Thursday, 28 April 2016

கர்ப்பப்பை நீக்கம் தீர்வா? திண்டாட்டமா?

கர்ப்பப்பை நீக்கம் தீர்வா? திண்டாட்டமா?




''கர்ப்பப்பையை ஒரு உடல் உறுப்பா மட்டும் நான் பார்க்கலை... என் தங்கங்களைச் சுமந்த தங்க மாளிகை அது. என்னோட சந்ததிக பத்து மாசம் பத்திரமா இருந்த கோயில் அது. பரம்பரை வீடு சேதாரமாப் போனாலும், அதை இடிக்க மனசு வராமல் அழுவுற மாதிரிதான், என் மனைவியோட கர்ப்பப்பையை நீக்கணும்னு சொன்னப்ப நான் அழுதேன்!'' நடிகர் வடிவேலு, தன் மனைவி விசாலாட்சிக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை நடந்தபோது கண்ணீரோடு சொன்ன வார்த்தைகள் இவை. கரு உருவாகி முழுக் குழந்தையாக உருவெடுக்கும் அதிசயம்... பெண்ணின் கருவறைக்குள் நடக்கும் பிரமிக்கத் தக்க ஆச்சரியம். இனப்பெருக்க மண்டலத்தின் முக்கிய உறுப்பாக இருக்கும் கர்ப்பப்பை பெண்மைக்கே பெருமை சேர்க்கும் அடையாளம். ஆனால், பரபரப்பும், பதட்டமும் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலாலும், உணவுப் பழக்கத்தாலும், மாதவிடாய் நிற்கும் நிலையில் இருக்கும் சில பெண்களுக்குத் தொடர்ந்து அதிகப்படியான உதிரப்போக்கு, கர்ப்பப்பை இறக்கம், கர்ப்பப்பை வலுவிழத்தல் என வேதனைகளையும் சோதனைகளையும் சுமக்கும் ஓர் அங்கமாகவும் கர்ப்பப்பை மாறிவிடுகிறது. கர்ப்பப்பையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளை எளிதில் சரிசெய்துவிடக்கூடிய அளவுக்கு இன்றைய மருத்துவம் முன்னேறி இருந்தாலும், கர்ப்பப்பையையே அகற்றவேண்டிய சூழலும் சிலருக்கு ஏற்படத்தான் செய்கிறது.

''வெளிநாடுகளில் - குறிப்பாக ஐரோப்பாவில் - கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 2 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது 20 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. எச்சரிக்கையாக இருந்தால் கர்ப்பபையை அகற்ற வேண்டிய நிலைமை நம் நாட்டுப் பெண்களுக்கும் ஏற்படாமல், கணிசமான அளவு குறைக்க முடியும்'' - நம்பிக்கையோடு சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணன்.

''கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழல் ஒரு பெண்ணுக்கு எப்போது ஏற்படுகிறது?''


அதிகப்படியான உதிரப்போக்கு நீண்டகாலமாக இருக்கும்போது மருந்துகள் சாப்பிட்டும் பலன் கிடைக்காத நிலையில், இனிமேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கர்ப்பப்பையை அகற்றலாம்.

கர்ப்பப்பையின் உட்சுவர் சவ்வுப் பகுதி கர்ப்பப்பையின் உள்ளுக்குள் வளராமல், வெளியே வளர்ந்து ஆங்காங்கே ரத்தக் கட்டு ஏற்படும். இதை எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்போம். இந்த நிலை வரும்போது அதிக வலி மற்றும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். மருந்துகள் பலன் அளிக்காது போனால், கர்ப்பப்பையை அகற்றவேண்டி இருக்கும்.

கர்ப்பப்பையில் வளரும் சதைக் கட்டிகளான ஃபைப்ராய்ட் (Fibroids) மிகப்பெரிதாக இருக்கும் போதும், நோய் அறிகுறிகள் தென்பட்டாலும், கர்ப்பப்பை அகற்றப்படும்.

கர்ப்பப்பையில் புற்று நோய் இருப்பது பரிசோதனைகள் மூலம் 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டால் கர்ப்பப்பையை அகற்றவேண்டி இருக்கும்.

வயது கூடிய பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை இறக்கம் (Prolapse)போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் கர்ப்பப்பை அகற்றப்படலாம்.

பிரசவக் காலத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டால், கர்ப்பப்பையை அகற்றும் சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.

''கர்ப்பப்பையை எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?''


சிறுநீர், மலம் கழிப்பதில் பிரச்னை, குடல் இறக்கம், தொடர்ந்து அடிவயிற்றில் வலி போன்ற பிரச்னைகள் சிலருக்கு ஏற்படக்கூடும். பிற்காலத்தில் குடல் இறக்கம் ஏற்பட ஒரு சிலருக்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்குக் கர்ப்பப்பையை எடுக்கும்போது திசுக்கள் சேதமடைந்து வலுவிழந்துவிடலாம். இதனால் சிறுநீர், மலம் கழிப்பதில் சிரமம் இருக்கும்.

ஆனால் பொதுவாகப் பார்த்தால் கர்ப்பப்பையை எடுப்பதால் பெரிய பிரச்னைகள் எதுவும் வராது. அதனால், நிச்சயமாக பயப்படத் தேவை இல்லை.

''கர்ப்பப்பை எடுத்த பிறகு எந்த மாதிரியான முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?''


நான்கு வாரங்கள் நல்ல ஓய்வு எடுக்க«வண்டும். அதுவும், முதல் நான்கு நாட்கள் முழுமையான ஓய்வு. 15 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குள்ளேயே நடக்கலாம். 20 நாட்களுக்குப் பிறகு உடம்பை வருத்திக்கொள்ளாத அளவில் வீட்டு வேலைகளைச் செய்யலாம். ஒரு மாதத்துக்குப் பிறகு வெளியிடங்களுக்குச் சென்று வரலாம். ஆனால், வெளியில் செல்லும்போது நோய்த்தொற்று ஏற்படாமல் கவனமாக இருக்கவேண்டும். இரண்டு மாதங்கள் ஆனதும் மென்மையான தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்.

கர்ப்பப்பையை எடுத்துவிட்டால் அந்தப் பெண்ணுக்குத்
தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாமல் போய்விடும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. கர்ப்பப்பையை எடுப்பதற்கும் தாம்பத்திய உறவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. 40 வயதுக்குள் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பையை எடுக்கவேண்டிய சூழல் நேரிட்டால், அதற்கு முன்பும், பின்பும் அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் உரிய ஆலோசனைகள் நிச்சயம் தேவை. இதனால், கணவன் - மனைவிக்குள் புரிதல் மற்றும் அக்கறை எற்படும்.

''உடல், பழைய நிலைக்கு வருவதற்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்?''


குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடிய சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம். இதனால், அடிவயிறு மேல் நோக்கிப் போகும். வயிறு சுருங்கும். ஃபிசியோதெரபிஸ்ட் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பயிற்சிகளால் வயிற்றுத் தசைகள் வலுப்பெறும். வாயு நிறைந்த கிழங்கு வகைகளைத் தவிர்த்து காய்கறி, பழங்கள், கீரை வகைகள் எனச் சத்தான உணவுகளை அந்தந்த வயதுக்கு ஏற்ப சாப்பிட்டால் போதும். அதிக ஓய்வு எடுப்பது உடலை பருமனாக்கிவிடும்''

2 comments:

  1. கர்ப்பப்பை எடுப்பது, இப்போது நாகரீகமாகி விட்டது என்று கூட சொல்லலாம். எதற்காக கர்பப்பை எடுக்க வேண்டும். தேவையே இல்லை.
    பெண்கள், பூப்பெய்த சமயம், அவர்களை வெளியே விடாமல் வீட்டிற்குள் வைத்திருப்பார்கள். அந்த சமயத்தில், உளுந்தங்களி கிண்டி, அதில் சுத்தமான நல்லெண்ணெய் விட்டு, முட்டை சேர்ப்பவர்களாக இருந்தால், ஒரு நாட்டு முட்டையை உடைத்து ஊற்றி, சாப்பிடக் கொடுத்தால் அந்த கர்ப்பப்பை வலுவடையும். இந்த சமயங்களில் சத்துள்ள ஆகாரங்கள் கொடுக்கப்பட வில்லை என்றால் தான், பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப் பட்ட வியாதிகள் வரும்.
    இரண்டாவது, திருமணமான பெண்கள், கருவுற்றிருக்கும் காலத்தில், அவர்கள் புதிதான, ஒரு உலகத்துக்குள் இருப்பது போன்று நினைத்துக் கொள்ளாமல், குனிந்து, நிமிர்ந்து வேலை செய்து, களைத்துப் பின் உறங்கி எழும்பினாலே போதும். மூன்றாவது, எப்போதுமே, ஒரு முறையான உடலுறவு மட்டுமே சாலச் சிறந்தது.

    குழந்தை பிறந்த சமயம், நம் கால்களை நேராக நீட்டி, படுத்தால், உதிரம் நம் உடலில் தங்காமல், வெளியேறி விடும்.
    சரிந்து படுக்கும்போது, அங்கங்கே சிறு சிறு கட்டிகளாக உதிரம் தேங்கிக் கொண்டு, மாதவிடாய் நேரத்தில், வலியோடு கூடிய உதிரப் போக்கு இருக்கும். கொஞ்சம் வாய் கட்டுப்பாடும் வேண்டும். அந்த சமயங்களில், இனிப்பு, அதிக காரம், எள்,கடுகு இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த வீட்டுக்குள், உளுந்தங்களி, வெந்தயக்களி, இவை இரண்டையும் தவிர்த்து,பேறுகால மசால் என்று
    முறைப்படி சாப்பிடச் சொல்லி கொடுப்பதை, நாம் மறுக்காமல் சாப்பிட் டாலே, கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய் வராது. வாயில் நுழையாத தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்த்து, அந்தந்த சீசனுக்கு, இறைவன் நமக்கு அளித்துள்ள பழங்களை அளவோடு சாப்பிட்டாலே நலம்.

    40 வயதை நெருங்குகிறோம் என்றாலே
    கொழுப்பு பதார்த்தங்களின் அளவைக் குறைத்து சாப்பிட வேண்டும். மேலும் பெண்கள் சாப்பிட்டபின் உறங்கும் பழக்கத்தை, ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்து வந்தால், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய் வராது.

    நாம் எத்தனை வருடம் வாழ்ந்தோம், வாழ்வோம் என்பது முக்கியமல்ல, நாம் நோயின்றி இத்தனை வருடமும் வாழ்கிறேன் என்பது தான் முக்கியம்.
    மேலும்,வயதை நாம் ஒருபோதும் சிந்திக்கக்கூடாது. வயதை நினைத்தால்,நமது ஆரோக்கியமும், ஆயுளும் குறைந்து போகும். வேலக்காரர்களை வைத்து, உங்கள் வேலைகளை செய்வதை விட, அந்த வேலைகளை ஆரம்பத்தில் இருந்தே,நீங்கள் செய்து வரும்போது, உங்கள் உடம்பில், நரம்புத் தளர்ச்சி வராது."சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் குன்றாது இருக்கும்.

    உங்கள் உடம்பில் நோய் என்றதும், ஆஸ்பத்திரி போகும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

    அத்திப்பழம், ஆலம்பழம், பேரிச்சம்பழம், நாவல்பழம்,பலாப்பழம், கொய்யாப்பழம் பனங்கிழங்கு, வெள்ளரிக்காய், சீனிக்கிழங்கு, இவைகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டே வந்தால் நோய் அணுகாது.

    குளிர் பதார்த்தங்களை, தயிர்,மோர், இளநீர் மேலும் குளிர்பானங்கள் இரவில் சாப்பிடுவதை தவிருங்கள்.

    எல்லாவற்றிற்கும் மேலான மருத்துவம், சுக்கு,"மிளகு, திப்பிலி, நற்குமூலம், சாரணவேர், நல்துளசி, நல்ல மிளகு,சின்ன சீரகம்,பெருச்சீரகம் கருஞ்சீரகம், கிராம்பு, ஏலக்காய்,கடுகு, எள், வேர்க்கடலை, பொரிகடலை, சின்ன வெங்காயம் (உள்ளி) பூண்டு, வற்றலை குறைத்து, பச்சைமிளகாய், கீரை, வெண்டைக்காய்,முருங்கக்காய், முருங்கக்கீரை, ஆகியவற்றில் மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளன். ஆகவே ஆஸ்பத்திரிக்கு போகும் வழக்கத்தை குறைத்தால், உங்கள் உடம்பில் கர்ப்பப்பை எடுக்கும் அவசியம் ஏற்படாது.

    ReplyDelete
  2. இங்கும் மிளகு இருமுறை வந்துள்ளது. மிளகு, நல்ல மிளகு இரண்டும் ஒன்றே என்று அறிக.

    ReplyDelete