பெற்றுள்ள தனி பரல்கள் முறையே 6, 7, 8 போன்று பெற்றிருப்பின்  அவைகள் மிகவும் தரம் வாய்ந்தவைகளாக மற்றும் ஒரு தனி நபருக்கு / ஜாதகருக்கு நல்லன செய்வதாயும் இருக்கும்.

அதே போல், ஒரு கிரகம் தனியாகவும் குறைந்த பரல்களைப் பெற்றும் அது இருக்கும் வீட்டிலும் குறைந்த பரல்களைப் பெற்று இருப்பின் அவை, மிகுந்த சிரமங்களை  ஜாதகருக்கு அளிக்கும். காரகத்துவங்களையும், ஒரு கிரகத்தின் முக்கியத்துவங்களைப் பற்றியும், கூட இதில் ஜாதக பலன்களுக்கு தீர்மானிக்கப்பட வேண்டியதாக இருக்கவே செய்யும். உதாரணத்திற்கு பின்வரும் கிரகங்களை பற்றிய பலன் உரைப்பதற்குரிய தீர்ப்பில் கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. 

1. சூரியனின் காரகங்களும் மற்றும் சூரியன் அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்

தந்தையின் நிலை மற்றும் அவரின் மதிப்பு, ஜாதகரின் உடல் நிலை, ஆன்மீக முதிர்ச்சி, சமுதாயத்தில் ஒரு ஜாதகர் பெரும் அதிகபட்ச மதிப்பு மற்றும் மரியாதை, சமூகத்தில்  ஜாதகரின் பங்கு போன்றவற்றை அறியலாம். ஒருவரின் ஜாதகத்தில், சூரியன் 5 முதல் 8 பரல்கள் வரை பெற்றிருப்பின், சூரியன் வலிமை பெற்றதாக கருதவேண்டும். அதே  சூரியன், 1 முதல் 4 பரல்களைப் பெற்றிருப்பின், எதிர்வினை தாங்கி செயல்பட வைக்கும். 

எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்த பரலைகளைப் பெறுகிறதோ அப்போது தீங்கு அதிகரிக்கவே செய்யும். பொதுவாக 4 பரல்கள் அளிக்கும் சூரியன் ஒரு ஜாதகருக்கு சராசரி  பலனை மட்டுமே அளிப்பதைக் காண முடிகிறது. அதாவது ரொம்ப நல்லதும் ரொம்ப கேட்டதும் அல்லாத பலன்களை ஜாதகர் பெறுவார். 1 முதல் 3 பரல்களை அளிக்கும்  சூரியன் சில குறும்புகளைச் செய்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஜாதகருக்கு, நோய்கள் வர மற்றும் பேராசை, விதான்டாவாதம் புரிதல் போன்றவை உருவாகக் காரணமாகும்.

2. சந்திரன் அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்

தாய் மற்றும் அவரின் உடல் ஆரோக்கியம், புத்திசாலித்தனம், மற்றவர்களுடன் உண்டாகும் தொடர்பு, பொதுப்படையான அணுகுமுறை, மனதின் நிலை போன்றவைகளை  அறியலாம். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் தான் நிற்கும் இடத்தில் தரும் 4 பரல்கள், ஒரு சுமாரான நன்மை தரும் பக்கமாக அது இருக்கும். அதுவே 5 முதல் 8  வரையிலான பரல்களை அளித்திருந்தால், ஜாதகரை உயர் நிலைக்கு எடுத்துச் செல்வதோடு, சொத்து, செழிப்பு, சந்தோஷ மனநிலை, சமுதாயத்தில் செல்வாக்கு, வீரம், இரக்க  குணம் நிறைந்த அதிர்ஷ்டமிக்க வாழ்வு மற்றும் தனது தாயின் நீண்ட நாள் வாழ்வு போன்றவை அமையும். சந்திரன், 1 முதல் 3 பரல்கள் வரை இருப்பின் ஜாதகர் இருள்  சூழ்ந்த மனதுடன் மந்த நிலை அறிவை பெற்றிருப்பார். நரம்பு சம்பந்தமான பிரச்னைகளை, மனச்சோர்வு, நம்பிக்கையற்ற மனநிலை போன்றவைகளை பெற்றிருக்க வாய்ப்பு.  இவரின் தாயாரின் உடல்நிலையும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில், சந்திரன் 6 முதல் 8 பரல்களைப் பெற்று கேந்திரம் (1, 4, 7, 10) இடத்தில் இருப்பின்  அந்த ஜாதகர் மிகுந்த அறிவுத்திறன் பெற்றிருப்பதோடு, பணக்காரராயும், வளமான வாழ்வும் பெற்றிருப்பார். 

3. செவ்வாய் அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்
 
நிலங்கள், வீடுகள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், உயர் பதவி, சக்தி, வண்டி இயக்குவதன் மூலம் ஏற்படும் / எதிர்கொள்ளும் மோதல், பாலியல் தைரியம்  போன்றவைகளை அறியலாம். 

செவ்வாய் 1 முதல் 3 பரல்களை அளித்திருப்பின் அந்த ஜாதகர் உடல் ரீதியாக மிகவும் நலிவுற்றிருப்பதோடு, சண்டை போடும் எண்ணம் கொண்டும், அவநம்பிக்கை  கொண்டும், தன்னிலை மற்றும் சொத்து இழந்தும், காணப்படுவார். 4 பரல்களைப் பெற்றவர் சுமாரான பலனையும், அதே சமயம், 5 முதல் 8 பரல்கள் வரை பெற்றவர் உயர்ந்த நிலை பெறுவது, நிலா புலன்கள் பெற்றிருப்பது, செழிப்பான வாழ்க்கை, தலைமை ஏற்கும் நிலை, சமுதாயத்தில் கட்டளை இடும் நிலை பெற்றவராயும் இருப்பார்.   இது இன்னும் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலோ, ஆட்சி வீட்டிலிருந்தாலோ அல்லது கேந்திர / திரிகோணங்களில் இருப்பின் நன்றாகப் புலப்படும். 


4. புதன் அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்

ஜாதகரின் பேச்சுத்திறன், அறிவுத்திறன், வேறுபடுத்தி அறியும் சாமர்த்தியம், கல்வியின் நிலை, போன்றவைகளைப் பற்றி அறியலாம். புதன் நான்கு பரல்களைப்  பெற்றிருப்பின் அது சராசரி நிலையை அளிக்கும். 

வலுவிழந்த புதன் :- வலுவிழந்த புதன், சொத்து இழப்பு, அறிவுத்திறன் குறைவு, மகிழ்ச்சி அற்ற உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்கள் மற்றும், நண்பர்களை அளிக்கும்.  1  முதல் 3 வரையிலான பரல்களை ஒரு ஜாதகர் அவரின் 6 அல்லது 8 ஆம் இடங்களில் பெற்றிருப்பின், சுப கிரகங்களின் தொடர்பு இன்றி இருப்பின் ஜாதகர்  நம்பமுடியாதவராயும், கோணல் புத்தி கொண்டவராயும் இருப்பர். 

வலுப்பெற்ற புதன் :- புதன் 5 முதல் 8 பரல்களைப் பெற்று கேந்திர திரிகோணங்களில், குரு அல்லது சனி தொடர்பு பெற்றிருக்கும் ஜாதகர், அதிக கல்வி கற்றவராகவும், சக்தி  வாய்ந்த பேச்சாளராகவும் இருப்பார். 

5. குரு அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்

ஞானம், சொத்து, குழந்தைகள், புகழ், உயர்ந்தவற்றை அறியும் திறன், உயர் நிலை, பொது வளம் / செழிப்பு போன்றவற்றை அறியலாம். 1 முதல் 3 வரை பரல்கள் பெற்றவர்  குருவின் வலுவிழந்தவராகவும், 4 பரல்கள் பெற்றவர் சராசரி அமைப்பையும், 5 முதல் 8 வரையிலான பரல்களை பெற்றவர் வலுப்பெற்ற குருவின் அமைப்பைப் பெற்றவர்  ஆகிறார். வலுவிழந்த குருவானவர் ஒரு ஜாதகரை, துரதிஷ்டமானவராகவும், கல்வி, பதவி மற்றும் சொத்து போன்ற அனைத்திற்கும் போராடுபவராக இருப்பார். அதே  சமயம், வலுப்பெற்ற குருவானவர், ஞானம், சொத்து, அதிர்ஷ்டம், உயர் நிலை, வாழ்வில் நம்பிக்கை, குழந்தைகளுக்கு நல்லது மற்றும் உயர்ந்த விஷயங்களில் நாட்டம்  போன்றவை தரும். 

6. சுக்கிரன் அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள் 

திருமண வாழ்வு, மனதில் வளைந்து கொடுக்கும் தன்மை, போக்குவரத்து / பிரயாணங்கள், மற்ற பாலினத்தவரிடையே ஆன புகழ், பார்வைக்கு நல்ல மற்றும் அழகான  தோற்றம், ஜாதகர் பெறும் சொத்து போன்றவைகளைப் பற்றித் தெரிவிக்கும். 

* 1 முதல் 3 வரை பரல்கள் பெற்றிருப்பின் அது வலுவிழந்ததாகக் கருதப்படும். 

* 4 பரல்கள் சராசரி ஆகும். 

* 5 முதல் 8 பரல்கள் , வலிமை பெற்ற சுக்கிரன் அமைப்பை பெற்றவர்கள் ஆவர். 

* வலிமை பொருந்திய சுக்கிரனை உடைய ஜாதகர், சொத்து, பெண், வண்டி, வாகனம், வாழ்க்கையில் மகிழ்ச்சி, கலைத்திறன், மற்றும் சிறந்த தோற்ற அமைப்பை உடையவர்  ஆவார். அதே சமயம் வலிமை இழந்த சுக்கிரனை உடைய ஜாதகர், திருமண சம்பந்தமான பிரச்னைகள், வறுமை, ஊழல்கள், மற்றும் அர்த்தமற்ற வாழ்வையும் வாழ்வார்கள். 

7. சனி அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள் 

கடின உழைப்பு / வேலைக்கான திறன், ஒருநிலைப்படும் திறன், நீண்ட வாழ் நாள், துயரத்திற்கான காரணம், பாதிப்பு, நிலம் மற்றும் மக்களிடம் இருக்கும் செல்வாக்கு     போன்றவைகளைப் பற்றி தெரிவிக்கும். 0 முதல் 3 பரல்கள் பெற்றவர் - சனியின் வலிமை குறைந்தவர்கள். 4  பரல்களைப் பெற்றவர்கள் - சராசரி வலிமை பெற்றவர்கள்.

5 முதல் 8 பரல்கள் வரை பெற்றவர்கள் - சனியின் வலிமை அதிகமாக பெற்றவர்கள். வலிமை குறைந்த சனியினை பெற்ற ஜாதகர், எதிலும் தடைகளை அதிகம்  சந்திப்பார்கள், கால தாமதம் ஏற்படும், நோய்வாய்ப்படுவார்கள், இறப்பு, வறுமை போன்றவை இவர்களை வாட்டும். வலிமையுடைய சனியினை பெற்ற ஜாதகர், கடின  உழைப்புக்கு தேவையானவர்கள், மனச்செறிவு (concentration of mind) பெற்றவர்கள், கண்டிப்பான வாழ்க்கை, நேர்மை செறிந்த வாழ்வு, ஆழ்ந்த ஆய்வுத் திறன்,  வாழ்நாள் முழுதும் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாய் இருப்பார்கள். பொதுவாக எந்த எண்ணிக்கையிலும் பரல்கள் பெறாதவர்கள் அதாவது 0 பரல்கள் அளித்துள்ள எந்த  கிரகம் ஆயினும், அந்த கிரக காரகத்துவங்களை பெற, ஜாதகர் மிகவும் அவஸ்தைக்கு ஆளாக நேரிடும். ஏழரை சனி, மற்றும் அட்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி வரும்  காலத்தில், ஒருவரின் ஜாதகத்தில் சனி 5 முதல் 8 பரல்களை ஒருவரின் ஜாதகத்தில், சனி கோச்சார ரீதியாக வரும் காலங்களில், எந்த பாதிப்பும் இன்றி அருமையான  வாழ்வு வாழ்வர். 


1 comment:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். தாங்கள் கூறிய கிரக நிலை என்பது,, அந்த கிரகத்தில் எத்தனை யோக அம்சங்கள் அடங்கியிருக்கிறது, அதாவது பாவயோகம் எத்தனை, சுபயோகம் எத்தனை என்பதை எல்லாம் சரியா கணக்கிட்ட பிறகு தானே ஒரு கிரகத்தின் வலிமை இவ்வளவு என்று சரியாக கூற முடியும் ? இதற்கு அடியேனுக்கு பதில் தெரிவிக்க தங்களால் முடியுமா ? அடியேனின் மெயிலில் தங்கள் பதிலை எதிர் நோக்குகிறேன். சிவாய நம

    ReplyDelete