Sunday, 27 January 2013

திருமணம் எப்பொழுது நடக்கும்?


திருமணம் எப்பொழுது நடக்கும்?

பண்டைய காலங்களில் இளம் பிராயத்திலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது. ஆனால், காலங்கள் மாற மாற இளமையில் திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என கூறப்பட்டதால் இளமை திருமணங்கள் வெகுவாக குறைந்து விட்டது. ஆனாலும் தமிழ் கலாசாரத்தில் சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப ஆணுக்கு 21 வயது பெண்களுக்கு 18 வயது  ஆகிவிட்டாலே திருமணத்தை செய்து வைத்து விடுவார்கள். இலங்கையில் சில பகுதிகளிலும் இந்த வயதுகளில் திருமணம் செய்கிறார்கள். ஆனால் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் ஆண்களுக்கு 35, 40 வயதுகளிலும் திருமணம் செய்கிறார்கள்.

இளம் வயதிலேயே திருமணம் செய்வது தவறு. இளம் வயது திருமணத்தால் எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலை, சுற்றத்தாரை அனுசரித்து செல்ல முடியாத சூழ்நிலை போன்றவை ஏற்படுகிறது.  திருமணத்திற்கு உடல் தகுதி, மனத்தகுதி இரண்டுமே அவசியமாகும்.

இது ஒரு புறம் இருக்க வயது முதிர்ந்து திருமணம் செய்து கொள்வதால் பெண்களுக்கு பிள்ளைகளை பெற்றெடுப்பதில் சிக்கல்கள், அவர்கள் வளர்வதற்குள் முதுமை, பருவத்தை எட்டி விடும் நிலை போன்றவை ஏற்படுகிறது. திருமணத்தை தக்க வயதில் செய்வதுதான் சிறப்பு. ஒருவரின் ஜெனன ஜாதக ரீதியாக அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்பதினைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். வரன் பார்க்கும் பெற்றோர்களுக்கு ஒரு தவறான கருத்து உள்ளது. குருபலன் வந்து விட்டால் தன் பிள்ளைக்கு திருமணம் நடந்து விடும் என்று ஜோதிடரை அணுகும் போது குருபலம் வந்து விட்டதா பாருங்கள் என ஜாதகத்தை காண்பித்து கேட்கிறார்கள். குரு பலம் என்பது கோட்சார ரீதியாக குருபகவான் ஜென்மராசிக்கு 2,5,7,9,11 ஆகிய வீடுகளில் சஞ்சரிப்பதைத்தான் சொல்வார்கள்.

குரு இந்த வீடுகளில் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலங்களில் நற்பலன்களையும், சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்புகளையும் ஏற்படுத்துவார் என்றாலும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு கோட்சார ரீதியாக உண்டாகக் கூடிய குருபலம் மட்டுமின்றி ஜெனன ஜாதக ரீதியாக நடைபெறகூடிய தசாபுக்திகளும் பலமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவருக்கு திருமணம் கைகூட 7ம் அதிபதியின் தசாபுக்தியோ, 7ல் அமையப் பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தியோ, 7ம் அதிபதி சேர்க்கைப் பெற்ற சுபகிரக தசாபுக்தியோ, 7ம் அதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ நடைபெற்றால் திருமணம் கைகூடும், அதுபோல களத்திரகாரன் என வர்ணிக்கப்படக்கூடிய சுக்கிரனின் தசாபுக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களாகிய பரணி, பூரம், பூராடத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ, நடைபெற்றால் திருமண சுபகாரியம் கைகூடும். சந்திரனுக்கு 7ல் அமையப் பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தியிலும், 7ம்  அதிபதியின் தசாபுக்தியிலும் ஒருவருக்கு என்னதான் ஜாதக அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும், கேதுவின் திசை அல்லது புக்தி நடைபெறும் காலங்களில் திருமணம் அவ்வளவு எளிதில் கைகூடி வருவதில்லை. அப்படியே கூடினாலும் மணவாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. சிலருக்கு கேதுதிசை ராகுபுத்திக்கு பிறகு வரக்கூடிய குருபுத்தி காலத்தில் மணவாழ்க்கை அமைந்தாலும் வரக்கூடிய வரனுக்கும் ராகுகேது தோஷம் இருந்தால் மட்டுமே ஒரளவுக்கு மனவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

கேதுவின் திசையைவிட திருமண வயதை அடைந்தவர்களுக்கு கேதுவின் புத்தி நடைபெறுகின்ற போதும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுத்தி நடைபெறும் காலங்களிலும் எவ்வளவு தான் முயற்சித்தாலும் திருமணங்கள் கை கூடுவதில்லை. அப்படியே கூடி வந்தாலும் பல இடையூறுகள் ஏற்பட்டு தாமத நிலையினை உண்டாக்கும். கேது ஞான காரகன் என்பதால் கேது திசாபுக்தி காலங்களில் இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். வாழ்க்கை துணையை சந்தோஷப்படுத்த முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். இதனால் மணவாழ்க்கையானது மகிழ்ச்சியற்றதாக மாறும்.

3 comments: