Friday, 27 November 2015

அரசு வேம்பு திருமணம்

அரசு வேம்பு திருமணம்
வேப்பமரமானது ஊருக்கு காவல் தேவதையாகவும், உந்து சக்தியாகவும் விளங்குவதால், கிராம காவல் தெய்வங்களான காளியம்மன், துர்க்கையம்மன், மாரியம்மன் ஆலயங்களில் வேப்பமரம் போற்றி வணங்கப்படுகிறது. காடுகள் மற்றும் வெட்டவெளிப் பகுதிகளிலுள்ள அரசு முதலான மரங்களில் பிரம்மராட்சதர் போன்ற தீய தேவதைகள் இருக்குமென்பதால், அகால நேரங்களில் அங்கு போகக்கூடாது என்றும் தொடக்கூடாது என்றும் சொல்லிவைத்தனர். அவ்வாறு போகும் அவசியம் நேரிட்டால் வேப்பிலையுடன் செல்வார்கள். பாதுகாப்பு கருதி அம்மரங்களுடன் வேம்பையும் இணைத்துவைப்பர். எனவேதான் இந்த வேப்ப மரத்தை சர்வசக்தி மயமாகவும், நாராயணரின் சக்தியான நாராயணியாகக் கருதி தனித்தும், அரசு முதலான மரங்களுடன் சேர்த்துவைத்தும் வழிபட்டனர்.
இறையருளையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு நம் முன்னோர் காட்டிய உயர்வான வழி இது. வேப்பமரக் கட்டையில் சூரியதேவனின் வடிவத்தை செய்து வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும் என்று சாத்திரங்கள் உரைக்கின்றன. தீயவர்களை விரட்ட செய்யப்படும் வேள்விக்கு ஏற்ற சமித்தாக வேம்பு விளங்குகிறது.
அரச மரத்தை மரங்களின் அரசன் என்று ஆண் பாலாகவும், வேப்ப மரத்தை அரசி என்று பெண் பாலாகவும் சிறப்பித்துக் கூறுவர். இவ்விரண்டையும் தனித்தனியாக ஆலயங்களில் வழிபடுகின்றனர். இரண்டையும் ஓரிடத்தில் ஒன்றாக நட்டு வளர்த்து, அவற்றுக்குத் திருமண வைபவம் நடத்திவைத்து, பின்பு தெய்வத் தம்பதிகளாக வழிபடுவதும் சிறந்த வழிபாட்டு நெறியாகும். நாராயணராகவும் நாராயணியாகவும் எண்ணி வழிபடுவதால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஈடேறும். நற்பிள்ளைப்பேறும் வாய்க்கும். எல்லாவித தோஷங்களும் நீங்கும்.
அரசு, வேம்பு திருமணச் சடங்கென்பது மிகவும் புனிதம் வாய்ந்தவொன்று. முறையாக செய்துவைக்கப்படும் திருமணத்தால் முற்பிறவிப் பாவங்கள் நீங்கும். பிறந்தகால ஜாதகத்திலுள்ள வாழ்க்கைத்துணை தோஷம், பிள்ளைச்செல்வ தோஷம், நாக தோஷங்கள் விலகும். விதிமுறைப்படி செய்யப்படும் பூஜை, திருமணம், 108 முறை வலம்வருதல் ஆகியவற்றால் விரும்பிய எப்பயனையும் பெறலாம். கோடி கன்னிகா தானம் செய்வதால் கிட்டும் புண்ணியத்தை ஒரு அரசு- வேம்பு திருமணத்தால் பெறலாம்

1 comment: