Thursday, 8 August 2013

ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடுவது ஏன்?

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி ... வாடியம்மா... எங்களுக்கு வழித்துணையாக..... என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம். அதிலும், ஆடியில் பொங்கும் நுரையுடன் பெருக்கெடுத்து வரும் புதுத்தண்ணீரைக் காண்பதும் அதில் நீராடுவதும் தனிசுகம்.

புரட்டாசி, ஐப்பசி மழைக்காலத்திலும் காவிரியாறு இருகரையைத் தொட்டுத்தான் செல்லும். ஆனாலும், அதற்கு இல்லாத விசேஷம் ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் வந்தது? மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை ஆனிமாதம் துவங்கியதும், குடகுமழையில் பெருக்கெடுக்கும் காவிரி வெள்ளம், ஆனி கடைசியில் கொங்கு, சோழமண்டலங்களைத் தொடும். சித்திரை, வைகாசி வெயிலில் காய்ந்து கிடந்த நிலங்களும், நீர்நிலைகளும் ஆடியில் வரும் புதுதண்ணீரால் நிரம்பும். ஆடிப்பட்டத்தில் அந்தாண்டு முதன்முதலாக விவசாயிகள் தங்கள் நெல்சாகுபடியைத் துவங்குவார்கள். நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே. ஆடிப்பெருக்கு விழாவின் முக்கிய குறிக்கோள். ஆன்மிகரீதியில் மட்டுமின்றி, தங்கள் தொழிலைக் காக்கும் காவிரி அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்திலும் இவ்விழாவை, காவிரிக்கரையோ மக்கள் கொண்டாடுகின்றனர்.

No comments:

Post a Comment