Wednesday, 4 December 2013

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன்?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன்?

திருமணத்தின் போது திருமணத் தம்பதிகள் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது ஏன் என்பது பற்றி முன்பொரு விளக்கமும் பிரசுரமாகி இருந்தது. அதுபற்றிய அருமையான மற்றுமொரு விளக்கமும் இருக்கிறது. வசிட்ட முனிவரின் மனைவி அருந்ததி மிக அழகானவள். அதனால் அவள் மீது இந்திரனுக்கே கொள்ளை ஆசை இருந்து வந்தது.
வசிட்ட முனிவர் தினமும் அதிகாலையில் சேவல் கூவும் சத்தத்தினைக் கேட்டு கண் விழித்து எழுந்து ஆற்றங் கரைக்குச் சென்று ஆற்றில் நீராடி தவஞ் செய்வது வழக்கம். இதனை இந்திரன் நன்கு தெரிந்து வைத்திருந்தான். அதனால் ஒருநாள் அதிகாலை இரண்டு மணிக்கு அவன் அவரது பன்னசா லைக்குச் சென்று சேவல் கூவுவது போன்று பலமுறை கூவினான். அதனைக் கேட்ட வசிட்ட முனிவரும் விடிந்து விட்டதாகக் கருதிக் கொண்டு விழித்தெழுந்து ஆற்றங்கரைக்குச் சென்றார்.
அந்த நேரம் இந்திரன் வசிட்ட முனிவரின் வடிவத்தில் பன்னசாலைக்கு உள்ளே சென்று அருந்ததியை கட்டி அரவணைத்து இன்பம் அனுபவித்தான். அருந்ததியும் கடுகளவேனும் சந்தேகிக்காது அவர் தனது கணவர் தான் என நினைத்துக் கொண்டு ஒத்துழைப்பு நல்கினாள். ஆனால் ஆற்றங்கரைக்குச் சென்ற வசிட்ட முனனிவர் வானத்தில் விடிவெள்ளியைக் காணாததினனால் இன்னும் விடியவில்லை. சேவல் தவறுதலாகக் கூவி விட்டது போலிருக்கிறது என எண்ணிக் கொண்டு நீராடாமல் விரைவாக பன்னசா லைக்குத் திரும்பி வந்தார்.
வந்த போது அங்கு நடந்த இந்திரனின் திருவிளையாடலைக் கண்டு ஆத்திரமுற்று நீ செய்த பாவத்துக்கு தண்டனையாக “நீ ஒரு ஜோனிக்கு ஆசைப்பட்டதனால் உனது உடல் முழுவதும் ஜோனி ஆகட்டும்” எனச் சாபம் இட்டார். அதனால் அவனது உடல் முழுவதும் ஜோனியாகி விட்டதாம். இதனை அறிவுறுத்தும் வகையிலேயே உடலெல்லாம் ஜோனிகள் இருப்பதைப் போன்ற தோற்றமுடைய முள்முருக்கம் தடியினை திருமணத்தின் போது அரசாணியாக மணவறையின் முன்பாக வைப்பது வழக்கமாகியது. ஜோனியை அம்மணமாகக் காண்பிக்கப்படாது என்பதற்காக முள்முருங்கைத் தடியினை வெள்ளை நிறத் துணியினால் மூடிக் கட்டுவார்கள்.
அருந்ததி மீதும் ஆத்திரமுற்று நீ கருங்கல்லாகப் போய்விடு எனச் சாபம் போட்டார். அப்போது அருந் ததி மிக்க மனம் வருந்தி சுவாமி நான் நீங்கள் என்று நம்பித் தான் தவறு செய்துவிட்டேன். தெரியா மல் செய்த தவறுக்காக என்னை மன்னித்து விடுங்கள் எனக் கெஞ்சினாள். இல்லை நீ செய்த குற்றம் மன்னிக்க முடியாததாகும் எனக் கூறினார். சரி உங்கள் சாபப்படி நான் கருங்கல்லாகப் போகிறேன். அதிலிருந்து எனக்கு மீட்சி கிடைக்காதா? எனக் கேட்டாள்.
கருங்கல்லாகப் போகும் உன்மீது யாராவது புண்ணிவானின் பாதம் பட்டால் நீ மீணடும் உனது சுய ரூபத்தினைப் பெறுவாய் என உத்தரவிட்டராராம். அதே போன்று சில காலத்தின் பின்னர் வனவாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இராமபிரான் வனத்தின் ஊடாக நடந்து சென்ற போது வனத்தில் கிடந்த கருங்கல்லின் மீது அவரது பாதம் பட்டதும் அருந்ததி தனது சுயரூபத்தினைப் பெற்றாள். அவளது சோகமான கதையினக் கேட்ட இராமபிரான் குற்றமற்றவளான நீ என்றும் வானத்தில் ஒளி வீசும் நட்சத் திரமாகத் திகழ்வாய் எனக் கூறி ஆசீர்வாதம் வழங்கினாராம்.
அதனால் தான் திருமணம் செய்யும் தம்பதிகள் கற்பு நெறி தவறாது வாழ வேண்டும் என்பதனை நினைவுறுத்தும் வகையிலேயே இன்றும் அருந்ததி நட்சத்திரத்தினைப் பார்த்து வருகின்றனர்.
அத்துடன் மணப் பெண் திருமண வைபவத்தின் போது அம்மி மிதிப்பதும் கற்பு நெறி பிறழ்ந்தால் அருந்ததிக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும் என்பதனை நினைவுறுத்துவதற்காகும்.

1 comment:

  1. அருந்ததி விளக்கம் அருமை.

    ReplyDelete