Tuesday 8 December 2015

குடி தண்ணீர்

நமக்கு குடி தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால், பெரும்பாலும் வரும் பதில், கோவை மக்களிடமிருந்து சிறுவாணி என்றும், திருப்பூர் மக்களிடமிருந்து பரம்பிகுளம் என்றும், ஈரோடு மக்களிடமிருந்து காவிரி ஆறு என்றும், சேலம் மக்களிடமிருந்து மேட்டூர் அணை என்றும், சென்னை மக்களைக் கேட்டால் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் வீராணம் திட்டம் என்றும் பலவகையான குடிநீர் குழாய்களிலிருந்து வீட்டுக்கு வரும் தண்ணீர் வழங்கும் திட்டத்தைத் தான் கூறுவார்கள்.
ஆனால் மழைநீர் எப்படி நிலத்தடி நீராக, குளங்கள், அணைகளில் குடிநீராகச் சேமிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. அப்படித் தெரிந்தாலும் இதை அதிகரிக்க வழிகள் என்பது பற்றி சிந்திப்பதும் இல்லை.
தற்போது பருவமழை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி, இதனால் விவசாயம் செய்ய ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, அதன் மூலம் நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விளைவிக்க முடியாமல் போவது, குடிநீர் பற்றாக்குறை, இவை அனைத்திற்கும் காரணம் பருவமழை காலத்தில் நாம் தண்ணீரைச் சரியாக சேமிக்க தவறியது தான் முக்கியக் காரணம் ஆகும்.
இந்த நீர் சேமிப்பு தான் ஒரு நாட்டை பாலைவனம் ஆக்கும் பேராபத்தில் இருந்து காக்கக் கூடிய வழிமுறையாகும். ஒவ்வொரு முறையும் பருவ மழை பெய்யும்போது நிலத்தில் உள்ள நீர் ஓடைகள், குளம், குட்டை, ஆறுகள் என்று அனைத்திலும் சென்று பிறகு கடல் நீரில் கலக்கிறது.
ஒவ்வொரு வருடமும் நாம் வீணாகக் கடலில் சேர்க்கும் நீரின் அளவை கணக்கிட்டுப் பார்த்தால், நீரை நாம் சேகரித்து இருந்தால் வளமான, தண்ணீர் அதிகம் உள்ள மாநிலமாக இருந்திருக்கலாம். கங்கை காவிரி இணைப்பு என்ற முயற்சி கூட நீர் நிலைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் நீர் வளத்தைப் பெருக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும்.
தற்போது கோவை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் நிலத்தடி நீர் 1000 அடி தாண்டி ஆழமாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் எடுத்து விவசாயம், குடிநீர் போன்றவற்றிற்காகப் பயன்படுத்துகிறார்கள். குறைந்தது 50 அடி ஆழம் உள்ள கிணறுகள் கடந்த பத்து ஆண்டுகளில் 100 அடி ஆழ கிணறுகளாக மாறிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த அதே அளவு நீர் தான் அந்தப் பகுதியில் இருக்கிறது. இந்த நீரை அதிக ஆழம் கிணறு தோண்டிய அல்லது ஆழ்குழாய் கிணறு அமைத்த சிலருக்கு மட்டுமே அதிக நீர் கிடைக்கிறது. மற்றவர்கள் கிணறு ஆழப்படுத்த முடியாமல், ஆழ்குழாய் கிணறு தோண்ட முடியாமல் உள்ளவர்களுக்கு நிலத்தடி நீர் கிடைப்பதில்லை. இருக்கின்ற நீரை மட்டும் பயன்படுத்த வேண்டிய நிலையில் சிலர் இருக்கின்றனர். எனவே நீரை சேமிக்காமல், குறைந்து கொண்டே போகும் நீருக்காக சண்டை போட்டுக் கொள்ம் நிலை தற்போது இருக்கிறது.
ஏன் இந்த நிலத்தடி நீர் குறைபாடு? ஏன் நம்மால் இதைச் சேமிக்க முடியவில்லை? ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குளம், ஏரி போன்ற நீர்பிடிப்பு பகுதிகள் இருக்கும். இவை அனைத்தும் கிராம பஞ்சாயத்துக்கள் கவனிக்கும் முறையில் தான் இருக்கிறது. இந்த ஏரி, குளங்களுக்கு நீர் வருவதற்கு ஓடைகள் இருக்கும்
நாம் நமது ஊரில் உள்ள ஏரி அல்லது குளங்களை 20 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அந்த ஏரி, குளங்கள் அப்படியே அதே அளவில் இருக்கிறதா என்றால், இல்லை. அதன் அளவு குறைந்து போயிருக்கும். ஏரிகளுக்கு வரும் ஓடைகள் முன்பிருந்த அளவில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதா? எனக்கேட்டாலும் இல்லை என்றே ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதற்குக் காரணம் குடியிருப்புகளின் ஆக்கிரமிப்பும், ஓடைகளில் இருந்து வரும் வண்டல் மண் (Silting) நாளுக்கு நாள் குளம், குட்டைகளில் வந்து படிவதும் குறைந்துமே. இதனால் தற்போதுள்ள பெரிய அணைகளின் நீர்தேக்க அளவும் குறைந்து கொண்டு தான் வருகிறது.
மேலும், நாளுக்கு நாள் ஏற்படும் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் போக்குவரத்து சாலைகள், அடுக்குமாடி கட்டிடங்களால் பல நீர் நிலைகளின் இணைப்புகள் துண்டிக்கப் படுகிறது. இதனால் ஒரு ஏரி, குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு நீர் செல்ல முடியாமல், வெள்ளப் பெருக்கு, சேதம் ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. ஆறுகளையும், ஓடைகளையும் முறையாக பராமரித்துப் பயன்படுத்தி வந்திருந்தால் நிலத்தடி நீர் தேவையான அளவிற்கு சேமிக்கப் பட்டிருக்கும்.
ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு சிறிய அளவில் தாங்கள் வசிக்கும் வீடுகளில் நிலத்தடி நீரை சேமித்தால் மட்டுமே நாளைய தலைமுறையினர் தண்ணீர் பற்றாக்குறை இன்றி வாழ முடியும். நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்க பல முயற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆனால் அவர்களது முயற்சிக்கு மக்களது தண்ணீருக்கான விழிப்புணர்வும் இருந்தால் மட்டுமே முழுவதுமான முயற்சிகளைச் செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழ் உள்ள இடங்களை சிவப்புப் பகுதி (Red Zone) என அரசு அறிவித்துள்ளது. நிலத்தடி நீர் அபாயகரமான பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஏரி, குளங்கள் தூர்வாரும் திட்டம், மலைப்பகுதிகள் நீர் சேமிப்புத் திட்டம், வீடுகளில் நிலத்தடி நீர்த்திட்டம் எனப் பல திட்டங்கள் இருந்தும் நீரின் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பது கவலைப்பட வேண்டிய விசயமாக உள்ளது. “வானம் பொழிகிறது! பொழிந்த நீர் எங்கே செல்கிறது?”
இப்போ அத்தனை
மழையையும் உபயோகம் இல்லாலமல் மக்களை கஷ்டபடுத்தி விட்டு போய்விட்டது

1 comment: