Thursday, 13 July 2017

*சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?*

*சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?*
சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத் தடைக்கான தோஷம் போக்கவும் நடத்தப்படுகிறது.
'சுமங்கலி' என்றால் மங்கலம் நிறைந்தவள் என்று பொருள்.
அம்பிகையின் திவ்ய நாமங்களைச் சொல்லி வழிபடும் ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் 967 வது திருநாமமாக உள்ள 'சுவாஷினி' என்னும் பெயரில் இருந்துதான் 'சுமங்கலி' என்னும் பெயரானது உருவானது.
திருமணமான பெண்களை 'சுமங்கலி' என்று அழைப்பது வழக்கம்.
பராசக்தி உலகைக் காத்தருள்வதைப் போல, குடும்பத்தைச் சீரும், சிறப்போடும் திறம்பட வழி நடத்தும் பெண்கள் சக்தியின் வடிவமாகவே போற்றப்படுகின்றனர்.
சுமங்கலிப் பெண்கள் ஒன்று சேர்ந்து, திறம்பட நடத்துவதால் சக்தி வழிபாடாகவே இது போற்றப்படுகிறது.
*எந்தெந்த தினங்களில் சுமங்கலி பூஜை நடத்தலாம் ?*
ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நடத்தலாம்.
இந்த தினங்களில் யோகம், திதி போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கரிநாளில் நடத்தக்கூடாது. ராகுகாலம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நவராத்திரி நாட்களில் நடத்துவது மேலும் சிறப்பாக அமையும்.
*சுமங்கலி பூஜை எப்படிச் செய்ய வேண்டும்?
பூஜை செய்வோர் இல்லங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டின் உள்ளேயும், வாசலிலும் அழகாக மாக்கோலம் இட வேண்டும்.
மாவிலைத் தோரணங்களால் வீட்டை அழகுபடுத்த வேண்டும்.
பூஜை செய்வோர் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மட்டும் அல்லாமல், உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து நடத்துவது அந்தச் சூழலையே இனிமையானதாக மாற்றும்.
பூஜைக்கு அழைக்கப்படும் பெண்களை சக்தியின் வடிவமாகக் கருதி சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும்.
பின்பு, அவர்களை அழகாக கோலமிடப்பட்ட பலகையில் அமரவைக்க வேண்டும்.
அவர்களது பாதங்களைத் தாம்பூலத் தட்டில் வைத்து, பூஜை நடத்தும் இல்லத்தின் தலைவி அவர்களுக்கு, பாதபூஜை செய்ய வேண்டும்.
அடுத்ததாக குங்குமம், சந்தனம் பூசி, அவர்கள் தலையில் சூடிக் கொள்ள மலர்களும் கொடுக்கவேண்டும்.
தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு புடவை அல்லது ஜாக்கெட் துணியுடன் , மஞ்சள், குங்குமம், மருதாணி (குலவிருத்திக்காக) மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றைத் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கவேண்டும்.
விழாவுக்கு வந்த பெண்களுக்கு குடிப்பதற்குப் பாலும், பழமும் கொடுக்கவேண்டும்.
அவர்களை ஶ்ரீதேவியாக நினைத்துத் தீபாராதனை செய்ய வேண்டும்.
தீபாராதனை முடிந்த பின்பு 'பஞ்சாங்க நமஸ்காரம்' மேற்கொள்ளவேண்டும்,
அடுத்ததாக, பூஜைக்கு வந்த சுமங்கலிப் பெண்களுக்கு அறுசுவை உணவளித்து, விழாவுக்கு வந்தவர்களின் மனம் குளிரச் செய்ய வேண்டும்.
நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களை மரியாதையோடு வழி அனுப்ப வேண்டும்.
அதன் பிறகுதான் வீட்டில் உள்ளவர்கள் உணவருந்த வேண்டும்.
*சுமங்கலி பூஜை செய்வதால், உண்டாகும் நன்மைகள்:*
இல்லத்தில் செல்வம் பெருகும்.
துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும்.
தோஷங்கள் நீங்கும்.
குலவிருத்தி உண்டாகும்.

2 comments: