Thursday 19 June 2014

ஜோதிடத்தில் ராசியா.. லக்னமா எது முக்கியம்?

ஜோதிடத்தை நம்புபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது!
உங்களுடைய ராசி என்ன? என்று கேட்டால் `பளிச்’ சென்று பதில் சொல்லும் ஒருவரிடம் அவரது லக்னம் என்ன? என்று கேளுங்கள். சற்றுத் திணறுவார். ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களே சமயத்தில் லக்னத்தின் முக்கியத்துவத்தை உணருவதில்லை.
ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பதுதான் உயிர். ராசி என்பது உடல்தான். லக்னம் ஒன்றுதான் ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவருடைய முழு வாழ்க்கையிலும் அவருக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ஆதாரத்தூண் போன்றது.
ராசி என்பது லக்னத்திற்கு துணை செய்யும் ஒரு அமைப்புத்தான்.. அப்படியானால் இத்தனை சிறப்பு மிக்க லக்னத்தை ஒருவர் நினைவில் கொள்ளாமல் ராசியைத்தானே தெரிந்து வைத்திருக்கிறோம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி போன்ற பிற ஊடகங்களும் ராசிபலன்தானே வெளியிடுகின்றன?
லக்னபலன் வெளியிடுவதில்லையே அது ஏன்? லக்னம் ராசி இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்தான் என்ன? நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி அளவு கொண்ட வான்வெளியை பனிரெண்டு சமபங்குள்ள தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாகப் பிரித்த நமது ஞானிகள் அவற்றிற்கு மேஷம், ரிஷபம், மிதுனம் என பனிரெண்டு பெயர்களையும் சூட்டினார்கள்.
இவை பொதுவான ராசி வீடுகள். நீங்கள் பிறந்த நேரத்தில் பூமியின் கிழக்கு வானில் இவற்றில் எந்த ராசி உதயமானதோ, அதாவது பூமியின் சுழற்சிப் பாதையின்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது.
அதாவது பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதால் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருப்பவருக்கு தோராயமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியும் மாறுவது போன்ற தோற்றம் இருக்கும்.
எனவே பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை லக்னம் மாறிக் கொண்டே வரும். அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் அடுத்தடுத்த லக்னங்களில் மனிதர்கள் பிறப்பார்கள்.
உதாரணமாக சென்னையில் ஒரு குறிப்பிட்ட இரண்டுமணி நேரத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் ஒரே லக்னம் ஒரே ராசியில்தான் பிறக்கும்.
எடுத்துக்காட்டாக மிதுன லக்னம், தனுசு ராசி என்றால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதனையடுத்த கடக லக்னம், தனுசு ராசி என்றும் அதனையடுத்து சிம்ம லக்னம், தனுசு ராசி என்றும் பிறக்கும். அதே நேரத்தில் ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்கு பின்னால் இந்த பனிரெண்டு ராசிகளில் எந்த ராசி இருக்கிறதோ அதுவே அந்த ஜாதகரின் ராசி எனப்படுகிறது.
லக்னத்தின் அளவு தோராயமாக இரண்டுமணி நேரம் என்பதைப் போல ராசியின் அளவு சுமாராக இரண்டேகால் நாள் இருக்கும். ஒரு ராசியில் இரண்டேகால் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளபடியால், சந்திரன் தோராயமாக ஒருநாள் முழுவதும் ஒரே நட்சத்திரத்திலும், இரண்டு நாட்கள் ஒரே ராசியிலும் இருப்பார்.
பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வரும் பொதுவான ராசிபலன் என்பது உங்களின் தோராயமான பொதுப்பலன்தான். அவை துல்லியமானவை அல்ல. இந்த ராசிபலன்கள் உலகில் உள்ள ஒட்டு மொத்தமான அனைவரையும் பனிரெண்டு பகுதிகளாகப் பிரித்து சொல்லப்படுபவைதான்.
இவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பலிக்கும் என்பது நிச்சயம் அல்ல. பலிக்கவும் செய்யாது. ஆனால் லக்னப்படி பலன்கள் என்பது அப்படி அல்ல. அந்த பலன்கள் பிறந்த ஜாதகப்படி கிரகங்கள் அமைந்த விதத்தைத் கொண்டு ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தனியாக சொல்லப்பட வேண்டும் என்பதால் ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் 70 சதவிகிதம் வரை துல்லியமான பலன்களைச் சொல்ல முடியும்.
லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றவைதான். இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல முடியும். சொல்லவும் வேண்டும். அப்போதுதான் அது முறையான ஜோதிட பலன்களாக இருக்கும்.
அது ஏனெனில் லக்னப்படி ஒரு கிரகம் ஒருவருக்கு கெட்டபலன் அளிப்பதாக இருந்தாலும் அவர் பிறந்த ராசிப்படி அந்தக் கிரகம் யோகக்கிரகமாக இருந்தால் முழுமையாக கெடுபலனைச் செய்யாது. அதாவது, லக்னப்படியும், ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து அதன் தசை நடக்கும் போது அந்த கிரகத்தின் தசை பிரமாதமான அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும்.
லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்த கிரகம் விதிக்கப்பட்டிருந்தால் அதன் தசையில் 60 சதவிகித நன்மைகள் நடக்கும். லக்னம், ராசி இரண்டின்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்ய வேண்டிய அமைப்பு இருந்தால் நிச்சயம் அதன் தசையில் கெடுபலன்கள்தான் நடக்கும் என்று கண்களை மூடிக் கொண்டு பலன் சொல்லி விடலாம்.
சரி…….. ராசிப்படி பலன்கள் சொல்லப்படும் வழக்கம் எப்படி வந்தது? லக்னம் என்பது தோராயமாக இரண்டுமணி நேரத்திற்கு ஒரு முறை மாறக்கூடியது. ராசி என்பது ஏறத்தாழ இரண்டு நாள் உடையது என்று முன்பே சொன்னேன்….
நேரத்தை அளவிடும் துல்லியமான கருவிகள் கண்டுபிடிக்கப்படாத முன் காலத்தில், அல்லது நேரக்கருவிகள் பாமரமக்கள் உட்பட அனைவரிடமும் போய்ச் சேராத அந்தக் காலத்தில் சமுதாயத்தின் மேம்பட்ட நிலையினரான அரசகுடும்பத்தினர், மந்திரிகள், தளபதிகள், பணக்காரர்கள் போன்ற உயர் அந்தஸ்து கொண்டவர்களுக்கு மட்டுமே துல்லியமாக நேரக்கணக்கை கணித்து லக்னப்படி பலன் பார்க்கப்பட்டது.
சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கு ஒருநாள் முழுவதும் ஒரு நட்சத்திரமும் இரண்டு நாட்கள் வரை ஒருவரின் ராசியும் இருக்கும் காரணத்தால் ராசி அல்லது நட்சத்திரத்தை வைத்தே தோராயமான பலன்கள் ஜோதிடர்களால் சொல்லப்பட்டன.
அதன்படியே தற்போது வழிவழியாக வரும் மரபுப்படி பெரும்பாலானவர்களுக்கு பொதுப்பலன்களாக ராசிப்படி பலன்கள் சொல்லப்படுகின்றன. தற்போது கடிகாரங்கள் எல்லா இடங்களிலும் புழக்கத்திற்கு வந்து விட்டதாலும், மக்களிடமும் குழந்தை பிறக்கும் சரியான நேரம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாலும் லக்னப்படி பலன் அறிவதே சரியானதும், துல்லியமானதும் ஆகும்

No comments:

Post a Comment