Thursday, 6 July 2017

பிறப்பு உண்டாகும் விதம்-கருட புராணம்.....

பிறப்பு உண்டாகும் விதம்-கருட புராணம்.....
மனித உடல், தோல், நரம்பு, எலும்பு, இரத்தம், தசை, தலை, நாக்கு, பிறப்புறுப்பு, கால்கள், கைகள், நகம், ரோமம் போன்றவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிசயமிக்க உடல் எவ்வாறு உண்டாகிறது என்று கருடாழ்வார் பரந்தாமனிடம் பணிந்து கேட்க, அதற்கு அவரும் விளக்கமளிக்கிறார்.
மானிடர்களில் ஆண்-பெண் இரு பிரிவு உண்டு. இவ்விருவரும் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு சேர்க்கை புரியும் நிலையில் பெண் வயிற்றில் கரு உற்பத்தியாகி அது படிப்படியாக வளர்ந்து பத்து மாதத்தில் முழுவளர்ச்சி பெற்று குழந்தை பிறக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் மாதவிலக்காவது இயல்பாகும். அவ்வாறு மாத விலக்கான நான்கு நாட்கள் வரையில் அவள் தனித்திருக்க வேண்டும். அந்த நாட்களில் அவளைக் காண்பவர்கள் பாவத்திற்குள்ளாவார்கள். பெண்களுக்கான மாதவிலக்கு ஏற்படும் காரணத்தையும் பகவானே ஒரு சம்பவம் மூலம் விளக்குகிறார்.
முன்பொரு சமயம் இந்திரன் தேவலோகத்தில் தன் அரியணையில் அமர்ந்து தேவ கன்னியர்களின் நடனத்திலும் கந்தரவர்களின் இசை கானத்திலும் தன்னை மறந்திருந்தான். அந்தச் சமயம் தேவ குருவான பிரகஸ்பதி அங்கு வருகிறார். இந்திரன் அவர் வந்ததையும் கவனிக்காமல் ஆட்டத்திலும் கானத்திலும் லயித்திருந்தான். அதைக்கண்டு ஆத்திரமுற்ற தேவகுரு சாபமிட்டுவிட்டு அங்கிருந்து வெளிறி விட்டார். அதன்பிறகுதான் அந்த சம்பவம் பற்றி தேவேந்திரன் அறிந்தான். அதனால் குருவை மதிக்காததால் இந்திரன் தன் செல்வவளங்களை இழக்க நேரிட்டது. அதற்கான காரணத்தை அறிந்த தேவேந்திரன் தன் தவறை உணர்ந்து தன் குருவிடம் மன்னிப்புக் கேட்டு தனக்கேற்பட்ட நிலையைப் போக்கிக் கொள்ள முற்பட்டான்.
ஆனால் தேவகுரு பிரகஸ்பதி இருக்குமிடத்தைக் கண்டறிய முடியவில்லை. அதனால் அவன் பிரம்மதேவனிடம் சென்று தனக்கு உதவுமாறு வேண்டினான். பிரம்மதேவன், குல குருவை அலட்சியப்படுத்தியது மாபெரும் குற்றமாகும். அதனால்தான் அவர் சாபமிட்டுவிட்டு உன்னை விட்டு விலகிச் சென்று விட்டார். இருந்தாலும் தேவர்கள், குரு ஒருவர் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. அதனால் அவர் வருமளவும் தற்காலிகமாக ஓர் ஆசான் வேண்டும். அசுர குலத்தைச் சேர்ந்த துவஷ்டா என்பவனின் மகன் விச்சுவவுருவன் இருக்கிறான். அவன், மூன்று தலையுடையவன். இருப்பினும், இப்போது இருப்பவர்களில் அவன் ஒழுக்க நெறியுள்ளவன், அறிவுள்ளவன், வேத சாஸ்திரங்கள் அறிந்தவன், அவனையே குருவாகக் கொள்வாயாக! என்று யோசனை கூறி அனுப்பினார்.
அவ்வாறே இந்திரன் விச்சுவவுருவனை குருவாகக் கொண்டான். அவனைக் கொண்டு ஒரு வேள்வியைத் தொடங்கினான். அசுர குலத்தைச் சேர்ந்த விச்சுவவுருவன் வேள்வி புரியும் போது தன் குலம் தழைக்க தம்முள் மந்திரங்களைக் கூறி வந்தான். தேவேந்திரனுக்கு அவன் வஞ்சக எண்ணம் தெரிந்து விட்டது. தேவர்களுக்காக புரியும் வேள்வியில் அசுரர் நலம் வேண்டிய அவன் மீது கோபங்கொண்டு தன் வஜ்ஜிராயுதத்தால் அவன் மூன்று தலைகளையும் வெட்டினான். அத்துடன் அவனும் அழிந்தான். ஆனால் அவன் தலைகளுள் ஒன்று சோமபானம் அருந்தியதால் காடையாகவும் மற்றொரு தலை சுரபானஞ் செய்ததால் ஊர்க்குருவியாகவும் இன்னொரு தலை அன்னபானம் செய்ததால் கிச்சிளப் பறவையாகவும் ஆயிற்று.
விச்சுவவுருவன் அரக்கனே என்றாலும் அவன் தேவர்களுக்கு குருவாக இருந்தவன். அதனால் தன் குருவைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்ம ஹத்தி தோசம் பீடித்தது. அதாவது உயிர்க் கொலை புரிந்த பாவத்திற்குள்ளானான். இதனால் தேவேந்திரன் தன் பொலிவையும் ஆற்றலையும் இழக்க நேரிட்டது. அதைக்கண்ட தேவர்கள் ஒன்றுகூடி இந்திரனுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்கு ஒரு வழியைக் கண்டறிந்தனர். அதன்படி தேவர்கள் தண்ணீரையும் மண்ணையும் பெண்களையும் இந்திரனுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் பங்கிட்டுக் கொள்ளும்படி வேண்டினர்.
அம்மூவரும் “எவ்வாறு பங்கிட்டுக் கொள்வது?” என்று கேட்க, அதற்கு தேவர்களே வழி கூறினர். தண்ணீரில் தோஷம் நுரையாகக் கழியும், மண்ணிலே தோசம் உவராகக் கழியும், பெண்களில் தோம் பூப்பாகக் கழியும் என்ற வழியைக் கூறினர். அதைக் கேட்டு மூவரும் இவ்வாறு இந்திரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை தாங்கள் ஏற்பதால் உண்டாகும் நன்மை என்ன என்று வினவினர். அதற்கு தேவர்கள் தண்ணீர் இறைக்க இறைக்க அது சுரக்கும், மண்ணில் தோண்டப்பட்ட குழி தானே நிறையும், பெண்கள் கருவு மிளிர்க்கும் வரையில் கணவருடன் கூடிக் களிக்கலாம் என்ற நன்மைகளைக் கூறினர்.
அவ்வாறு மாதவிலக்காகும் பெண்களை நான்கு நாட்கள்வரை பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால் பாவம் வந்தடையும். நான்காம் நாள் நீங்கிய பின்பு சிறிது தூய்மை அடைவாள். ஐந்தாம் நாள் முழுவதும் தூய்மை பெற்று குடும்பக்காரியங்கள் செய்யும் தகுதி அடைவாள். அதன்பிறகு பார்ப்பது தோஷமில்லை. அவ்வாறு மாதவிலக்கான ஆறாவது நாள் முதல் பதினெட்டாம் நாள் வரையிலுள்ள செட்டை நாள்களில் இரவில் அவளோடு சேர்க்கைக் கொள்ள ஆண் குழந்தை உண்டாகும். அதனால் ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தம் மனைவியை, மாதவிலக்கான இரட்டை நாள்களான 6,8,10,12,14,16,18 ஆகிய நாட்களில் கூடி மகிழலாம்.
அவ்வாறு இரட்டை நாளில் கூடியிருந்து அதனால் குழந்தை பிறந்தால் அது நல்ல குணமுள்ளதாகவும் கடவுள் பக்தி உள்ளதாகவும் இருக்கும். சாதாரணமாக ஒரு பெண் மாதவிலக்கான நான்கு நாட்களுக்குமேல் எட்டு நாள்களுக்குள் கருத்தரிக்க ஏற்ற காலமாகும். தம்பதிகள் இருவரும் தங்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாக வேண்டும் என்ற ஒருமித்த மனத்துடன் அதிக மோகமுடையவர்களாய் கூடிக் களிக்கவேண்டும். அவ்வாறு சேர்ந்தால் ஆணிடமிருந்து வெளிப்படும் சுக்கிலமும் பெண்ணிடமிருந்து வெளிப்படும் சுரோணிதமும் ஒன்று கலந்து கருவில் சேர்ந்து விருத்தியடையும்.
ஆண்-பெண் இருவரிடமிருந்தும் வெளிப்படும் சுக்கில சுரோணிதத்தால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண் மகவும் பெண்ணின் சுரோனிதம் அதிகமானால் பெண் மகவும் பிறக்கும். இரண்டும் சம அளவில் இருந்து கலக்கும் நிலையில்தான் அலியாகப் பிறக்கிறது.
அவ்வாறு தம்பதிகள் கூடிப் புணர்ந்த ஐந்தாம் நாளில் கருப்பையினுள் ஒரு குமிழி உண்டாகும். அதுவே பதினான்காம் நாளில் சிறிது தசையாகும். இருப்த்தைந்தாவது நாளில் அது மேலும் வளர்ச்சியுறுகிறது. ஒரு மாதத்தில் அந்தத் தசையுடன் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது. இரண்டாவது மாதத்தில் தோலும் மூன்றாம் மாதத்தில் நரம்புகளும் நான்காவது மாதத்தில் ரோமங்களும் உள்வடிவமும் உண்டாகும். ஐந்தாவது மாதத்தில் காதுகள், மூக்கு, மார்பு தோன்றும். ஆறாவது மாதத்தில் கழுத்து, சிரசு, பற்கள் உண்டாகும். ஏழாவது மாதத்தில் கருவில் எல்லா உறுப்புகளும் உண்டாகி முழு உருவை அடையும்.
ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்ற நாபியின் மூலத்திலிருந்து பூர்வ ஜென்ம கர்மங்களை நினைத்துக் கொண்டிருந்து பத்தாவது மாதத்தில் பிறக்கிறது. மனித தேகமானது பஞ்சபூதங்களாலானது. பஞ்சந்தீரியங்களை அடைந்து பத்து நாடிகளைக் கொண்டதாய் சவித வாயுக்கள் சேர்ந்துள்ளது. பிராணன் அபானன், சமானன், உதானன், வியனன், நாகன், கூர்மன், கருகன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகியவையே வாயுக்களாகும்.
கருவில் இருக்கும் போதே அந்த ஜீவனுக்குரிய ஆயுள் இவ்வளவுதான் என்றும் இந்த விதத்தில் மரணம் ஏற்படும் என்றும் அதன் அறிவு கற்க்கும் வித்தை இவ்வளவுதான் என்னிடம் கோபம், யோகம், போகம் இவ்வளவுதான் என்றும் இவை எல்லாம் பூர்வஜென்மப் பலன்களை அனுசரித்து பிரம்ம தேவனால் நிச்சயிக்கப்படுகின்றன. அதனால் ஒருவர் தீர்க்காயுள், உயர்ந்த கல்வி, இன்பசுகம், யோகம் போன்று நற்பலன்கள் மறு ஜென்மத்தில் உண்டாக வேண்டும் என்று நினைத்தால் எடுத்த பிறவியில் நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்று வேதசாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

No comments:

Post a Comment