Monday, 16 June 2014

குருப் பெயர்ச்சி ஒரு இயற்கை நிகழ்ச்சி! அதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை

ஓர் ஆண்டில் அவ்வப்போது மழை பெய்யும். ஆனால் சோதிடர்களது காட்டில் ஆண்டு முழுதும் மழை பெய்கிறது. காரணம் குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, இராகு – கேது பெயர்ச்சி என ஆண்டு முழுதும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.
எந்தச் செய்தித்தாளைப் புரட்டினாலும் “குருப் பெயர்ச்சிப் பலன்கள்” பற்றிய செய்திகள் பக்கங்களை நிரப்புகின்றன. குருப் பெயர்ச்சியால் எந்த எந்த இராசிக்காரர்களுக்கு என்ன என்ன பலன் என விலாவாரியாகச் சோதிடர்கள் பலன் சொல்கிறார்கள்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குருபகவான் 13.06.2014 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கடக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். குருபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வியாழக்கிழமை (19.6.2014) காலை 8.31 மணிக்கு மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இரு பஞ்சாங்கங்களின் படி குரு பெயர்ச்சியாகும் வீடு ஒன்றாக இருந்தாலும் நாளும் அங்கு தங்கும் காலமும் 6 நாள் 14 மணி 31 மணித்துளிகளால் முரண்படுகிறது.
“பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் உச்ச வீட்டில் குரு அமர்கிறார். முழு சுப கிரகமான குரு பகவான் வலிமையாக அமர்வதால் இந்தியாவின் அடிப்படை கட்டமைப்புகள் நவீனமாகும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பல வசதி, வாய்ப்புகள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து மக்களுக்கும் கிட்டும்” என ஒரு பிரபல சோதிடர் பலன் சொல்கிறார்.
இன்னொரு சோதிடர் “பொதுவாக உச்ச குரு நன்மைகளை செய்வார். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்கக் கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மைப் பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடிச் சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்குக் கொண்டைக் கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் துணி அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும்” என்கிறார்.
இன்னயின்ன இராசியில் மற்றும் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குக் குருப் பெயர்ச்சி இடம்பெறுவதால் தோஷம் என்று சொல்லி அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் சோதிடர்கள் சொல்கிறார்கள். “மேடம், இடபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய இராசிகளில் பிறந்தோருக்கு தொழில் இழப்பு, இடமாற்றம், கல்வி பாதிப்பு, விரோதம், பொருளழிவு, காரிய இழப்பு என்பன ஏற்பட வாய்ப்புகள் உள்ளன” எனப் சோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள். இந்த இராசிக்கு உரியவர்கள் அதற்கான பரிகாரங்களை செய்து குரு பகவானை பணிந்தால் துர்பலன்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். கோயில்களில் சிறப்பு யாகம், கிரக பரிகாரம், அபிசேகங்கள், அருச்சனைகள் நடைபெறவுள்ளன.
தமிழக அரசியல்வாதிகளுக்குக் குரு பெயர்ச்சியால் ஏற்படும் நன்மை, தின்மை பற்றியும் சோதிடர்கள் பலன் சொல்கிறார்கள்.
இந்த வியாபாரத்தில் சோதிடர்களும் கோயில் பூசாரிகளும் கூட்டணி வைத்து மக்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். தமிழக கோயில்களில் அபிசேகத்துக்கு ரூ.500, பரிகார கோமங்களுக்கு ரூ.3,500 கட்டணம் அறவிடப்படுகிறது. அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு 100 – 1500 டொலர் அறவிடப்படுகிறது. அதற்கான முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கனடாவிலும் கோயில்களில் குரு பகவானைச் சாந்தப்படுத்த பரிகார பூசை நடைபெறுகிறது!
இப்படித் தோஷத்துக்குப் பரிகாரம் தேடி ஓடுபவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.
வடமொழியில் ஜ்யோதி-இஷா (ஒளியியல் – Science of Light) என்பதை ஜோதிடம் என்கிறார்கள். தமிழில் சோதிடம் என அழைக்கப்படுகிறது. வேதத்தின் ஆறுபாகங்களில் ஜோதிடமும் ஒன்று. தமிழிலும் ‘சோதிடக்கலை’ ஆய கலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
மேற்கத்திய முறையில் ஜோதிடத்தைக் குறிக்கும் Astrology என்ற பதம் Astron + Logos என்ற இரண்டு இலத்தீன் சொற்களின் தொகுப்பாகும். Astron என்றால் நட்சத்திரம். Logos என்றால் ஆய்வு. எனவே Astrology என்ற சொல் நட்சத்திரம் பற்றிய ஆய்வு எனப் பொருள்படும்.
இந்திய மற்றும் மேற்கத்திய முறைகள் இரண்டிற்கும் அடிப்படையில் பொதுவான சோதிட நம்பிக்கைகள் காணப்படுகின்றன. வானில் வலம் வரும் கோள்கள் (கிரகங்கள்) நட்சத்திரங்கள் மற்றும் இயற்கை சக்திகளால் பூமியில் உள்ள நீர்நிலைகள், நிலப்பரப்பு, தட்பவெப்பம், பருவகாலங்கள், தாவரங்கள் மற்றும் இதர உயிரினங்கள் எல்லாமே சில மாற்றங்களை அடைவது போலவும் இயல்புகள் பாதிக்கப்படுவது போலவும் மனிதர்களும் அவர்களது நடவடிக்கைகளும் பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது என்பதே இந்த இரண்டு வித சோதிடத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
காலத்தை நாம் இரண்டு வழிகளில் அளக்கலாம். ஒன்று ஞாயிறை மையமாகக் (Geocentric) கொண்டு அளப்பது. மற்றது விண்மீனை (Sidereal) வைத்து (Spica என்ற சித்திரை நட்சத்திர மண்டலத்திற்கு நேர் எதிரே 180 பாகையில் உள்ள புள்ளியை வைத்து) அளப்பது. முன்னது சாயான (Sayana) என்றும் பின்னது நிராயான (Nirayana) என்றும் அழைக்கப்படுகிறது. சாயான என்றால் அசைவது (Tropical Zodiac with precession) என்று பொருள். நிராயான அசையாதது (Fixed Zodiac without precession) என்று பொருள்.
மேல் நாட்டவர்கள் சாயன முறையைப் பின்பற்றுகிறார்கள். இந்திய சேதிடர்கள் நிராயன முறையைப் பின்பற்றுகிறார்கள். எபிமெரீஸ் (Ephemeris) போன்ற தரவுகளைப் பயன்படுத்தி ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன.
இப்போது குருப் பெயர்ச்சி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஞாயிறை வலம் வரும் கோள்கள் ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு மாறுவதையே பெயர்ச்சி (Transit) என்று சோதிடர்கள் சொல்கிறார்கள்.
மேலே எழுதுமுன்னர் சோதிடத்துக்கான அடிப்படை என்ன என்பதைப் பார்த்துவிடலாம்.
(1) வான வீதியில் உள்ள கற்பனை 12 இராசிகள்
(2)வான வீதியில் உள்ள கற்பனை 12 வீடுகள்
(3)வான வீதியில் வலம் வரும் 9 கோள்கள்
(4) வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்கள்
kuru
அண்ட வெளியில் 88 நட்சத்திரக் கூட்டங்கள் (constellations) இருப்பதாக வானியல் அடையாளம் கண்டுள்ளது. இதில் 12 நட்சத்திர கூட்டங்களை மட்டும் சோதிடர்கள் தெரிந்தெடுத்து அவற்றை 12 இராசிகள் என அழைக்கிறார்கள். இந்த இராசிகளில் காணப்படும் நட்சத்திரங்கள் உண்மையானவை. ஆனால் இராசிகளின் உருவங்கள் விண்ணில் காணப்படும் நட்சத்திரங்களைத் தொடுப்பதால் உருவான கற்பனை வடிவங்கள். இராசிச் சக்கரத்தை கற்பனையாக ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட பகுதிகளாகப் பிரிப்பதால் வருவதே பன்னிரண்டு வீடுகள். இது ஒரு விதிக்கட்டுப்பாடற்ற (arbitrary) பிரிப்பு. வானியல் கணிப்பின்படி இராசிகள் 7 பாகை (விருச்சிகம்) தொடக்கம் 45 பாகை (கன்னி) வரை சிறிதும் பெரிதும் ஆகக் காணப்படுகிறது. புவி தன்னைத்தானே தனது அச்சில் ஒரு முறை சுற்றிவர 24 மணித்தியாலங்கள் எடுக்கிறது. இந்த 24 மணி நேரத்தில் இப் புவியைச் சுற்றிலும் கிழக்கு மேற்காக மேலும் கீழும் படர்ந்துள்ள 12 இராசிகளும் (ஞாயிற்றின் பின்புலத்தில்) அடிவானத்தில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றி மறைந்துவிடுகின்றன.
ஒரு குழந்தை பிறக்கும் போது கிழக்குத் திசையில் அடிவானத்தில் உதயமாகிக் கொண்டிருக்கும் இராசியே ஜெனன (உயிர்) இலக்கினமாகும். இதுவே முதல் வீடாகும். ஒரு இலக்கினம் 30 பாகை – காலம் சுமார் 120 மணித்துளி – 2.25 நட்சத்திரங்கள் அல்லது 9 நட்சத்திரப் பாகைகள் கொண்டது.
குழந்தை பிறக்கும் போது சந்திரன் நின்ற இராசியே ஜெனன (உடல்) இராசியாகும். இந்த ஜெனன இராசியைக் கொண்டே இராசி பலன் காண வேண்டும் எனச் சோதிடம் சொல்கிறது. மேலும் ஒருவரது இலக்கினம், பிறந்த சாதகத்தில் காணப்படும் நவக்கிரக நிலைகள், தற்போது கோசார அடிப்படையில் கிரகங்கள் எங்கு இருக்கின்றன என்பதை வைத்தே பலன் சொல்ல வேண்டும். செய்தி ஏடுகளில் வரும் இராசி பலன்கள், புத்தாண்டுப் பலன்கள், கிரகப் பெயர்ச்சிப் பலன்கள் அனைத்தும் பொதுவான பலன்களே.
சோதிடர்களில் பலர் ஒழுங்காகப் படிக்காது, வேறு எந்த வேலையும் செய்யத் திறமை இல்லாது ஏமாற்றிப் பிழைப்பு நடத்த சோதிடத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். கனடாவுக்கு வரும் சோதிடசிகாமணிகள், சோதிட சக்கரவர்த்திகள், சோதிட பண்டிற்றுகள், சோதிட ஆசான்கள் பேரளவு படியாத தெலுங்கர், மாலையாளிகள் ஆவர். இவர்கள் மூடநம்பிக்கையைப் புகுத்தி தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறார்கள். அதற்கு இங்குள்ள செய்தித்தாள்கள் பணத்துக்காக முழுப்பக்க சோதிட விளம்பரங்களை வெளியிட்டு சோதிடர்களது சுரண்டலுக்கு வழி கோலுகின்றன.
இதில் மலையாள பகவதி ஜோதிடம் பண்டிட் துல்சிதார் சுவாமிஜி (கேரளா) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரொறன்ரோவில் ஒரு கடை மேல்மாடியில் கூடாரம் அடித்து இங்குள்ள சோணகிரிகளுக்கு கைரேகை, ஜாதகம், முகநாடி ஆகியவை கொண்டு மிகத் துல்லியமாக நடந்தவை, நடக்கவிருப்பவை பற்றிய விபரங்களைக் கூறுவார். கண்ணூறு, நாவூறுக்கு வெள்ளிக்கிழமை விலையில்லாமல் நூல் கட்டப்படும். கல்வி, உத்தியோம், தொழில், வியாபாரம், இலட்சுமி வசீகரம், நீதிமன்ற வழக்குகள், குழந்தைப் பாக்கியம், சர்ப்ப தோஷம், கர்ப்ப தோஷம், கஸ்ட நஸ்டங்கள், வாகனப் பொருத்தம் என எல்லாச் சிக்கலையும் இவர் தீர்த்து வைப்பாராம்.
இந்தளவு மாயம், மந்திரம், வித்தை தெரிந்த இவர் தனது கைரேகை, ஜாதகத்தைப் பார்த்து, தோஷங்களைப் போக்கி, கஸ்ட நஸ்டங்களை நீக்கி, இலட்சுமியை வசீகரம் செய்து, எல்லாச் செல்வங்களும் பெற்று மகாராசா மாதிரி கேரளாவிலேயே வாழலாமே? ஏன் கனடாவுக்கு வரணும்? வந்து பண்டாரம், பரதேசி போல குளிரில் நடுங்கி, ஒடுங்கி வாழ வேண்டும்? கல்வி கேள்விகளில் மேம்பட்ட தமிழ் மக்கள் மலையாள சோதிடரிடம் ஏமாறலாமா?
உண்மையான இறை தத்துவம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறப்பதற்கு முன் அவன் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைக்கு – சென்ற பிறவிகளில் செய்த கர்மவினைகளுக்கு – ஏற்ப இறைவனால் படைக்கப்படுகிறான். இது அவனது தலையெழுத்து. இந்த தலைவிதியை யாரும் அழித்தெழுத முடியாது.
ஆனால், சோதிடம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறக்கும்போதுள்ள கோள்களின் நிலையே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிறது.
அப்படியாயின் ஒருவன் வாழ்வைக் கிரகங்கள் தீர்மானிக்கின்றனவே தவிர எல்லாம் வல்ல எல்லாம் தெரிந்த எங்கும் நிறைந்த இறைவன் அல்ல என்பது உறுதியாகிறது.
ஆக, சோதிடத்தை நம்புகிறவன் இறைவனை மறுக்கிறான். அவன் நாத்திகனாகிறான். அது போலவே வாஸ்துவை நம்புகிறவன் அதைவிடப் பெரிய நாத்திகன். காரணம், வாசலை மாற்றி அமைத்தால் வாழ்வே மாறுகிறது என்றால், வாழ்வை இறைவன் தீர்மானிப்பதில்லை, கிரகங்களும் தீர்மானிப்பதில்லை, ஒரு வீட்டின் வாசலும் யன்னலும் இருக்கும் இடங்களே தீர்மானிக்கின்றன என்றாகிறது. அதன்படி, வாஸ்துவை நம்புகிறவன் இறைவனையும் சோதிடத்தையும் மறுக்கிறான்!
மேற்கத்திய ஜோதிட முறை “Geo Centric” எனப்படும் பூமியை மையப்பொருளாகக் கொண்டு பூமியிலிருந்து பார்க்கும்பொழுது சூரியன் செல்லும் சுழற்சிப் பாதையில் அமைந்திருக்கும் இராசிச் சின்னங்களின் (Signs) அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன.
உண்மையில் புவி ஞாயிறைச் சுற்றிவருகிறது ஆனால் எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றிவருவது போன்ற மாயை (illusion) ஏற்படுகிறது. இந்த ஞாயிறின் தோற்றப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதி இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது கண்ணுக்குப் புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகள் கொண்ட 12 வீடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியவாறு இராசிகள் பத்து, நூறு ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படும் விண்மீன் கூட்டங்கள் (Constellations) ஆகும். அவற்றைத் தொடுத்து வரும் உருவங்களுக்குக் கிடா (மேஷம்) காளைமாடு ( ரிஷபம்) மிதுனம் (இரட்டையர்) நண்டு (கடகம்) சிங்கம் (சிம்மம்) கன்னி, துலாக்கோல் (துலாம்) தேள் (விருச்சிகம்) வில் (தனுசு) மகரம் (பாதிமீன் பாதி மனிதன்) கும்பம் (குடம்) இரட்டை மீன்கள் (மீனம்) எனப் பெயர் இட்டுள்ளார்கள்.
இட்ட பின்னர் எந்த விதிக்கட்டுப்பாடுமின்றி அந்த உருவத்துக்குரிய குணாம்சங்களை அந்த இராசியில் பிறந்தவர்களுக்கு மாடேற்றி விட்டார்கள். எடுத்துக்காட்டாக சிங்க இராசியில் பிறந்த ஒரு பெண் சிங்கம் போல மூர்க்க குணம் படைத்தவளாக இருப்பாள்! விருச்சிக இராசியில் பிறந்தவள் தேள் போல் கொட்டுவாள்!
16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் புவி இந்த அண்டத்தின் நடுவில் இருப்பதாகவும் ஞாயிறு உட்பட ஏனைய கோள்கள் அனைத்தும் புவியைச் சுற்றி வருகின்றன என்றே மேல்நாட்டு தத்துவ அறிஞர்களும் அறிவியலாளர்களும் நம்பி வந்தனர். மேல் நாட்டில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் (கிபி 150) வாழ்ந்த Ptolemy என்ற வானியலாளர்/சோதிடர் கூட புவியை அனைத்துக் கோள்களும் சுற்றி வருகின்றன என்ற அரிஸ்தோட்டரின் புவிமையக் கோட்பாட்டையே (Geocentric Theory) நம்பினார்.
கிபி 1512 இல் நிக்கோலஸ் கோபெர்னிக்ஸ் (Nicolas Copernicus) என்னும் வானியலாளர்தான் ஞாயிறை மையமாகக் கொண்டு ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கோட்பாட்டை (Heliocentric theory of Planetary Motion) நிறுவி அதுவரை புவிதான் அண்டத்தின் மையம் என்ற கோட்பாட்டை உடைந்தெறிந்து எல்லோரையும் குறிப்பாக போப்பாண்டவரை மிரள வைத்தார். அவர் மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதுதான் அவர் எழுதிய ஞாயிறு மையக் கோட்பாட்டை நிறுவும் நூல் வெளிவந்தது.
நட்சத்திரக் கூட்டங்கள் (இராசிகள்) போலவே 9 கிரகங்களும் ஞாயிறைச் சுற்றி வெவ்வேறு பாதையில், வெவ்வேறு வேகத்தில், வெவ்வேறு தொலைவில் வலம் வருகின்றன. அந்தந்த கிரகங்கள் பூமியை/சூரியனை சுற்றி வரும் காலத்திற்கு ஏற்ப ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு இடம் பெயர எடுக்கும் காலம் பின்வருமாறு: (Heliocentric theory of Planetary Motion)
அண்டவெளியில் காணப்படும் விண்மீன்கள், கோள்கள் எல்லாம் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை நகர்கின்ற வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது மாறுபடுகின்றது. சந்திரன் ஓர் இராசியை 2 1/4 நாளில் கடக்கின்றது. சூரியன் அதே இராசியைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது.
குருவுக்கு (வியாழன்) ஓர் ஆண்டும் இராகு (Ascending Node) கேது (Descending Node) இரண்டும் 1 1/2 ஆண்டும் சனிக்கு 2 1/2 ஆண்டும் ஆகின்றன. இராகு கேது கோள்கள் திடப்பொருளால் ஆனவை அல்ல. அவை நிழற்கோள்கள்.
வியாழன் சூரியனை சுற்றிவர 12 ஆண்டுகள் எடுக்கிறது. 12 இராசிகள் உள்ள சூரியவீதியில் வியாழன் ஒவ்வொரு இராசியிலும் சுமார் ஓர் ஆண்டு தரித்து நிற்கும். ஓர் ஆண்டு கழித்து வியாழன் அந்த இராசியில் இருந்து விலகி அடுத்த இராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் குருப் பெயர்ச்சி என்று கூறி அதற்குப் பலனும் சொல்கிறார்கள். உண்மையில் வியாழன் வெறுமனே ஞாயிறைச் சுற்றி வருகிறது.
அது இராசி வீடுகளில் புகுந்து வெளியேறுகிறது என்பது எமது கற்பனையாகும். அது மட்டுமல்ல அப்படிப் புகுந்து வெளியேறும் போது அந்தந்த இராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்லது, கெட்டது நடக்கும் என்பதும் கற்பனையே.
வியாழன் ஞாயிறு மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய கோளாகும். புவியின் விட்டத்தைவிட 11 மடங்கு நீளமானது. அதன் காரணமாக உரோமரது முதன்மைக் கடவுளின் பெயர் (Jupiter) இதற்குச் சூட்டப்பட்டது. கிரேக்கர் இதற்கு Zeus என்ற கடவுளின் பெயரைச் சூட்டினார்கள். சுமார் 1,300 புவிகளை இதற்குள் அடக்கலாம்! தொலைநோக்கி மூலம் பார்க்கும் பொழுது வியாழன் மிக அழகாக இருக்கும். நீலம், ஊதா, மஞ்சள், செம்மஞ்சள் (Orange) நிறத் திட்டுக்கள் காணப்படுகின்றன.
அண்டவெளியில் தன்பாட்டில் ஞாயிறைச் சுற்றிவரும் வியாழன் கோள் கெட்டது செய்யும் போது அதற்குப் பரிகாரமாக அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் நன்மை பெறலாம் என்பது வெறும் நம்பிக்கையே தவிர உண்மையன்று. 588.50 மில்லியன் கிமீ (353.1 மில்லியன் மைல்)க்கு அப்பால் இருக்கும் வியாழனுக்கு இங்கு அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் அது அந்தக் கோளைத் திருப்திப் படுத்துமா? குளிர வைக்குமா?
அறிவியல் கண்டுபிடித்த வானொலி, தொலைக் காட்சி ஆகியவற்றைப் பயன்படுத்திச் வியாழ பெயர்ச்சியை நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்யப் போகிறார்களாம்!
வியாழ பகவான் பற்றிய புராணக் கதைகளுக்குப் பஞ்சமில்லை. ஒன்பது கிரகங்களிலேயே, இதிகாச – புராணங்களில் அதிக அளவில் இடம் பெற்றவர்கள் என்றால், அவர்கள் தேவகுருவான வியாழ பகவானும் – அசுர குருவான சுக்கிராச்சாரியார் என்றே சொல்லலாம். குரு அருள் இன்றேல், திருவருள் இல்லை, குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்றெல்லாம் பழமொழிகளே உண்டு. தேவகுருவின் உபதேசங்களும் அசுர குருவின் உபதேசங்களும் மிகவும் புகழ் பெற்றவை!
ஒரு சமயம், இந்திரன் துர்வாசரின் சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தான். துயர வசப்பட்ட அவன், தேவ குருவான வியாழ பகவானைத் தேடி ஓடினான். அப்போது வியாழ பகவான் கங்கைக் கரையில், கிழக்கு நோக்கி சூரியனைப் பார்த்து நின்றபடி, ஜபம் செய்து கொண்டிருந்தார். தவம் செய்து கொண்டிருந்த அந்த பகவானின் திருவடிகளில் இந்திரன் விழுந்து வணங்கினான். தன் துயரையெல்லாம் சொல்லி அழுதான்.
அதைக்கேட்ட வியாழ பகவான் அவனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசமும் செய்தார். ‘‘தேவேந்திரா! ஏன் அழுகிறாய்? விவரம் அறிந்தவன், நீதி அறிந்தவன் இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்ட காலத்திலும் பயப்பட மாட்டான். ஏனென்றால், செல்வங்களும் இப்போது உனக்கு நேர்ந்ததைப் போன்ற சிக்கல்களும் நிரந்தரமானவை அல்ல! அனைத்தும் முற்பிறப்புகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே உண்டாகின்றன. வாழ்வில் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். வண்டிச் சக்கரம் உருளும்போது, கீழே இருந்த பகுதி மேலே போவதும் மேலே இருந்த பகுதி கீழே வருவதுமாக இருக்கிறது அல்லவா?
அதைப்போல, நன்மைகளால் உயர்வு அடைவதும் தீமைகளால் கீழ்நிலை அடைவதும் மாறி மாறி வரத்தான் செய்யும். அப்படி இருக்கும்போது, நீ ஏன் அழுகிறாய்? நல்லதோ, கெட்டதோ எவ்வளவு காலமானாலும் சரி! அவற்றை அனுபவிக்காமல் தப்ப முடியாது. யாராக இருந்தாலும், தாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று சாமவேதத்தில் பரமாத்மா பிரம்மனுக்கு உபதேசித்திருக்கிறார்’’ என்று வியாழ பகவான் இந்திரனுக்குக் கூறினார்.
இந்தக் கதையின் படி எல்லாம் விதிப்பயன் படிதான் நடக்கும். அதனை மாற்ற முடியாது. ஆனால் சோதிடர்கள் ஒரு மனிதனது வாழ்க்கையின் இன்ப துன்பத்தை, உயர்வு தாழ்வை கோள்கள், நட்சத்திரங்கள் தீர்மானிக்கிறது என்கிறார்கள். இதில் எது சரி? விதிப்படிதான் வாழ்க்கை என்றால் சோதிடர்கள் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகர்கள் எனப் பொருள் படுகிறது!
வானியல் பற்றிப் போதுமான அறிவு இல்லாத காலத்தில் வெறும் கண்ணால் வானத்தைப் பார்த்தபொழுது நகர்ந்த கோள்களை தெய்வங்கள் எனக் கிரேக்க மற்றும் உரோமானியர்கள் நம்பினர். அதன் காரணமாகவே உரோம கடவுள்கள் பெயரையே அவற்றுக்குச் சூட்டினார்கள். இந்தியர்களும் கோள்கள் தெய்வசக்தி படைத்தவை என்று நம்பினார்கள்.
இது காறும் கூறியவற்றால் வியாழன் 588.50 மில்லியன் கிமீ (58.85 கோடி) தொலைவில் ஞாயிறைச் சுற்றிவருகிற ஒரு கோளாகும். அது ஒரு சடப்பொருள். பெரும்பாலும் கிரகங்கள் பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்களால் மற்றும் இன்னபிறவற்றால் ஆனவை. A true-color image of Jupiter taken by the Cassini spacecraft. The Galilean moon Europa casts a shadow on the planet’s cloud tops.ஆனால் வியாழன் வாயுவினால் ஆனது.
அவை நம்மைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் மிகமிகமிகமிக குறைவு. ஏனென்றால் அவை பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. அங்கு மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று, தண்ணீர் இல்லை. கிரகங்கள் எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் அவற்றின் ஈர்ப்பு விசை பூமியை எட்டவே எட்டாது! கோள்களுக்கும் மனிதனுக்கும் தொடர்பே இல்லை.
பூமியின் ஈர்ப்பு விசை கூட வானில் சில கிலோ மீட்டர் தூரம்தான்! அதுபோல மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கே இருக்கும். எனவே கிரகங்களின் ஈர்ப்பு விசையால் பூமியிலுள்ள மனிதர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பேயில்லை! அவைகளிலிருந்து எந்தத் தீங்கு தரும் வாயுவோ – கதிர்வீச்சோ ஈர்ப்பு விசையோ பூமிக்கு வர வாய்ப்பேயில்லை! பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.
சில மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள கிரகங்களால் பாதிப்பு இல்லை என்கின்ற பொழுது பல மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களால் பாதிப்பு என்பது பித்தலாட்டமாகும். ஒளியாண்டு என்பது ஒளி ஒரு நொடிக்கு 1,76,000 கிமீ வேகத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தூரம். பத்து ட்ரில்லியன் கிமீ க்கு சற்றே குறைவு. அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.
சூரியனிலிருந்து தான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சு, நீலக்கதிர்வீச்சு, எக்ஸ் கதிர் வீச்சு என்று பூமியை இடைவிடாமல் தாக்கிக் கொண்டு இருக்கின்றன! இவ்வளவு ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகளையே புவியைச் சூழ்ந்துள்ள, பூமிக்கு கவசமாக அமைந்துள்ள காற்று மண்டலம் தடுத்து நிறுத்தி அவற்றை சின்னா பின்னமாக்கி, பூமியை வந்தடையாமல் செய்துவிடும் போது வலிமை குறைந்த கிரகங்களிலிருந்து வரும் வலிமையற்ற எந்த ஆற்றலும் சக்தியும் காற்று மண்டலத்தைக் கடந்து பூமிக்கு வந்து சேர முடியுமா?
சூரியனில் ஏற்படுவது போன்ற அணுச் சேர்க்கையோ அணு வெடிப்போ கிரகங்களில் கிடையாது. எனவே கிரகங்களிலிருந்து கதிர் வீச்சோ வேறு வகையான காந்த சக்தியோ ஏற்பட்டு மனித வாழ்வை பாதித்து விடுமோ என்ற அச்சத்திற்கே இடமில்லை!
கிரகங்களுக்கிடையே ஈர்ப்பு விசை தவிர வேறு விசைகள் இல்லை என்பதே அறிவியல் ஏற்கும் கொள்கை! ஏதாவது கோள் மனிதரது வாழ்க்கை முறையைப் பாதிக்கும் என்றால் அது நாம் வாழும் இந்தப் புவிதான். நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் எமது உடல்நலத்தைத் தீர்மானிக்கிறது. ஆனால் சோதிடர்களுக்கு புவி ஒரு கோள் என்பது தெரிந்திருக்கவில்லை. அதனால் அதை கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.
இந்நிலையில் கிரகங்களால் தனி மனித வாழ்வில் தாக்குதல் ஏற்பட்டு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்று சோதிடம் சொல்வது ஏற்கக் கூடியதேயல்ல! அது ஒரு புரட்டாகும்.
தமிழினம் கல்வி, பொருண்மியம், தொழில், கலை, பண்பாட்டுத் துறைகளில் மேலோங்க வேண்டும் என்றால் அது மூடநம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். நாமே நமது மூளைக்குப் போட்டிருக்கும் விலங்கை உடைக்க வேண்டும்.
இந்த இடத்தில் முண்டாசுக் கவிஞன் பாரதி தமிழனைப் பார்த்துக் கூறிய அறிவுரையை எல்லோரும் ஊன்றிப் படிக்க வேண்டும். படிப்பதோடு நின்று விடாமல் மூடநம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும். புது மனிதர்களாக வாழப் பழக வேண்டும். பாடுபட்டுப் பனியிலும் வெய்யிலும் உழைக்கும் பணத்தை திருவிழா, தேர், தீர்த்தம், பூசை, பரிகாரம் என்பவற்றில் கரியாக்கக் கூடாது. அந்தப் பணத்தை வன்னியிலும் சம்பூரிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்தக் கொடுத்தால் நிறையப் புண்ணியம் கிடைக்கும்!
“புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதே! தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆடயிடங் கொடுத்து விட்டாய்! தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் எனப் பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.”
எனவே ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் குரு பெயர்ச்சி ஒரு இயற்கையான நிகழ்வு. குரு பார்வை கோடி பெறும் என்பது கோள்கள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் மக்கள் கொண்டிருந்த மூடநம்பிக்கை ஆகும்.
மண்ணையும் விண்ணையும் துல்லியமாக ஆய்வு செய்வதில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய அறிவியல் காலத்தில் தமிழர்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு புலன் அறிவு, கவனித்தல், சோதித்து அறிதல், ஊகித்து அறிதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவை அடித்தளமாகக் கொண்டது. பழக்கத்தின் காரணமாக நமது முன்னோர்கள் நம்பிவந்த நம்பிக்கைகளை நாம் கண்மூடித்தனமாக நம்பி வருகிறோம். இன்று அறிவியல் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. வானியலாளர்கள் மண்ணையும் விண்ணையும் அளந்து வருகிறார்கள். அந்த அறிவியலின் அடிப்படையில் எமது நம்பிக்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும். செக்கு மாடுகள் போல் ஒரே இடத்தை சுற்றிச் சுற்றி வரக்கூடாது.
வியாழன் (குரு) புவியிலிருந்து 588.50 மில்லியன் கிமீ தொலைவில் புவியைப் போலவே ஞாயிறைத் தன்பாட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் வாயுவினால் ஆன கோள். அது ஒரு இயற்கை நிகழ்ச்சி! வியாழன் கடந்த 5,000 கோடி ஆண்டுகளாக ஞாயிறைச் சுற்றிய வண்ணம் உள்ளது. இராசிகள், இராசி சக்கரம், வீடுகள் எல்லாம் கற்பனை. மனிதன் தானாக உருவாக்கிக் கொண்டவை. எனவே 588.50 மில்லியன் (58.85 கோடி) கிமீ தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கும் வியாழ கோளால் புவியில் வாழும் மக்களுக்கு நன்மையும் இல்லை தின்மையும் இல்லை!

kol

No comments:

Post a Comment