Sunday, 7 December 2014

எலுமிச்சை

ஆளுயர மாலை… பொன்னாடை… என்று தங்களின் தலைவருக்கு அணிவித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் நடுவே… ஒரேயரு எலுமிச்சை பழத்தைக் கொடுத்து குஷியூட்டும் தொண்டர்களும் உண்டு.
பொன்னாடை எங்கே… எலுமிச்சை எங்கே… என்று யாரும் எள்ளி நகையாடுவதில்லை. சொல்லப்போனால், பொன்னாடையைக் காட்டிலும் எலுமிச்சைக்குதான் கூடுதல் மரியாதை.
எலுமிச்சைக்கு இப்படியரு மரியாதை கிடைக்க பல காரணங்கள் இருக்கலாம்… ஆனால், உண்மையிலேயே ஏகப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட பரிபூரணமான ஒரு பழம்தான் எலுமிச்சை. மிகச் சிறந்த கிருமி நாசினி… தாகத்தைத் தீர்ப்பதில் நிகரில்லாதது… ஊறுகாயின் அரசன்… என்று வரிசையாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
எலுமிச்சையின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா! சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தோனேஷிய மக்களால் பயன் படுத்தப்பட்டு… அங்கிருந்து அரேபிய நாடுகளை சென்றடைந்து, மெள்ள ஐரோப்பாவை எட்டிப் பார்த்திருக்கிறது. 1490-ம் ஆண்டுகளில் புதிய நாடுகளுக்கு கடல்வழி கண்டுபிடிக்கும் நோக்கோடு கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணம்தான் எலுமிச்சையை ‘உலக மயம்’ ஆக்கிவிட்டது! தான் கையோடு எடுத்துச் சென்ற எலுமிச்சையை மேற்கிந்திய தீவுகளில் கொலம்பஸ் பதியம்போட, அதன்பிறகு பல நாடுகளுக்கும் அது பரவிவிட்டது!
ஒரு காலத்தில் உலகையே கட்டி ஆண்டது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று இன்றைக்கும் பெருமை அடித்துக் கொள்கிறார்கள். அப்படியரு பெருமை கிடைக்க காரணமாக இருந்த விஷயங்களில் எலுமிச்சைக்கு மிகமிக முக்கியமான பங்கு உண்டு என்றால்… அது அதிசயிக்க வைக்கும் செய்திதானே!
பல நாடுகள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் மண்டியிடக் காரணமாக இருந்தது அந்நாட்டின் கடற்படைதான். எதிரிகளால் வெல்ல முடியாத அந்தக் கடற்படை, ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து போனது. அதன் மாலுமிகளை 17-ம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்கர்வி எனும் நோய் கொடூரமாகத் தாக்கியது. போரில் எதிரிகளால் வீழ்ந்த வீரர்களின் எண்ணிக்கையைவிட, இந்த நோய் தாக்கி இறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகம். ‘எதிரிகளை விட மிகக்கொடியது’ என்று பிரிட்டிஷ் வரலாற்றில் வர்ணிக்கப்பட்டிருக்கும் அளவுக்கு விளைவுகள் மிக மோசமானதாக இருந்திருக்கின்றன.
‘இந்த நோய் வைட்டமின்- சி குறைபாடினால் ஏற்படுகிறது. இதற்கு மருந்தாக எலுமிச்சைச் சாற்றை உட்கொள்ள வேண்டும்’ என்று ஸ்காட் லாந்தை சேர்ந்த ஜேம்ஸ் லிண்ட் என்ற மருத்துவர் கண்டுபிடித்துச் சொன்ன பிறகு, எலுமிச்சையை நோக்கி படையெடுத்து, ஸ்கர்வியிலிருந்து தப்பியிருக்கிறது பிரிட்டீஷ் கடற்படை. 1795 முதல் 1815-ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் சுமார் 1.6 மில்லியன் காலன் எலுமிச்சைச் சாறு கடற்படையினருக்கு உணவாக கொடுக்கப் பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.
மாமிச உணவில் இருக்கும் ஒருவித வாசனையை போக்குவதற்காகவும், உணவு பொருட்களை பதப்படுத்துவதற்காகவும் மட்டுமே ஆரம்ப காலங்களில் சீனா மற்றும் அரேபிய மக்களால் எலுமிச்சை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பிரிட்டீஷ் கடற்படையின் நோய் தீர்த்த ஒரே காரணத்தால், இதன் மருத்துவ குணம் உலகப் புகழ்பெற்றுவிட்டது.
டயேரியா, மலேரியா, காசநோய் போன்ற வியாதிகள் மற்றும் பல் சம்பந்தமான வியாதிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது எலுமிச்சை. இப்போது, ‘எய்ட்ஸ்’ தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் எலுமிச்சையிலும் தொடர்கின்றன.
தினமும் எலுமிச்சை பழச்சாறு உட்கொண்டு வந்தால் உடலில் உப்பு சத்து சீராகவும், தேவையில்லாமல் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட உப்புச்சத்துக்களை கழுவி… வியர்வை மூலமாகவோ, சிறுநீர் மூலமாகவோ வெளியேற்றும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. கருவுற்றிருக்கும் பெண்கள் எலுமிச்சை சாற்றை உட்கொண்டால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எலும்புகளுக்கு சத்து அதிகமாக கிடைப்பதுடன் வளர்ச்சியும் வேகமாக இருக்கும் என்பது மருத்துவ அறிவுரை.
இந்தோனேஷியாவில் பிறந்த எலுமிச்சை… இன்று உலகளவில் அதிகமாக உற்பத்தியாவது மெக்ஸிகோ நாட்டில்தான். இந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
எலுமிச்சையை உணவு மற்றும் மருத்துவத்துக்கு என்று மட்டுமல்லாமல், உலகின் அனைத்து பகுதி மக்களும் மதம் சார்ந்த சடங்குகளுக்கும் பெரிதும் பயன்படுத்துகிறார்கள் என்பது… ‘உலகம் உருண்டை’ என்பதை நிரூபிக்கிறது!

No comments:

Post a Comment