Thursday 12 June 2014

பீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும்?

காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தை சேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை. கடினமாக உழைத்து சம்பாதித்த பணம், பெட்டியில் அதிகநாள் தங்குவதில்லை. இன்னும் சிலருக்கு அதிகநேரம் கூட தங்குவதில்லை. எப்படியோ, எந்த விதத்திலோ பணம் ஐஸ்கட்டி போல கரைந்துவிடுகிறது. எதனால் இப்படி? இதற்கு தீர்வு இருக்கிறதா? என வாஸ்து சாஸ்திர ரீதியாக ஆராய்வோம். வீட்டின் ஈசான்ய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ அமைத்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம். அதனால் இந்த ஈசான்யத்தில் பணம் வைத்தால் சம்பாதித்த பணத்தை ஆற்றில் போட்ட கதைதான். அதுபோல, அக்கினி மூலையில்  பீரோ அமைப்பதும் நல்லதல்ல. அக்கினி மூலை என்பது நெருப்புக்குரிய பகுதி. நெருப்பில் இட்ட பொருள் யாவும் ‘சுவாகா’ ஆவதுபோல, பணம் எப்படி கரைந்தது என கணக்கு பார்க்க முடியாத அளவில் செலவு ஏற்படும். முக்கியமாக மருத்துவசெலவுகளுக்கு பணம் செலவாகும். ஒரு மருந்து கடை வைக்கும் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்கே பணம் சரியாக இருக்கும். “சரிப்பா.. பணத்தை எப்படியோ கஷ்டப்பட்டு சம்பாதித்து வீட்டுக்கும் வந்துவிட்டேன். இந்த பணத்தை வாஸ்துபடி எந்த பீரோவில்தான் வைப்பது?” என நீங்கள் கையில் பணத்தை வைத்துக்கொண்டு குழப்பத்துடன் நீங்கள் நிற்பது எனக்கு புரிகிறது. அதற்கு நம் விநாயகப் பெருமான் வழிகாட்டுகிறார். திருக்கோயில்களில், கன்னி மூலையில் (தென்மேற்கு) வீற்றிருக்கும் விநாயகர், “கன்னி மூலை கணபதி” என்றே அழைக்கப்படுகிறார். தடைகளை நீக்கி, நல்லவை வளர செய்யும் அவர் விரும்பும் பகுதியே கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு பகுதியாகும். அதனால், கன்னிமூலை என்று சொல்லக்கூடிய நிருதி மூலை அதாவது தென்மேற்கு பகுதி பீரோவில் பணம் வைத்தால் விபரீத செலவுகள், தேவையற்ற செலவுகள் ஆகியவை குறையும். தென்மேற்கில் அமைந்த பீரோவை, கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவில் எந்த தோஷமும் அண்டாமல் இருக்க, மஞ்சள் துண்டை விநாயகராக பாவித்து வைக்க வேண்டும். ஸ்ரீமகாலஷ்மி படத்தை பீரோவின் உள்ளே ஒட்டி வைக்கலாம். இதனால் மங்கள காரியங்கள் செய்ய  போதிய பணம், நகை சேரும். அதுபோல, தினமும் அன்றாட செலவுக்கு பணம் எடுப்பதாக இருந்தால், தென்மேற்கு பீரோவில் இருந்து பணம் எடுப்பதை விட, வாயுமூலை எனப்படும் வடமேற்கில் சிறிய அலமாரி அமைத்து, அதிலே கொஞ்சம் பணம் வைத்து தினசரி செலவுகள், அவசர செலவுகளுக்கு பணம் எடுப்பதே நல்லது. அந்த அலமாரி கிழக்கு நோக்கி அமைக்கலாம். இடம் இல்லாத பட்சத்தில் வடக்கு சுவற்றில் அலமாரி அமைத்து, தெற்கு நோக்கியும் வைக்கலாம். இதனால், அன்றாட செலவுக்கு திண்டாட்டம் இல்லாத அளவில் பண வரவு சிறப்பாக இருக்கும்!

No comments:

Post a Comment