Thursday, 8 August 2013

அசைவ உணவு.........

மனிதர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களில் முக்கியமானது இரக்க குணம். பிறர் துயர் கண்டு இரக்கம் கொள்வது மனிதத் தன்மை. இரக்கமில்லா நெஞ்சம் ஈரமில்லா நெஞ்சம். மனிதன், மனிதனிடம் இரக்கம் காட்டுவதை விட, பிற ஜீவன்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும். 
மனிதனுக்கு பேச முடியும்; என்ன வேண்டுமென்று கேட்க முடியும்; துன்பங்களை வாய் விட்டுச் சொல்ல முடியும். இதர ஜீவன்களால் அப்படி செய்ய முடியாது. அதனால்தான், இந்த வாயில்லா ஜீவன்களிடம் அன்பு, இரக்கம் கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தை, வள்ளலார் மிகவும் வலியுறுத்தி சொல்லி இருக்கிறார். அசைவ உணவை அவர் வெறுத்தார். ஊனைத் தின்று, தன்னை வளர்க்க வேண்டுமா என்றார். அசைவ உணவு ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் என்பது, மேல் நாட்டு வைத்தியர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும், பெரும்பாலோர், அசைவ உணவை விரும்புகின்றனர். அசைவ உணவில் கிடைக்கும் சத்துக்களை, சைவ உணவிலேயே பெற முடியும் என்று தமிழ் வைத்தியம் கூறுகிறது. "பிற ஜீவன்களை கொன்று, அதை உண்ணாமலிருப்பது நல்லது…’ என்கிறார் வள்ளலார். விலங்குகளிடம் அவ்வளவு இரக்கம் அவருக்கு.
விலங்குகள், நம்மிடம் வந்து எதையாவது கேட்கிறதா? பணம், ஆடை, ஆபரணம், பள்ளிக்கூட சம்பளம், சினிமா பார்க்க காசு, இப்படி எதையாவது கேட்கிறதா? இல்லையே…
இவைகள் எங்கேயோ அலைந்து, திரிந்து தங்களுக்கான ஆகாரத்தைத் தேடிக் கொள்கின்றன; மனிதரிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், மனிதன் அதைத் தேடி, அலைந்து, பிடித்துக் கொன்று உண்கிறான். இது பாவம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பசு இருக்கிறது. அதன் பாலை கறந்து, குடும்பத்தில் உள்ள அனைவரும் பாலாகவும், தயிராகவும், வெண்ணெய், நெய்யாகவும் உண்டு, உடலை வளர்க்கின்றனர். ஆனால், பசு என்ன செய்கிறது? எங்கேயோ சென்று மேய்ந்து விட்டு, வீட்டுக்கு வந்து சேருகிறது. வீடுகளில் அதற்கு போடும் தீனி போதுமானதாக இராது. அது, வெளியில் போய்த் தான் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு வருகிறது.
ஆனாலும், பால் வற்றியதும், அதை அடிமாடாக விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வாங்கி, திருப்தியடைந்து விடுகிறான் மனிதன். பசு, பால் கொடுத்ததற்கு மனிதன் காட்டும் நன்றி இது! மாடு என்ன கேட்கிறது? "வயலில் கிடைக்கும் நெல்லை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; வைக்கோலை எனக்குப் போடுங்கள்… அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள்; தவிட்டை எனக்குப் போடுங்கள்… சாதத்தை விதவிதமாக சாப்பிடுங்கள்; கஞ்சி, கழுநீரை எனக்கு வையுங்கள்… கீரையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; அதன் வேரை எனக்குப் போடுங்கள்… காய்கறி, பழம் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்; அவற்றின் தோலை எனக்கு போடுங்கள்…’
— இப்படி, மனிதனுக்கு வேண்டாத பொருட்களையே அவை ஆகாரமாக உண்டு வாழ்கின்றன; நமக்கும் உதவுகின்றன. பசு மட்டுமா… எருமை, குதிரை, யானை, நாய் போன்ற பிராணிகள் கூட நம்மிடம் எதையும் கேட்காமல், நமக்கு வேலை செய்கின்றன; உதவுகின்றன. ஒரு ஒற்றை மாட்டு வண்டியில், முப்பது மூட்டை சிமென்ட்டை ஏற்றி, அதை இழுக்கச் சொல்கின்றனர். முக்கி, முனகி இழுத்துச் செல்கிறது மாடு. குதிரை வேகமாகத் தான் வண்டியை இழுத்து ஓடுகிறது. இருந் தாலும், சாட்டையால் இரண்டடி கொடுக்கிறார் வண்டிக்காரர்.
கழுதையின் பிழைப்பு இன்னும் மோசம். அதன் முதுகில், இரண்டு கல்லுரல்களை கட்டித் தொங்கவிட்டு ஓட்டிச் செல்வர். போதாக் குறைக்கு, தங்கள் பிள்ளையையும் அதன்மேல் உட்கார வைத்து விடுவர். அதன் முதுகெலும்பு என்ன… வஜ்ராயுதமா? அது, நடக்க முடியாமல் பின்னங்கால்களைப் பின்னி, பளுவை சுமந்து செல்லும். இதையெல்லாம் பார்த்து நாம், "ஐயோ பாவம்…’ என்று சொன்னால், அதுவே நாம் இரக்கப்படுவதாக அர்த்தம். இதைத்தான் வள்ளலாரும், பிற ஜீவன்களிடம் இரக்கம் காட்ட வேண்டும் என்றார். இந்த குணம் மனிதனிடம் இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment