Saturday 19 August 2017

ஆண்டியும் ஒன்று. அரசனும் ஒன்று

!!**ஸ்ரீ கிருஷ்ணர்**!!
"என் பக்தனுக்கு கிடைக்காத தரிசனம் உங்களுக்கு எதற்கு?” திரும்பி நின்ற கண்ணன்!!!
உடுப்பியில் பாலகிருஷ்ணனாய், நித்ய இளைஞனாய், நாம் எப்படி பார்க்கிறோமோ, அப்படியெல்லாம் காட்சியளிக்கும் ஸ்ரீகிருஷ்ணனை தரிசனம் செய்யலாம்.
உருவத்தை பார்ப்பவன் மனிதன். ஆனால் உள்ளத்தைப் பார்ப்பவன் இறைவன். அதனால்தான் ஆண்டவன் முன் அரசனும் ஆண்டியும் சமம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏழை பணக்காரன் என்கிற பேதமெல்லாம் பார்ப்பது மனிதன் தானே தவிர இறைவன் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்திய நிகழ்வு இது.
மற்ற கோவிலில் நேரே கர்ப்பகிரஹம் தெரிவது போல இங்கே தெரியாது. பிறைகளால் ஆன ஜன்னல் வழியே தான் கிருஷ்ணனைக் காணமுடியும்.
காரணம்: அங்கு மிகவும் பக்திமானான செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவன் இருக்கிறான். அவன் தினமும் வேளை தவறாமல் கிருஷ்ணனைச் சேவிப்பதில் மிகுந்த பிரியம் உள்ளவன். ஆனால் ஆசார சீலர்களோ செருப்பு தைக்கும் தொழிலாளி கோவிலுக்குள் வரக்கூடாது, கண்ணனை தரிசிக்கக் கூடாது என்று தடைவிதித்து விட்டனர். அவன் சற்று தொலைவில் நின்றபடியே கோவிலைப் பார்த்து அழுது கொண்டிருந்தானாம். ஒரு நாள் இரவு எல்லாரும் தரிசனம் தருகிற வாசல் இறுக்கமாக மூடப்பட -செருப்பு தைக்கும் தொழிலாளி நிற்கும் பக்கமாய் திரும்பி நின்ற கண்ணன் தன்னைச் சுற்றி சாளரத்தை அடைத்துக் கொண்டானாம்.
அதாவது “என் பக்தனுக்கு இல்லாத தரிசனம் உங்களுக்கும் கிடையாது. அவனைப் போலவே நீங்களும் ஜன்னல் வழியாய் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதைப் போல.
இன்றைக்கும் கூட அர்ச்சகர், ஆராதனை செய்பவர் மட்டுமே உள்ளே போய்வர வழி இருக்கிறது. மற்றவர்கள் எல்லாரும் வெளியில் இருந்துதான் தரிசனம் செய்யவேண்டும்.
இந்தச் செருப்பு தைக்கும் பக்தனுக்கு அவன் தரிசனம் செய்த இடத்திலேயே சிலை நிறுவியிருக்கிறார்கள்.
விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மூலஸ்தானத்தின் கதவு திறக்கப்படுகிறது. இதன் அருகே உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் பூஜைசெய்யும் மடாதிபதிகள் செல்கின்றனர். கிருஷ்ணரை 9 துவாரங்கள் உள்ள பலகணி (ஜன்னல் போன்ற அமைப்பு) வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
வெள்ளியால் ஆன இந்த துவாரத்தை “நவக்கிரக துவாரம்’ என்கின்றனர். இதில் கிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆண்டியும் ஒன்று. அரசனும் ஒன்று.
இங்கே அணையாத அடுப்பு உண்டு. எப்பொழுதும் குறையாத அன்னம் உண்டு.
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

1 comment: