Monday, 5 June 2017

சாமி கும்பிட வேண்டிய முறை

சாமி கும்பிட வேண்டிய முறை
சில பேர் பழனிக்குச் செல்லும் பொழுது, கோவாணாண்டியாக அலங்கரித்திருக்கும் முருகனை தரிசனம் செய்தால், தன் குடும்பமும் இது போன்றதாகிவிடும் என்று, இராஜ அலங்காரத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், சிலர் கோவணாண்டியாகப் பார்த்தால்தான், அருள் கிடைக்கும் என்றிருப்பார்கள்.
இராஜ தரிசனம் பார்த்தால்தான் தன் குடும்பமும் நன்றாக இருக்கும் என்று எண்ணி வணங்கும் பொழுது, திடீர் என்று திரையிட்டு, நீக்கி மொட்டையாண்டியாக அலங்காரம் செய்திருப்பதைப் பார்த்தால் “ஆ… தன் வாழ்க்கை என்னாகும்” என்று எண்ணத்தைத் தம்முள் பதிப்பார்கள். இவர்களின் எண்ணத்தைப் போன்றுதான், இவர்களுடைய வாழ்க்கையும் இருக்கும்.
தீமைகளை அகற்றிடும் அருள்ஞானியின் உணர்வின் செயலாக சிலையை உருவாக்கி, ஆலயம் அமைத்தார் போகர். ஆனால்,
நாம் நமது எண்ணத்தின் தன்மை கொண்டு,
அருள்ஞானி காண்பித்த அருள்நெறியை மறந்து,
நம் எண்ணத்தின் நிலையை
நமக்குள் வளரச் செய்துவிடுகின்றோம்.
ஆகவே, நாம் ஆலயங்களுக்குச் சென்றால், ஆலயம் எதற்காகக் கட்டினார்கள் என்பதை எண்ண வேண்டும். நம்முள் உள்ள நல்ல குணத்தைக் காத்திட வேண்டும் என்பதற்காக, அருள்ஞானிகள் ஆலயத்தைக் கடடினார்கள்.
அதாவது, நமது உடலினுள் மறைந்துள்ள நல்ல குணங்களைச் சிலையாக வடித்து, ஆலயம் அமைத்து, கதைகளாக எழுதி, இந்த நல்ல குணங்கள் உங்களிடத்தில் உண்டு என்றும், நல்ல குணத்தை காத்திடும் நிலை எது? என்றும் உரைத்தார்கள்.
ஆலயங்களில் தீபாராதனை காண்பிக்கப்படும் பொழுது, அங்கு இருக்கக்கூடிய பொருட்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆகவே, இது போன்று "நாங்கள் தெரிந்துணர்ந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்” என்று எண்ணி வணங்க வேண்டும்.
இவ்வாறு எண்ணி வணங்கும் உணர்வுகள்
நமக்குள் “ஓ” என்று ஜீவனாகி
“ம்” என்று நம் உடலாக, சிவமாக மாறுகின்றது.
தெய்வச்சிலைக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மலர்களைக் காணும் பொழுது, “மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும். மலரைப் போன்ற மகிழ்ச்சி நாங்கள் பெறவேண்டும். மகிழ்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்” என்று எண்ணி வணங்க வேண்டும்.
தெய்வச்சிலைக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் கனிவர்க்கங்களைக் காணும்பொழுது, “கனியைப் போன்ற சுவையான சொல்லும், செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி வணங்க வேண்டும்.
அதே போன்று, எங்கள் சொல்லைக் கேட்பவர்கள், கனியைப் போன்ற இனிமை அவர்களுடைய வாழ்க்கையில் பெறவேண்டும்” என்று எண்ணி வணங்க வேண்டும்.
தெய்வச்சிலைக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளை, ஆபரணங்களைக் காணும் பொழுது “தங்கத்தைப் போன்று மனம் “மங்காத நிலை” நாங்கள் பெறவேண்டும்” என்று எண்ணி வணங்க வேண்டும்.
இப்படிக் கண்கொண்டு பார்த்து எண்ணுகின்ற பொழுது, இதனின் உணர்வின் நினைவலைகளைக் கண் பருகுகின்றது. நம்முள் நல் உணர்வின் சத்தாகப் பதிவாகின்றது.
எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வின் தன்மை, நம்முள் பெருகும் பொழுது, அந்த உணர்வின் தன்மை நம் உடலில் ஆன்மாவாக மாறுகின்றது.
ஆகவே, பிறிதொருவர் நம்மைப் பார்த்தவுடனே,
நமது சொல்லைக் கேட்டவுடனே
அவருடைய புலன்களில் தாக்கப்பட்டு,
நமது உடலிலிருந்து மிதந்து வரும்
நற்குணங்களின் உணர்வுகள் அவரால் நுகரப்பட்டு
நம்மீது நற்குணங்கள் கொண்ட செயலாக
அணுகிவரும் தன்மையை ஊட்டும்.
இதற்குத்தான், ஆலயங்கள் ஞானிகளால் உருவாக்கப்பட்டது

2 comments: