Saturday, 6 October 2012

கும்பாபிஷேக வழிபாடு பலன்கள்


இறைவன் ஒளியே உருவாகத் திகழ்பவர். ஜோதி எங்கும் நிறைந்திருந்தாலும் கல்லிலே அதிகம் உள்ளது. ஒரு கல்லை மற்றொரு கல் மீது தட்டினால் நெருப்பு வருவதை காண்கிறோம். ஆதலால், தெய்வ வடிவங்களைக் கல்லினால் செதுக்கி அமைக்கிறார்கள். இறைவன்  தனது அகண்டா காரமான சக்தியை ஒரு விக்ரகத்திற்குள் நிலைபெறச் செய்து கொண்டு அடியவர்களுக்கு அருள் பாலிக்கின்றான்.
எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவனுடைய சக்தியை ஈர்த்துச்சேர்த்து அனுப்புகிறது மூலஸ் தானத்தில் உள்ள மூர்த்தி. ஏனைய இடங்களில் இறைவனை வழிபட்டால் வினைகள் வெதும்பும். ஆலயத்தில் உள்ள மூர்த்திக்கு முன் வழிபட்டால் வினைகள் வெந்து போகும். ஆகவே, நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஞானிகளும் இந்த உலகம் வாழ அமைத்தவை ஆலயங்கள்.
அந்த ஆலயத்தில் கருவறையில் சுவாமி மந்திர வடிவாக இருந்து ஆன்மாக்களுடைய மாயா கன்மங்களை நீராக்கி அருள் புரிகின்றான். மந்திர ஒலிக்கு ஆற்றல் அதிகம்.ஆகை யினால்தான் பெரியவர்கள் வேத மந்திரத்தினாலே இறைவனை வழிபட்டார்கள். ஆகவே, கோவிலுக்கு சென்று கடவுளை வணங்க வேண்டும். இறைவனுடைய அருளைப்பெற்ற மகான்களாக இருந்தாலும் ஆலய வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
கல்லினால் திருவுருவத்தை அமைத்துத் தானியவாசம், ஜலவாசம் வைத்து அந்த மகாதேவனுடைய மந்திரங்களை எழுதி மந்திர யந்திரத்தை 48 நாள் வழிபாடு செய்து அதை அந்த மூர்த்திக்கு கீழே வைப்பார்கள். அந்த மந்திர சக்தி மேலே வரும். அந்த வேத சிவாகமத்திலே வல்லவர்களாக இருக்கின்றவர்கள் யாகசாலை அமைத்து இனிய மந்திரங்களை ஓதி காலங்கள் தோறும் யாக அக்னி வளர்த்து அதில் ஜோதியை விளையுமாறு செய்கிறார்கள்.
அப்படி விளைந்த ஜோதியைக் கும்பத்தில் சேர்ப்பார்கள். கல்லினாலும் மண்ணினாலும் சுதையினாலும் மனிதரால் உருவாக்கப்பட்டவை விக்கிரகங்களாகும். அவற்றிற்குத் தெய்வ சக்தியை உண்டு பண்ணுவதற்காகச் செய்யப்படும் பல கிரியைகளில் ஒன்றுதான் கும்பாபிஷேகம். கும்பாபிஷேகம் காண்பது என்பது வாழ்நாளில் கிடைப்பதற்கு அரிய ஒரு வாய்ப்பாகும்.
கும்பாபிஷேகத்தை நேரில் கண்டு, கடவுளை வணங்குபவர்களுக்குத் திருவருள் நிரம்பத் துணை செய்யும். ஒருவர் நியாயமாகக் கணக்கு எழுதி, நியாயமாக செலவழித்து நியாயமாக வரி கட்டி வியாபாரம் பண்ணினார். அவருக்கு மாதம் ஆயிரத்து நானூறு ரூபாய் வருமானம் கிடைத்தது. பன்னிரண்டு ஆண்டுகள் வியாபாரம் பண்ணினார். இரண்டு லட்சத்து ஓராயித்து அறுநூறு ரூபாய் கிடைத்தது.
இன்னொருத்தர் கிணறு வெட்டினார். ஓர் அண்டா கிடைத்தது.  எடுத்துப் பார்த்தால் தங்க டாலர்கள், கொண்டு போய் விற்றார். டாலர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய். இருநூறு டாலருக்கு இரண்டு லட்சம் ருபாய் வந்தது. பன்னிரண்டு ஆண்டுக் காலம் இரவு பகலாகப் பாடுபட்டவருக்கு இரண்டு லட்ச ரூபாய் சேர்ந்தது. பாடுபடாமலே, நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழாமலே கிணறு வெட்டியவருக்கு இரண்டு லட்ச ரூபாய் வந்தது.
அதுபோல், பன்னிரண்டு ஆண்டுகள் ஆலயத்திற்குச் சென்று இறைவனை மன,  மெய்களினாலே வழிபட்டவருக்கு என்ன என்ன அருள் வருமோ, அத்தனை அருளும் கும்பாபிஷேகத்தைச் சேவித்த ஒரு விநாடியில் வரும். புதையல் எடுத்துத் தனவந்தன் ஆவது போல், கும்பாபிஷேகம் சேவித்தவருக்குத் திருவருள் கைகூடி வரும். ஆகவே கும்பாபிஷேகத்தை கண்டு வணங்குவது மிக மிக இன்றியமையாதது.
கலசத்தில் இருப்பது என்ன?
கோபுர கலசங்கள் சக்தி வாய்ந்தவை. மனித உடலுக்கு தலை உச்சி போன்று கோவிலுக்கு கோபுர கலசங்கள் உள்ளன. இந்த கலசங்களில் வரகரிசியை போட்டு வைத்திருப்பார்கள். அது உள்ளே இருக்கும் நவ தானியங்களையும், கட்டைகளையும் கெடாமல் பாதுகாக்கும். கலசங்களில் சுற்றி கட்டப்படும் நூல் நமது நாடி, நரம்புகளை பிரதிபலிக்கிறது.
முக்கிய பூஜைகளின் போது தர்ப்பை புல் பயன்படுத்தவார்கள். தர்ப்பை புல்களுக்கு கிரகண தாக்குதல்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிடும் ஆற்றல் உண்டு. எனவே தான் கோவில் விழாக்களில் தவறாமல் தர்ப்பை புல் பயன்படுத்தப்படுகிறது.
45  நாட்களுக்கு பலன்  உண்டு………
மகா கும்பாபிஷேகம் நடக்கும் போது கோவில் உள்ளேயும், பிரகாரங்களிலும் பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் நிறைந்து இருப்பார்கள். இதனால் சாதாரண பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தை நேரில் கண்டுகளிக்க முடியாமல் போய் விடுவதுண்டு. இது சாதாரண பக்தர்களுக்கு ஏமாற்ற மாக கூட மாறலாம்.
ஆனால் ஆகம விதி களை நன்கு அறிந்தவர்கள், “எந்த ஒரு பக்தரும் மனக்குறை அடைய தேவை இல்லை” என்கிறார்கள். ஏனெனில் மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பிறகு 45 நாட்களுக்கு மண்டல பூஜை கள் தினமும் நடத்தப்படும். இந்த 45 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டால் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நோய் தீரும்………
கும்பாபிஷேகத்தை முன்னிட்டுயாக குண்டங்களில் அரிய மூலிகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு யாக குண்டங்களில் தேங்கும் புனித சாம்பல் பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த புனித சாம்பல் மிக, மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
இந்த சாம்பலை கருப்பு மையாக தயாரித்தும் வைத்துக் கொள்வார்கள். முக்கிய விஷயங்களுக்காக வெளியில் செல்லும்போது, அந்த மையை நெற்றியில் சிறிது பூசி சென்றால், எந்த நோக்கத்துக்காக செல்கிறோமோ அந்த நோக்கம் எளிதில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
ராஜகோபுரம் உணர்த்துவது என்ன?
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஒரு கோவிலில் பல்வேறு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். கோவிலில் உள்ள மற்ற கோபுரங்களை விட ராஜ கோபுரம் மிக உயர்ந்து இருக்கும். கோவிலின் முகப்பில் உள்ள இக்கோபுரம் ஸ்தூல்லிங்கம் எனப்படும் இது தொலைவில் இருப்பவர்களுக்கு கண்டு வழிபடும் படியாக அமைந்துள்ளது.
இந்த வகை ராஜகோபுரங்கள் 2,5,7,9,11 என்னும் எண்ணிக்கையில் அமைந்த நிலைகள் உடையதாக அமையும். இக்கோபுரத்தின் பல்வேறு வகையான வடிவங்களும் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கும். ராஜகோபுரம் நம் கண்ணில் பட்டதும் கைகூப்பி வணங்க வேண்டும்.
செல்வம் தரும் வேதபாராயணம்……….
மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு நடைபெறும். யாகசாலை பூஜைக் காலங்களில் வேத விற்பன்னர்களால் வேதபாராணயமும், ஆழ்ந்த புலமைமிக்க ஓதுவார்களால் திருமுறைப் பாராயணமும் நடைபெறும். இந்த வேத பாராயணமும், திருமுறைப் பாராயணமும் கேட்டால், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம். வேத பாராயணங்கள் நம் காதில் விழுந்தால் செல்வம் சேரும்.
சக்தி நிறைந்த புனித நீர்………
கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு மூல விக்கிரத்தில் உள்ள சக்தியை கும்பத்துக்கு வரவழைப்பார்கள். அதாவது மூலவர் ஆற்றல் பிம்பத்தில் இருந்து கும்பத்துக்கு வந்து விடும். இதையடுத்து திருப்பணிகள் நடைபெறும். இதற்கிடையே கும்பத்தில் உள்ள சக்தியை பாலாயம் செய்து பூஜைகள் செய்து வருவார்கள்.
யாக சாலை பூஜைகள் தொடங்கியதும் பாலாலயத்தில் இருந்து சக்தியை பெற்று புனித நீர் நிரம்பிய கும்பத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும். யாக சாலை பூஜைகள் முடிந்ததும் வேத பாராணயங்களால், திருமுறை பாராயணயத்தால் சக்தி ஏற்றப்பட்ட புனித நீர் அபிஷேகம் செய்யப்படும். இதன் மூலம் மூலவர் விக்கிரகம் புதிய சக்தியை பெறும்.
மக்களும் அதன் அருளால் நன்மைகள் பெறுவார்கள். மகா கும்பாபிஷேகத்தின் போது புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். இந்த புனித நீர் நம் மீது பட்டால் நமது பாவம் எல்லாம் தொலைந்து போகும். நம் சுத்தப்படுத்தப்பட்டு விட்டோம் என்பது ஐதீகமாகும்.

No comments:

Post a Comment