Thursday, 13 November 2014

வெற்றிலை

வெற்றிலை
வெற்றிலை உடல் உறுப்புக்களை மட்டுமின்றி உள்ளுறுப்புகளான சுரப்பிகளை தூண்டி நன்கு செயல்பட வைப்பது ஆகும். வயிற்றிலிருந்து துன்பம் செய்யும் வாயுவைச் சமன் செய்து வெளியேற்றுவதோடு செரிமானத்தைச் சீர்படுத்தக் கூடியது ஆகும். மேலும் உடலில் சுருங்கி விரியும் தன்மையுடைய உறுப்புக்களை ஒழுங்காகச் செயல்பட வைப்பதாகும் காயங்களையும், புண்களையும் சீழ் பிடிக்காமல் ஆற்றக்கூடியது.
வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால் ஒரு விதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதால் விட்டு விட்டு முறையாக வலிக்கின்ற கடும் வயிற்று வலி குணமாகும். இந்த எண்ணெயை மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ்பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும்.
உள்ளுக்கு சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பற்றிய சளி, இருமல், மூக்கொழுக்கு ஆகிய நோய்கள் குணமாகும்.வெற்றிலைக் கொடியில் வரும் காய்கள் வயிற்றுக் கோளாறுகளைப் போக்கக் கூடியது. வெற்றிலையில் நீர்ச்சத்து 85 சதவீதம் முதல் 90 வரை உள்ளது.
புரதச்சத்து, கொழுப்புச் சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து,பச்சையம் மாவுச்சத்து, நிகோடினிக் அமிலம், வைட்டமின் `சி' சத்து, வைட்டமின் ஏ, தயாமின், ரிபோபிளேவின் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் ஐயோடின் , எண்ணெய் சத்து, சத்தூட்டம் 44 கலோரி, இரும்புச்சத்து டானின் என்னும் நிறமி என ஒரு மருத்துவச் சாலையையே உள்ளடக்கியுள்ளது.
வெற்றிலையை நசுக்கி வலியுள்ள முகப்பருக்கள் மீதும் வீக்கமுற்று வலிக்கின்ற போதும் மேல் பற்றாகப் போட விரைவில் வீக்கமும் வலியும் குறைந்து நலம் உண்டாகும்.
வெற்றிலையை நெருப்பில் காட்டி வதக்கி அடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக மேல் வைத்துக் கட்டுவதால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு குழந்தை சரியாகப் பால் குடிக்காத போது பால் கட்டிக் கொண்டு மிக்க வேதனை தரக் கூடிய மார்பகக் கட்டியும் கரைந்து நலம் செய்யும்.
காது வலி கண்ட போது வெற்றிலைச் சாறு இரண்டு அல்லது மூன்று துளிகள் காதினுள் விடுவதால் காது குத்தல், காது வலி குணமாகும். தலைக்கணம் கண்டு தலைவலி ஏற்படும் போது வெற்றிலைச் சாற்றை 2-3 துளிகள் மூக்கினில் விட்டு உறிஞ்சுவதால் தலை பளு குறையும்.
உடலில் தீப்பட்டதால் காயங்கள் ஏற்படும் போது இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக் கட்ட விரைவில் புண்கள் ஆறும். இளம் வெற்றிலைக் கொடி வேரும், மிளகும் சேர்த்து சாப்பிட்டு வர கருத்தடைக்கு உதவும்.
சிறு குழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்பட்டு வேதனையுறும் போது வயிற்றுப் பொருமல் வலி ஆகியன வந்த போதும் வெற்றிலைக் காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து ஆசன வாயினுள் நுழைத்து வைக்க சிறிது நேரத்தில் மலம் வெளிப்பட்டு குழந்தையின் வயிற்றுத் தொல்லைகள் போகும்.
இரண்டு அல்லது மூன்று வெற்றிலையுடன் 4 அல்லது 5 மிளகு சேர்த்து தீநீர் வைத்து சிறுவர்களுக்குக் கொடுக்க செரியாமை உடன் போகும். 50மி.லி தேங்காய் எண்ணெயில் 5-6 வெற்றிலையைப் போட்டு கொதிக்க விட்டு இலை நன்றாக சிவந்து பொரிந்ததும் எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படை ஆகியவற்றின் மேல் தடவி வர விரைவில் குணம் உண்டாகும்.
வெற்றிலைச் சாறு ஒரு பங்கும் தண்ணீர் இரண்டு பங்கும் சேர்த்து அன்றாடம் பருகிவர நன்கு சிறுநீரை வெளியேற்றும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையைச் சாறு பிழிந்து அத்தோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினம் ஒருமுறை பருகிவர உடல் நரம்புகள் பலம் பெறும்.

No comments:

Post a Comment