Saturday, 20 February 2016

அறுபதாம் கல்யாணம் ஏன்? விளக்கம்!

அறுபதாம் கல்யாணம் ஏன்? விளக்கம்!

நம் பாரம்பரியத்தில் ஒரு குழந்தை பிறந்து 12 வயது ஆகும் வரை , 

அந்த பருவத்தை பாலாவஸ்தா என்பார்கள். அப்போது குழந்தை 

செய்வதெல்லாம், விளையாட்டு, சாப்பாடு, தூக்கம் அவ்வளவு தான்.

 அதற்கு மேல் அவன் ஏதும் செய்யத்தேவையில்லை.


      12 வயது நிறைவுற்றதும் அவனுக்கு பிரம்மோபதேசமும் அதன் பின் வித்தியாபியாசம் அதாவது கல்வி கற்பித்தலும் நடக்கும். பிரம்மோபதேசம் என்பது, இது எனது, எனதில்லை என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்திலும் பிரம்மனைக் காணக் கற்றுத் தருவது. இந்த தன்மை இல்லாத மனிதருக்கு கல்வி கற்பிக்கக்கூடாது. ஏனெனில் கல்வி என்பது மாபெரும் சக்தி. அவர், இவர், எனது, எனதில்லை, வேண்டும், வேண்டாம் என்று பிரித்துப் பார்க்கும் மனிதருக்கு சக்தியை கொடுத்தால் அவரால் பிரச்ச‌னை தான் வரும்.
      எனவே 12வயதில் பிரம்மோபதேசம் கொடுத்து, அதன் பின் 12ல் இருந்து 24 வயது வரை வித்தியாபியாசம் கொடுத்தார்கள். அவன் தன் வீட்டில் இல்லாமல் ஒரு குருவிடம் சென்று தங்கி அங்கேயே அனைத்தையும் கற்றுக்கொள்வான். அப்போது அவனுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆகியவை போதிக்கப்படும், இந்த நிலையை பிரம்மச்சரியம் என்பார்கள். 12 வருடம் குருவிடம் தேவையான கல்வி கற்று 24வது வயதில் தேவையான அறிவு பெற்றவராக இருப்பார்.
      இப்போது அவருக்கு ஆர்வம் இருக்கும் பட்சத்தில் பிரம்மச்சரிய நிலையில் இருந்து துறவு நிலைக்கு நேரடியாக சென்றுவிடலாம். அல்லது திருமணம் செய்து கொண்டு அடுத்த 24 ஆண்டுகள் இல்லற வாழ்கையில் ஈடுபடலாம்.
      அந்த 24 வருட தாம்பத்தியத்திற்கு பிறகு, அதாவது 48வது வயதில் குழந்தைகள் வளர்ந்து பெரியவராகி இருப்பார்கள். அந்த நேரத்தில் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாகப் பிரிந்து சன்னியாசம் எடுப்பார்கள். ஓரிடத்திற்கு சென்று ஆன்மீக சாதனை செய்து தன்னை உணர்ந்த நிலையில் திரும்பி வருவார்கள்.
      12 வருட‌ங்கள் தனித் தனியாக இருந்த கணவனும் மனைவியும் மீண்டும் இப்போது அவருடைய 60வது வயதில் ஒன்று சேருவார்கள்.
அவர்களுக்கு முதல் முறை திருமணம் நடந்த போது அவர்களுக்கு உடல் ஆர்வம் மிக முக்கியமாக இருந்தது. ஆனால் இப்போது கணவனுடைய 60வது வயதில் அவர்களுக்கு உடல் ஆர்வத்தினால் ஒன்று சேரவில்லை. வேறு ஒரு ஆழமான தன்மையை உணர்ந்த நிலையில் ஒன்று சேருகிறார்கள்.
      இப்போது அவர்கள் தனியாக காட்டிற்க்கு சென்று வேறொரு தன்மையில் மீண்டும் ஒன்றாக வாழ விரும்புகிறார்கள். இந்த வாழ்க்கையை தான் வானபிரஸ்தா என்றனர். வானபிரஸ்தா செல்லும் முன் அவர்கள் ஏற்கனவே பிரிந்திருந்ததால், அவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கும் வ‌ழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்தது.

இந்து சமயத்தைச் சேர்ந்த தம்பதியர்களில் ஆண்களுக்கு 60 ஆம் வயதில் "அறுபதாம் கல்யாணம்" என்கிற பெயரில் நடத்தப்படும் விழா "ஷஷ்டியப்த பூர்த்தி" என்றும் "மணிவிழா" என்றும் அழைக்கப்படுகிறது.இதை "உக்ர ரத சாந்தி" என்றும் அழைக்கின்றனர்.

சாந்திகள்

இந்து மத ஆகமங்களிலும், புராணங்களிலும் மனிதன் செய்ய வேண்டியதாக 41 வகை சடங்குகள் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் பல சடங்குகள் அவனது குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் அவனது தந்தையால் செய்யப்பட்டு விடுகின்றன. மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம்" என்கிற இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் , 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகிறது.

உக்ர ரத சாந்தி

மனிதனின் 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி "உக்ர ரத சாந்தி" என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் "ஷஷ்டியப்த பூர்த்தி", "மணிவிழா" என்கிறார்கள்.

இதர முக்கிய சாந்திகள்

  1. மனிதனின் 78 ஆம் ஆண்டு துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு "விஜயரத சாந்தி" சடங்கு செய்யப்படுகிறது.
  2. மனிதனின் 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று "சகஸ்ர சந்திர தர்சன சாந்தி" செய்யப்படுகிறது.
  3. மனிதனின் வாழ்க்கையில் 100 ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் போது செய்யப்படும் சாந்தி "சதாபிஷேக கனகாபிஷேகம்" என்று அழைக்கப்படுகிறது. இதுவே "அஷ்டோத்தர சதருத்ர கலசாபிஷேகம்" என்றும் சொல்லப்படுகிறது.

சாந்தி வழிபாடு

"ஷஷ்டியப்த பூர்த்தி" எனும் இந்த மணி விழாவில் இந்து ஆகமம், புராணங்களின் வழியில் 5, 9, 12, 13, 29, 33, 65, 125, 320 எனும் வரிசையில் தேவதைகளுக்கு கும்பங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது. முக்கியமாக ம்ருத்யுஞ்ஜய கலசமும் வரிசையாக பிரம்மாவிஷ்ணுஉருத்திரன்மார்க்கண்டேயன்திக்பாலகர்கள்சப்தசிரஞ்சீவிகள், ஆயுள் தேவதை, வருஷம், அயனம், நட்சத்திரம்கணபதிநவக்கிரகம், அதிதேவதை, ப்ரத்யதி தேவதை எனும் 13 கலச பூஜை செய்வது சிறப்பானதாகும்.
இதில் சிவ தீட்சை எடுத்துக் கொண்டவர்களுக்கும், சிவபூஜை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ருத்ரர்களுக்காக 11 அல்லது 1 கலசமும், பஞ்சப்ரும்ம கலசங்களாக 5 அல்லது 1-ம், ஆன்மார்த்த மூர்த்தி ஸ்தாபனமாக 10 கலசமும் ஆக 16 அல்லது 44 கலசங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பானதாகும்.
இந்த வழிபாட்டிற்குப் பின்பு தைல தானம், ஆஜ்யதானம், உதகபாத்ர தானம், வஸ்திர தானம், நவதானிய தானம், பூ தானம், கோ தானம், தில தானம், தீப தானம், ருத்ராட்சம் அல்லது மணி தானம், எனும் தச தானம் செய்து உமா மகேஷ்வர பூஜை எனும் வயோதிகத் தம்பதி பாத பூஜை செய்து திருநாண் பூட்டுதல் செய்து ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும்.
இந்த மணிவிழா நிகழ்வுகள் தமிழ்நாட்டில் திருக்கடையூர் எனும் ஊரிலுள்ள சிவத்தலத்தில்தான் அதிக அளவில் செய்யப்படுகிறது. இங்கு செல்ல இயலாதவர்கள் அருகிலுள்ள ஏதாவது ஒரு கோயிலில் செய்து கொள்கின்றனர்.

சிறப்பு

அறுபது வயதில் திருமணம் போன்று இந்த விழா நடத்தப்படுவதால் இந்த விழாவில் அந்தத் தம்பதியர்களின் பிள்ளைகள் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்த "அறுபதாம் கல்யாணம்" என்கிற மணி விழா நிகழ்வு வயதான தம்பதியர்களுக்கு ஒரு மன நிறைவைத் தரும் விழாவாகவும் இருக்கிறது.

1 comment:

  1. அய்யா... வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். சூப்பர்... அப்படியே இந்த பாடம், இப்போ நடந்து கொண்டு இருக்கிறது..அய்யா

    ReplyDelete