Sunday, 27 January 2013

ஆபரண யோகம்


ஆபரண யோகம்


ஆபரணங்களை விரும்பாதவர் யார். ஆணானாலும் பெண்ணானாலும் அணிகலன்கள் மீதும் ஆபரணங்கள் மீது ஆசை உடையவராகத்தான் இருக்கிறார்கள். பெண்ணிற்கு பொன் நகை வேண்டாம். புன்னைகையே போதும் என்ற காலமெல்லாம் போயே போச்சு. பெண் பார்க்கும் படலத்தில்கூட பெண்ணை பிடிக்கிறதோ இல்லையோ, முதலில் எத்தனை சவரன் பொன் போடுவார்கள் என்று  தான் கேட்கிறார்கள். அழகும், கலரும் குறைவாக இருந்தாலும் அதற்கு ஈடாக ஒரு ஐந்து சவரன் அதிகமாக போட்டால் போதும்.

இப்பொழுதெல்லாம் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டு இருப்பதால், மக்கள் தங்களின் முதலீட்டை பொன்னில் போட விரும்புகிறார்கள். ஆண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? நகை போட்டுக் கொள்வதில் நடமாடும் நகைக் கடையாகவே ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பொன்னை வைத்த இடத்தில் எல்லாம் பூவை வைத்து பார்ப்பதென்பதெல்லாம் தற்போது நடக்காத கதை. பொன்னை வைக்கும்  இடத்தில் கட்டி கட்டியாக தங்கத்தை வைத்து பார்க்க ஆசைப்படுகிற நிலைமை வந்து விட்டது. மனிதனுக்கு மதிப்பு இருக்கிறதோ இல்லையோ அணிந்திருக்கும் ஆபரணங்களுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்கள். வசதியே இல்லாதவர்கள் கூட  பத்து சவரன்களுக்கு கம்மியாக வைத்திருப்பது இல்லை. நகைகளைப் போட்டு பார்த்து அனுபவிக்கும் யோகம் அனைவருக்கும் அமைகிறதா, என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். கடனை வாங்கி தன் மகளுக்கு பத்து சவரன் போட்டு கட்டிக் கொடுத்தால் முன்றாவது நாளே அவற்றை அடமானகடைகளில் வைக்கும் கணவன் மார்கள் எத்தனையோ பேர். அப்படி என்றால் அவர்களுக்கு அந்த நகைகளை போட்டு அனுபவிக்கும்  யோகம் இல்லை என்றுதானே கூற வேண்டும்.  பொன் ஆபரணங்களை அதிகம் வாங்கி அனுபவிக்கும் யோகம் யாருக்கு அமைகிறது என்று பார்ப்போமா?

ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந்திருப்பது யோகத்தை ஏற்படுத்தும். அணிகலன்கள், பொன் ஆபரணங்களை அனுபவிக்கக்கூடிய யோகம், அதிர்ஷ்டம் யாருக்கு ஏற்படும் என பார்த்தால், சுக்கிரனும் குருவும் பலமாக அமையுப் பெற்றவர்களுக்குத்தான் உண்டாகும்.

சேமிப்பு என்பது  வீடு, மனை மட்டுமின்றி ஆபரணங்களை வாங்கிக் சேர்ப்பதும் ஒரு சேமிப்புதான். இப்படிப்பட்ட சேமிப்புகள் பலமாக இருக்க ஒருவரின் ஜாதகத்தில் 4ம் அதிபதியும், 4ம் வீடும் பலம் பெறுவது மட்டுமின்றி, 4ல் குரு, சுக்கிரன் அமையப் பெற்றாலும், 4ம் அதிபதிக்கு குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற சுபகிரகங்களின் தொடர்பு இருந்தாலும் பொன், பொருள், ஆபரண சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் 3ம் அதிபதியானவர் குரு வீட்டிலோ, சுக்கிரன் வீட்டிலோ அமைந்திருந்தாலும், 3ல் குரு, சுக்கிரன் அமைந்து பலம் பெற்று, சுபர் பார்வையுடன் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 3ம் அதிபதி 8ம் அதிபதியுடன் இணைந்து பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தாலும், 3,8 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், ஆபரணங்கள் மீது ஆசை கொண்டவர்களாகவும், ஆபரணங்களை வாங்கி அனுபவிக்கக்கூடியவர்களாகவும் இருப்பர். 3ம் அதிபதி பலம் பெற்று இருந்து சுபர் பார்வையுடன் இருந்தால் ஆபரண சேர்க்கைகளும் அவற்றை அனுபவிக்கும் யோகமும் உண்டாகும். 3ல் சந்திரன் அமைவது, 5ல் குரு அமைவது, 8ம் அதிபதி ராகு சேர்க்கைப் பெற்று 9 ல் அமைவது போன்றவற்றால் ஆபரண சேர்க்கைகளையும் நவரத்தினங்கள் அணியும் யோகத்தையும் கொடுக்கும்.

No comments:

Post a Comment