Tuesday 15 August 2017

** கமலக்கண்ணனின் லிலைகள்**

** கமலக்கண்ணனின் லிலைகள்**
அடுத்தவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது சிலருக்கு கைவந்த கலை. மகாபாரதத்தில் இந்திரப்பிரஸ்த மாளிகையில் துரியோதனன் அவமானப்பட்டபோது.... திரவுபதி சிரித்தாள். விளைவு குருக்ஷேத்திர யுத்தம். அடுத்தது....
ஒருவருக்கு ஏதாவது அவமானம் ஏற்பட்டால், அவமானப்படுத்தியவர்களை விட்டு விடுவார். பார்த்துச் சிரித்தவர்களை விட மாட்டார். பழிக்குப்பழி வாங்க சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். அவமானப்படுத்தியவருடன் மோதுவதற்குத் தைரியம் இருக்காது. இதற்கெல்லாம் விளக்கம் தருகிறது இந்த கதை.
கால யவனன்! எப்போது பார்த்தாலும், யது குலத்தினரோடு போரிட்டு அவர்களுக்குப் பிரச்னை செய்து கொண்டிருந்தான். அதைக் கண்ணனே முன்நின்று தீர்த்தார். எப்படி?
ஒரு சமயம்.....
கார்க்கியன் என்பவனை சாலுவன், ""போடா பேடி!'' என்று சொல்லி இழிவுபடுத்தினான். அதைக் கேட்டதும், அங்கிருந்த யாதவர்கள் பலமாகச் சிரித்து விட்டனர். கார்க்கியனுக்கு அவமானம் தாங்க வில்லை.
""என்னைப் பார்த்துச் சிரித்த இவர்களை விட்டு வைக்கக் கூடாது. இவர்களுக்கு யமனாக, ஒரு குழந்தையைப் பெறத் தவம் செய்வேன்,'' என்று தவத்தில் மூழ்கினான்.
அவமானப்படுத்திய சாலுவனை விட்டு, அதைப் பார்த்துச் சிரித்தவர்களிடம் கோபப்படுவது என்ன நியாயம்?
அதன் பலனாக, பிறந்த போதே யாதவர்கள் மீது பகையோடு பிறந்தான் காலயவனன். கார்க்கியனின் எண்ணமும், அதன் பலனாக அவன் செய்த தவமுமே இதற்குக் காரணம். தந்தையின் எண்ணப்படி காலயவனன், யாதவர்களின் அரசனான கண்ணன் மீது பகை கொண்டு வடமதுரையை அழிக்க வந்தான். கண்ணனோ, கடலில் ஒரு நகரத்தை நிர்மாணித்து யாதவர்களை அங்கே பத்திரமாகச் சேர்த்து விட்டு, அதன்பின், தன்னந்தனியனாக காலயவனனின் பார்வையில் படும்படி போய் நின்றார்.
காலயவனன் கண்ணனை நெருங்கினான். கண்ணனோ, அவனுக்குப் பயந்தோடுவதைப் போல ஓடிப் போய் ஒரு குகைக்குள் மறைந்தார்.
பின்தொடர்ந்து ஓடிய காலயவனனின் பார்வையில், அங்கே யாரோ படுத்திருப்பது போல தெரிந்தது. படுத்திருப்பவர் கண்ணன் என நினைத்துக் கொண்டு, ""ஹா.... அகப்பட்டுக் கொண்டாயா?'' என்றபடி ஓர் அடி அடித்தான். தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்துப் பார்த்தார். அவர் பார்வையில் பட்ட காலயவனன் எரிந்து போனான். அவர் தான்...
முசுகுந்த சக்கரவர்த்தி. தேவர்களுக்கு உதவியதன் காரணமாகக் களைத்து, ஓய்வெடுக்க நினைத்த அவர், ""என்னை உறக்கத்தில் இருந்து எழுப்புபவன் சாம்பலாகப் போக வேண்டும்,'' என்ற வரம் பெற்றிருந்தவர்.
இதை அறிந்திருந்த மாயக்கண்ணன், காலயவனனை குகைக்கு வரும்படி செய்து, முசுகுந்த சக்கரவர்த்தியின் பார்வையாலேயே அழியும்படி செய்தார்.
பார்த்தீர்களா! ஒருவனுடைய குணத்தை உருவாக்குவதில் அவனது பெற்றோர்களுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை! அது மட்டுமல்ல! எந்த நிலையிலும் கண்ணன் தன்னை நம்பிய அடியார்களைக் காப்பாற்றத் தவறுவதில்லை என்பதையும் விளக்கும் சம்பவம் இது.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete