Monday, 10 June 2013

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!




தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா?

தமிழர்கள் யாவரும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய தெளிவின்மையோடு, எதை நம்புவது எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பத்தில் சிக்கியுள்ளார்கள். தமிழக மக்கள் இந்த விசயத்தில் எக்காரணம் கொண்டும் தெளிவுபெற்றுவிடக் கூடாது என்பதில் இப்போது ஆட்சியில் இருப்போரும், அவர்க்கு அறிவுரை வழங்கி வரும் கூட்டமும் மிகத் தெளிவாய் இருக்கிறது. இந்நிலையில் எதற்காக தமிழர்கள் தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது குறித்து விளக்கவே இந்தக் கட்டுரை. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஏன் எதற்கு என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும் முன், நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.

அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன? அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் மரியாதையாய் இருக்குமா? இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.

மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது. தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆரியக் கதை இப்படி இருக்க, தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்து பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

No comments:

Post a Comment