Wednesday 6 May 2015

யுகாதி என்றால் என்ன ?

யுகாதி என்றால் என்ன ? அன்று என்ன செய்யலாம் ?
யுக ஆதியின் சிறப்பு (யுகாதி – யுக ஆரம்ப நாள்)
அன்பான நண்பர்களே , நமது வாழ்வின் பாதையில் நாம் சந்திக்கும் பலவிதமான தடங்கல்களுக்கும் , தோல்விகளுக்கும் , துயரங்களுக்கும் , மன உளைச்சலுக்கும் நாம் நமது முன்னோர்களுக்கு அல்லது பெற்றோருக்கு திதி தர்ப்பணம் தராமல் போனதே முக்கியமான காரணமாகின்றது என்பதனை எல்லோரும் அறிந்திருப்பீர்கள் .
நாம் சில இடங்களில் காசி , ராமேஸ்வரம் இன்னும் இது போன்ற பல இடங்களில் திதிதந்தும் எந்தவிதமான பயனும் இல்லாமல் இருந்திருக்கும்.
அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.
சரியான முறையின்றி தரப்பட்ட திதிகள் பித்ருக்களை சென்றடைவதில்லை, காரணம் அவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது போகும்.
உரிய முறையோடு தரப்படும் திதிகள் அவர்களை மகிழ்வடைய செய்வதோடு அமைதியையும் தரும்.
திதிகள் தருவதற்கு எத்தனையோ நாட்களை ரிஷிகளும் , முனிவர்களும் நமக்கென அருளியிருக்கின்றார்கள்.
ஆடி அமாவாசை, தை மாத முதல் நாள், தை அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை , இது இல்லாமல் அவரவர்கள் இறந்த திதிகள் .
மேலும் ஒவ்வொரு யுகமும் தோன்றிய காலாமான யுகாதி எனப்படும் நாளும் இந்த வகையில் முதன்மை பெறுகிறது. யுகம் + ஆதி = யுகாதி , அதாவது யுகம் பிறந்த நாள் எனப்படும்.
இவைகள் முறையே , கிருதயுகம் , திரேதயுகம் , துவாபரயுகம் மற்றும் கலியுகம் .
இந்த யுகங்களின் ஆரம்ப நாட்களும் மறைந்த மூதாதையர்களுக்கு திதி தருவதற்கு மிகவும் ஏற்ற புண்ணிய தினங்களாக கொள்ளப்படுகிறது.
முதலில் கிருதயுகாதி :
இந்த நாள் ஒவ்வொரு தமிழ் ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய திருதியை திதியில் வரும்.
அதாவது வைசாக சுத்த மாதத்தில் சுக்ல பட்ச திருதியை திதியில் வரும்.
இரண்டாவது திரேதயுகாதி :
இந்த நாள் ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய நவமி திதியில் வரும். அதாவது கார்த்திக்க சுத்தமாததில் சுக்ல பட்ச நவமி திதியில் வரும்.
மூன்றாவது துவாபரயுகாதி :
ஆவணி மாத பௌர்ணமிக்குப் பின்னர் வரக்கூடிய திரயோதசி திதியில் வரும். அதாவது பாத்ரபத பகுளத்தில் க்ருஷ்ண பட்ச திரயோதசி திதியில் வரும்.
நான்காவதான கலியுகாதி :
மாசி மாத அமாவாசையன்று வரும்.
இந்த நான்கு தினங்களும் மகவும் புண்ணிய காலம் என்று புராணங்களும் கூறுகின்றன.
மேலேசொல்லப்பட்ட தினங்களில் எள்ளுடன் கூடிய தண்ணீரை பிதுர்க்களை நினைத்து ஒருவன் பக்தியுடன் விடுவானாகில் அவன் ஆயிரம் ஆண்டுகள் சிரார்த்தம் செய்த பயனை அடைகிறான் என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது.
மாசி மாதத்து அமாவாசையன்று சதய நட்சத்திரம் வருமாயின் அது பிதுர்க்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும்.
மாசி மாதத்து அமாவாசையானது அவிட்ட நட்சத்திரத்தில் வரும் வேளையில் பிதுருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீரைக் கொடுப்பவனுக்கு பதினாயிரம் ஆண்டுகள் பிதுருக்களை திருப்தி செய்த புண்ணியம் கிடைக்கும்.
மாசி மாதத்து அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும் வேளையில் சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் திருத்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாகத் தூங்குவார்கள் .
மாசி மாதத்து அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி முதலான நட்சத்திரத்தில் வரும் வேளையில் அப்போது செய்கின்ற சிரார்த்தம் பித்ருக்களுக்கு ஒரு வருடத்திற்கு திருப்தியை தருகின்றது.
மாசி மாதத்து அமாவாசையானது திருவாதிரை, புனர்பூசம்,பூசம் முதலான நட்சத்திரத்தில் வரும் வேளையில் அப்போது செய்கின்ற சிரார்த்தம், பித்ருக்களுக்கு பன்னிரண்டு வருடத்திற்கு திருப்தியை தருகின்றது.
மாசி மாதத்து அமாவாசையானது அவிட்டம், சதயம், பூரட்டாதி முதலான நட்சத்திரத்தில் வரும் நாள் என்பது தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலமாகும்.
இந்த ஒன்பது நட்சத்திரங்களிலும் மாசிமாத அமாவாசை கூடும்போது செய்கின்ற சிரார்த்தம் பித்ருக்களுக்கு திருப்தியை தருகின்றது.
சரியான முறையில் செய்யப்படும் சிரார்த்தங்கள் மூதாதையரை திருப்தி அடைய செய்கின்றன.
அவர்களின் ஆத்மா சுகமடைகிறது , அதனால் நமக்கு வளம் கிடைக்கிறது.
எதையும் முறையாக செய்வோம், ஆனந்தமான வாழ்வைப் பெறுவோம்

No comments:

Post a Comment