Monday 12 June 2017

நடராஜர் உருவான வரலாறு தெரியுமா?

சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறைக் கேளுங்கள்:
சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலையைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர்.
சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்; ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலை நீடித்தது. அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது. “என்ன செய்வீர்களோ தெரியாது… சிலை செய்தாக வேண்டும்.
அதுவும் இன்று மாலைக்குள் செய்தாக வேண்டும்; இல்லாவிட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்…’ என, எச்சரித்து விட்டு போய் விட்டான். அவர்கள் எவ்வளவோ முயற்சித்தனர்; சிலை செய்ய முடியவில்லை. தங்கள் வாழ்வு இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது என்று பயந்து போயிருந்த நிலையில், ஒரு முதியவரும், மூதாட்டியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த பெரியவர்கள், அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர். எரிச்சலில் இருந்த சிற்பிகள், “குடியுங்கள்… நிறைய குடியுங்கள். நாங்கள் சாகப் போகிறோம்; போகும் போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்…’ என்று சொல்லி, ஒரு செம்பில், நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர்.
முதியவர்கள் அதை குடித்தனர். உடனே நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர். தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சிலை அமைந்த வரலாற்றை மன்னனுக்கு எடுத்துக் கூறினர். மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான்.
அந்நியர் படையெடுப்பின் போது, கோவில்களில் உள்ள சிலைகள் நொறுக்கப்பட்டன. அபூர்வமான நடராஜர் சிலை பாழ்பட்டு விடக் கூடாது என்பதால், தில்லை வாழ் அந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும் சிலையைஎடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றனர். கடைசியாக, மலையாள தேசத்துக்கு எடுத்துச் சென்று, ஒரு ஆலமரப்பொந்தில் ஒளித்து வைத்தனர். இதனால், அந்த ஊருக்கு, “ஆலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. அந்நியர்கள் சென்றதும், அந்தச் சிலையை அவ்வூரிலுள்ள அம்பலத்தில் (கோவிலில்) வைத்து பூஜை செய்தனர். அந்த இடத்துக்கு, “அம்பலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து, நடராஜர் சிலை உருவானது.
சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அதில், ஆனி உத்திர நாளும் ஒன்று. இந்த நன்னாளில், நடராஜப் பெருமானை வணங்கினால், பிறப்பற்ற நிலை கிடைக்கும்.

2 comments: