Sunday 2 July 2017

சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது என்பது ஏன்?

சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது என்பது ஏன்? - புதிய தகவல்கள்
சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக, நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பதாகும். அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.
சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது ரிஷபம் வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறியது.
அவ்வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான், ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால் நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார் சிவபெருமான்.
சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தியுள்ளதை நாம் காண முடியும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவ பெருமானின் ஆணைக் கேற்பவே அவ்வாறு உள்ளது.
சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர்.
இதற்கு காரணம் உண்டு. இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார்.
ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்ல கூடாது என்றும் இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்று சொல்வார்கள். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அது மட்டுமல்லது, இறைவனின் முதல்வன் விநாயகர். சிவன் கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரனே, தயவுசெய்து மூலவருக்கும் நந்திக்கும் இடையே செல்லாதீர்கள்

1 comment: