Saturday, 15 November 2014

பக்தி யோகம்

யோக மார்க்கத்தில் ஐந்து முக்கிய யோக முறைகளில் பக்தி யோகம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் உணர்வு மிகுந்த ஆளாக இருந்தால் நீங்கள் பயணிக்க வேண்டிய யோக மார்க்கம் பக்தி என்பதே ஆகும். பக்தி என்பது நம் உணர்ச்சிகளால் உருவாகக்கூடியது. பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பக்தி காற்றின் வடிவம் கொண்டது.  நம் உணர்வுகளும் காற்றை போல நிலையற்றது அதே சமயம் இவ்வுலகில் காற்று இல்லாமல் வாழவும் இயலாது. 


நம் கலாச்சாரத்தில் பக்தியோகம் பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் தென்னகம் பக்தியில் மிக சிறப்பு வாய்ந்தது என பாகவதமும் , நாரத பக்தி சூத்திரமும் சொல்லுகின்றது. சிவ பக்தியில் மிகுந்த நாயன்மார்களும், வைணவ பக்தியில் மிகுந்த ஆழ்வார்கள் என பக்தியில் அதிக எண்ணிக்கையாளர்களை கொண்டது தமிழ் தேசம். ஆனால் இதெல்லாம் வரலாறு, தற்சமயம் நம் நிலை..?

இறைவனை தியானிக்கும் பொழுது தேவையற்ற சிந்தனை வருகிறது என நினைக்கிறோம். உதாரணமாக உங்கள் குழந்தை பற்றியோ சிலருக்கு.. காதலி நினைவு, சிலருக்கு நண்பர்களின் நினைவு, தொழில் என மனது அலைபாயும். இவ்வாறு ஆன்மீகத்தில் ஈடுபடும் பலருக்கு தங்கள் அலைபாயும் உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்துவது என தெரிவதில்லை. அதனால் அவர்களுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடுவது உண்டு. இவ்வுணர்ச்சி அதிகமாகி அவர்களை ஆன்மீகத்தை விட்டே வெளியேற வைக்கும், இவற்றை தவிர்க்க நல்ல மருந்தாக அமைவது பக்தியோகம்.

பெற்றோர், காதலன்/ காதலி , குழந்தை, நண்பர் என உங்கள் மனம் உறவால் வசப்பட்டு அதனால் எழும் உணர்வால் நிரப்பப்பட்டு இருக்கலாம். உங்களின் உணர்வுகளை விட்டுவிட்டு வாருங்கள் அப்பொழுது தான் இறைவனை காணலாம் என சொன்னால் அது எப்பொழுதும் முடியாது. மீனை தண்ணீரை தாண்டி வா உனக்கு வாழ கற்று தருகிறேன் என சொல்லுவதை போன்றதே இச்செயல்.  பல மதங்கள் இச்செயலை தான் செய்கின்றன. ஆனால் ஆன்மீகம் உங்களின் அடிப்படை உணர்வு மிகுதியை வைத்தே உங்களை மேம்படுத்தும்.

உலக உயிர்களின் மேல் வைக்கும் உணர்வுகளை நாம் இறைவனிடத்தில் செலுத்தி அதனால் இறைவனுடன் கலப்பதே பக்தி யோகம்.

இறைவனை நீங்கள் தாயாக, தந்தையாக கொண்டு பக்தி செய்யலாம். பெரும்பாலும் இப்படித்தான் பக்தி செய்கிறார்கள். காதலனாக காதலியாக கண்டு பக்தி செய்யலாம்.  ஐய்யயோ இது தவறாயிற்றே என பாவச்செயலை போல சிந்திக்க வேண்டாம். இதுவும் பக்தியே. ஆண்டாளும், மீராவும் இதைத்தானே பக்தியாக செய்தார்கள்? மேலும் குழந்தையாக, நண்பனாக, முதலாளியாக இப்படி ஐந்துவகையாக உணர்வை கொட்டி பக்தி செய்யலாம்.

பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் பக்தியில் பலராலும் கொண்டாடப்படும் தெய்வாம்சம். இதன் காரணம் ஸ்ரீக்ருஷ்ணர் வாழும் காலத்திலேயே இந்த ஐவகையான முறையில் பக்தி செய்யப்பட்டவர், யசோதையால் வாத்சல்யம் (குழந்தையாக), கோகுலத்தில் கோபியரிடம் தாசியம் (அடிமை தன்மை), பாண்டவர்கள் மற்றும் பிருந்தாவனத்தில் இருப்பவர்களின் பிரச்சனைக்கு சாந்தம் (பெற்றோராக), அர்ஜுனனுக்கு சகியம் ( நண்பன்), ராதைக்கு மதுரம் ( காதலன்) என பக்தி செய்யப்பட்டதால் கண்ணன் அனைவராலும் வணங்கப்படுகிறார்.  

இந்த ஐவகை பக்தியும் பஞ்சபூதத்தின் அடிப்படையில் உருவானது.

இறைவனை குழந்தையாக பாவனை செய்தல் எனும் வாத்சல்யம் பஞ்ச பூதத்தில் அக்னியை குறிக்கும். இறைவனை நண்பனாக பாவனை எனும் சகியம் பஞ்ச பூதத்தில் ஆகாயத்தை குறிக்கும்.  இறைவனை முதலாளியாக்கி நம்மை அடிமையாக பாவனை செய்தல் எனும் தாசியம் பஞ்ச பூதத்தில் பூமியை குறிக்கும்.
இறைவனை , காக்கும் தந்தையாக பாவனை செய்தல் எனும் சாந்தம் பஞ்ச பூதத்தில் காற்றை குறிக்கும்.  இறைவனை காதலனாக பாவனை செய்தல் எனும் மதுரம் பஞ்ச பூதத்தில் நீர் தன்மையை குறிக்கும். இந்த பக்தி வழிமுறையையும் பஞ்ச பூத தன்மையையும் ஆழ்ந்து ஒப்பிட்டால் பக்தி செயல்படும் முறையும் அதன் அவசியமும் தெரிய துவங்கும்.  

இந்த ஐவகைகளில் எப்படிப்பட்ட பக்தியை தேர்வு  செய்வது? எது சிறந்தது? என கேள்வி எழும். 

நம் உடல் மற்றும் மனம் பஞ்ச பூத தொகுப்பால் உருவாகி இருக்கிறது அத்தகைய பஞ்ச பூதத்தின் தொகுப்பால் உருவாகிய நாம் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கத்தில் இருப்போம்.  உதாரணமாக பஞ்ச பூதத்தில் பூமியின் ஆதிக்கத்தில் செயல்பட்டு நெருப்பு, நீர், காற்று மற்றும் ஆகாயத்தின் தன்மையை பின்னுக்கு தள்ளிய நிலையில் இருந்தால் நீங்கள் பக்தி செய்ய வேண்டிய தன்மை தாசியம் எனும் அடிமை தன்மை ஆகும். இது போன்று உங்கள் பஞ்சபூதத்தின் தன்மை ஆதிக்கம் தெரிந்து பக்தி வழியை தேர்வு செய்யலாம்.  

உங்களால் பக்தி தன்மையை உங்களின் பஞ்ச பூத தன்மையை கொண்டு அறிய முடியவில்லை என்றால் உங்கள் குருவிடம் சரணடையுங்கள் அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். குரு என்றவுடன் உங்களுக்கு மற்றொரு கேள்வியும் தோன்றி இருக்கக் கூடும். ஐவகை பக்தியில் குரு பக்தி என சொல்லப்படுவது எந்த வகை சார்ந்தது? இதன் பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன். இதற்கான விடையை நீங்களே கூற முயலுங்கள்.

பஞ்சபூதங்களின் அடிப்படையில் பக்தி வகைகள் இருக்கிறது என பார்த்தோம். பஞ்சபூதங்கள் நிலைபடுத்த வேண்டுமானால் அதற்கு பராமரிப்பு தேவை. முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் தற்கால வாழ்க்கை முறையில் பஞ்ச பூதத்தில் அனைத்தும் மாசு அடைகிறது என்பதை பார்க்கிறோம். ஆகவே தற்காலத்தில் பக்தியை உங்களுக்குள் நிலை நிறுத்தவும் பக்தி மாசடையாமல் இருக்கவும் பாதுகாப்பது அவசியமாகிறது. 

உதாரணமாக தண்ணீரை தேக்கி வைக்கிறீர்கள் என்றால் அடிக்கடி அதை சுத்திகரித்து பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் அதன் தன்மை குறையாமல் நாம் பயன்படுத்த முடியும். அது போலவே பக்தியை நாம் பாதுகாக்க ஒன்பது வழிகள் உண்டு.  ஐவகை பக்தியில் நீங்கள் எதை தேர்ந்து எடுத்தாலும் இந்த ஒன்பது வழிகள் பக்தியை மேம்படுத்த உதவும். நீங்கள் எப்படிப்பட்ட பக்தி செய்தாலும் இந்த ஒன்பது வழிகளின் அனைத்து வழிகளையோ அல்லது ஒன்பதில் அதிக பட்ச வழிகளையோ பின்பற்றினால் தான் அது பரிசுத்த பக்தி என்ற நிலைக்கு உயர்வடையும்.



1) ஷ்ரவணம் - காதுகளால் இறைவனை பற்றி கேட்டல் சத்சங்கம் முதலியவை
2)கிர்த்தனம் - இறை நாமத்தை பாடுதல்
3)ஸ்மரணம் - இறை உணர்வுடன் இறைவனை பற்றி சிந்தித்தல், இறை விஷயங்களை படித்தல்
4) பாதசேவனம் - இறைவனின் அடியார்களுக்கு சேவை செய்தல்
5)அர்ச்சனம் - இறைவனை மலர்களாலும் நம் கலாச்சார அடிப்படையிலும் பூஜை செய்தல்
6) வந்தனம் - இறைவனை வணங்குதல்
7) தாஸ்னம் - இறைவனுக்கு அடிமையாக இருக்கும் விழிப்புணர்வுடனே இருத்தல்
8) சகியம் - இறைவனை தோழமையுடன் உணர்வது
9) ஆத்ம நிவேதனம் - தன்னை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடுதல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல்.

ஒன்பது வழிகளை திரும்ப திரும்ப செயல்படுத்துவதாலும் அத்துடன் இணைந்து இருப்பதாலும் பக்தி வலுவடைந்து மாசுபடாமல் வளர்கிறது. இந்த ஒன்பது வழிகளும் நவக்கிரகங்களின் செயலுடன் இணையாக வருவதால் ஜோதிட சாஸ்திரம் வாயிலாக ஒருவர் எப்படிப்பட்ட பக்தி செய்வார் என்பதையும் எத்தகைய வழியில் ஈடுபாடு இருக்கும் என்பதையும் அறியும் முறைகள் முற்காலத்தில் இருந்தது.

பக்தி யோகத்தை பற்றி விவரிக்கும் பொழுது பக்தியில் சிறந்தவர்களை பற்றிய கதைகள் மற்றும் இதிகாசங்களை தொடர்புபடுத்தி விளக்கி பெரிய வடிவத்தில் சொல்லலாம். பக்தியோகத்தை எளிமையாகவும் அதன் கருப்பொருளையும் கொடுக்கவே இவ்வாறு குறுகிய வடிவில் எழுதி உள்ளேன். இதனை வாசிப்பவர்கள் பக்தியோகத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் போதுமானது.  

இனி பக்தி கதைகளையோ நூல்களையோ படிக்கும் பொழுது இது ஐவகை பக்தியில் எந்தவகை சார்ந்தது என சிந்தியுங்கள். அப்படி செய்வதால் நீங்கள் ஸ்மரணம் என்ற வழியில் பக்தியை பயன்படுத்துகிறீகள் அல்லவா...? 

பக்தி யோகத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்கள் : புராணங்கள் - பாகவதம், தேவி பாகவதம். பிற நுல்கள் - நாரத பக்தி சூத்திரம். 

No comments:

Post a Comment