Wednesday, 5 August 2015

ஜென் புத்த தத்துவம்!! (The Philosophy of Zen)

ஜென் புத்த தத்துவம்!!
(The Philosophy of Zen)
-------------------------------------
என்னை பொறுத்தவரையில் மிகவும் எளிமையானதும், அனைவருக்கும் ஏற்புடயதுமான ஒரே மார்கம் ஜென் (Zen) தான். அதற்காக உங்களை நான் புத்த மதத்திற்கு மாற தூண்டுவதாக எண்ணவேண்டாம்!!!
ஜென் என்பது புத்த மதத்தை தழுவி இருந்தாலும் அதை ஒரு மதமாக கருதி, தனி சில மக்களுக்கு மட்டும் சொந்தம் என்று கூறுபோட்டுவிட முடியாது. யாவருக்கும் பொதுவான ஒரு வழியே ஜென். ஆன்மீகத்தின் லட்சியமான மனதற்ற நிலையும், அதை நிலைக்கசெய்யும் விழிப்புணர்வுமே ஜென்னின் அடிப்படை. ஜென் மார்க்கத்தை "போதிதருமர்" தோற்றுவித்ததாக கருதப்படுகிறது.
"நீங்கள் எதையும் சிந்திக்காமல் இருப்பதுதான் ஜென், வேறு ஒன்றுமே கிடையாது. இதை நீங்கள் பூரணமாக உணர்ந்தால், நீங்கள் நிற்கும் போதும், நடக்கும்போதும், பேசும்போதும், எதை செய்தாலும் நீங்கள் ஜென்னைத்தான் பழகுகிறீர்கள்" என்று போதிதர்மர் தம் உபதேசத்தில் மொழிகிறார்.
நீங்கள் எந்தவொரு ஜென் துறவியிடம் சென்று எந்த வகையான பிரச்சினைகளுக்கு தீர்வுகேட்டாலும், அவர்களிடம் இருந்து வரும் ஒரே பதில், ''மனதை சும்மா வைக்கப்பழகு. எதையும் சிந்திக்காதே" என்பதுதான். உலகின் அணைத்து பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம் ஒன்றே ஒன்றுதான். அது மனம். ஏனைய மதங்களைப்போல பரிகாரங்கள், வழிபாடுகள், உருவமயக்கங்கள், சித்து விளையாடல்கள்,.......... போன்ற உலக மாயையில் மக்களை ஆழ்த்திவிடாமல், நேரடியாக மனதை அழிக்கும் கலையை கற்றுத்தரும் ஒரே மார்கம் ஜென் தான்.
மீண்டும் சொல்கிறேன், நான் உங்களை ஜென் புத்ததிற்கு மதமாற்றம் செய்யும் செப்படிவித்தை இங்கு பதிவு செய்யவில்லை. ஜென் கூறும் உண்மையை கூறவே முனைகிறேன்.
"Zen" என்பது ஒரு சீனமொழிச்சொல். அதன் பொருள், "தியானம் செய்" என்பதாகும்.
நாம் எந்த செயல் செய்தபோதும், நம் மனம் அசையாமல் இருக்குமேயானால் அதுவே தியானம் ஆகும். அல்லாது ஆசனம் இட்டு மூச்சை அடக்கி வராத தியானத்தை வா வா என்று மனதுடன் சண்டையிடுவது தியானமல்ல.
இந்த தியானக்கலையை நாம் அறிந்து சதா தியானத்திலேயே நம்மை இருக்கச்செய்யும் கலையே ஜென் ஆகும்!!
ஜென் (Zen) தத்துவத்தில் முதல் படியே நம்மை அந்த முழுமைக்கு இட்டுச்சென்று விடும். போதிதர்மர் அளிக்கும் பத்து மகத்தான பாடங்களில் முதலாவது இது தான், "Be Utterly present", அதாவது "நிகழ்கணத்தில் முழுமையாக இரு" என்பது.
நம் மனம் எப்பொழுது உயிர் பெறுகிறது என்று சிந்தித்தால், நாம் நம் கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ கற்பனை செய்தோமேயானால், அப்பொழுதே நம் மனம் உதிக்கிறது. சிறிது சிறிதாக நாம் நம் மனதை நிகழ் கணத்தில் நிறுத்த பழகிவிட்டால், மனம் எதைபற்றியும் சிந்திக்காமல், நாம் நம் சுய வடிவான ஆனந்தத்தில் இருப்போம், மனம் சிந்திக்கும் போதே இன்பம், துன்பம் என்னும் இருமைகளை அடைகிறது. மாறாக எதையுமே சிந்திக்காமல் இருந்தால் ஆனந்தமாக இருப்போம்.
ஒரே வரியில் ஜென்னை விளக்கவேண்டுமேளில், "எதைப்பற்றியும் சிந்திக்காதே" அவ்வளவுதான்!!!

No comments:

Post a Comment