Tuesday, 25 September 2018

வளைகாப்பு ஏன் செய்கிறோம் ?


வளைகாப்பு ஏன் செய்கிறோம் ?

புதிதாக திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு போகும் ஒரு பெண் அந்த வீட்டில் தனக்குப் பரிச்சயமில்லாத சில நடவடிக்கைகளைப் பார்க்கலாம். அவற்றை வினோதமாக இருக்கிறதே என்று ஆரம்பத்தில் நினைக்கலாம். அவ்வீட்டுச் சாப்பாடு முதல் சாமி கும்பிடுவது வரை பல விதமான பழக்கங்கள் மிகவும் புதுமையாக இருக்கும். பொதுவான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எல்லா வீடுகளிலுமே ஏதாவதொன்று இருக்கும். இதை முதன் முதலாகப் பார்க்கும் மருமகளுக்கு அவைகள் வினோதமாக இருக்கலாம். பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் அவர்கள் வீட்டில் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். என்றைக்காவது அந்தப் புதுப்பெண்ணை பார்க்கப்போனால் அவள் ஆரம்பத்தில் எதை வினோதமாகப் பார்த்தாளோ அந்த வாழ்க்கையோடே கலந்து போயிருப்பாள். 'என்னடீ?' என்று இழுத்தால் "இங்கே இப்படித்தான்..? என்பாள்.

ஆக ஒரு குடும்பமோ, சமூகமோ தன்னை சில காரண காரியங்களுடன் நடைமுறைகளைக் கொண்டு கட்டமைத்துக் கொள்கிறது. அதையே கலாச்சாரம், சம்பிரதாயம் என்றெல்லாம் நாம் அழைக்கிறோம. இதை வாழ்ந்து பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமே அன்றி மேலோட்டமாக பார்த்து வனோதமான மூட நம்பிக்கை என்று முடிவு கட்டி கேலி பேசிவிடுவது நமக்குத்தான் இழப்பு. அப்படி ஒரு இழப்பை அடுத்த சந்ததிகள் அடைந்து விடக்கூடாது. அதனாலேயே வீடுகளில் பெரியோர்கள் இவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் கடமையைச் செய்கிறார்கள். 

ஆனால் நம்மைச் சுற்றி இருக்கும் தொலைக்காட்சி ஊடகங்களோ இந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தயுமே "வினோதம்" என்ற வார்த்தையால் அழைத்து அதன் மீது ஒரு ஒவ்வாமையை உருவாக்கப் பார்க்கிறது.

சரி இப்போது தலைப்பிற்கு வருவோம். வளைகாப்பு அல்லது சீமந்தம் என்னும் இந்த சம்பிரதாயம் ஏன் கடைபிடிக்கப் படுகிறது என்பதை கொஞ்சம் பார்ப்போம். நாம் பிறக்கும் போது முதல் நம்மை பல சம்பிரதாயங்கள் வரவேற்கின்றன. அவை ஒவ்வொன்றும் காரனகாரியத்துடனேயே செய்துவைக்கப்படுகின்றன. 

நாம் பிறக்கும் முன்பிருந்தே நம்மைப் பல சம்பிரதாயங்கள் சூழ்ந்து கொள்கின்றன. நாம் பகுத்தறிவாளனா, இவற்றின் மீது நம்பிக்கை கொண்டவனா என்பதெல்லாம் நமக்கே தெரியாத வயதில் நம்மை சமூகத்திற்கு முறையாக வரவேற்கவும் அறிமுகம் செய்யவும் கொண்டாடப்படும் சடங்குகள் அவை. அதன் பெயர் வளைகாப்பு.

கருப்பைக்குள்ளிருந்து கதவைத்திறக்க காத்துக்கொண்டிருக்கும் குழந்தையோடு வெளியிலே இருந்தே விளித்துப் பேசும் உக்தி தான் இந்த வளைகாப்பு. நான் யார்? எங்கே இருக்கிறேன்? யாருக்குள் இருக்கிறேன்? யாரோடு இருக்கிறேன்? யாரெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்? என்ன நடக்கிறது என்னைச் சுற்றி? என்றெல்லாம் வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு!

நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்களும் தனி ஒரு மனிதரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வந்ததாக இருந்ததில்லை. பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.

பொதுவாக கர்பினிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து ஆறாவது முதல் எட்டாவது மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு ஜான் குளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது. உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.

நம் கலாச்சாரத்தில் எந்த ஒரு துவக்கத்தையும் முடிவையும் முத்தாய்ப்பாக நினைத்து கொண்டாடுவது வழக்கம். கருவாய் உருவாகி உதிப்பது முதல் உருவற்று அழிந்து நீர்த்துப்போகும் மறைவு வரை அத்தனையையும் தெய்வீகமாக நினைத்து கொண்டாடுவதே
நமது பழக்கம். ஏனெனில் நாம் எதையும் முழுவதுமாக முற்றுப்பெறுவதாக நினைப்பதில்லை. 

அது போல ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன்னைச் சுற்றி நாங்கள் தான் இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகப்பு. 

சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள். விளக்கொளி குழந்தைக்குத்தெரியுமா? தெரியும், தாயை பாதிக்கும் ஒளி, உஷ்ணம், ஒலி என எல்லாவற்றையும் குழந்தை உணர முடியும்.

மிகப்பலகாலமாக இந்த பூமியின் பழங்குடி மக்களாகிய இந்துக்கள் அதாவது நாம் கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்து அவற்றை பற்றி ஆராச்ச்ய் செய்யும் வெள்ளையர்கள் சில முடிவுகளைக் கூறுகிறார்கள். அவற்றை கொஞ்சம் வரிசைப்படுத்தினால் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள சவுகரியமாக இருக்கலாம். இனி அவை!

1. கருவிலிருக்கும் போதே குழந்தைகள் சப்தங்களை கவனிக்கின்றது. அதீத சப்தத்தால் சில சமயங்களில் பாதிக்கப்படுவதும் உண்டு.

2. கருவிலிருக்கும் குழந்தையால் இசையைக் கேட்கமுடியும். ஒரு வயலின் வாசிப்பை விட ட்ரம்ஸ் வாசிப்பின் அதிர்வலைகளை குழந்தை எளிதில் உணர்கிறது.

3. கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது.

4. அமைதியான ஒரு இடத்தில் வாக்குவம் க்ளீனரின் சப்தம் முதல் பக்கெட்டில் தண்னீர் கொட்டும் சப்தம் வரை குழந்தையால் கவனிக்க முடியும்.

5. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சியம் செய்து கொள்கிறது. 

6. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது.

7. ஃப்ளாஷ் லைட் அடிக்கப்படும் போது குழந்தை அதனை எதிர் கொள்ளும் முகமாக அசைவதை ஆராய்ச்சிகளின் போது பல தாய்மார்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படி பல ஆராய்ச்சிகள் மூலம் வெள்ளையர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சடங்குளாக கடைபிடித்து கருவிலிருக்கும் போதே புதிதாக வரப்போகும் ஜீவனுடன் உரையாடி உறவாடிப் பழகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான்.

ஆம் அப்படி ஒரு நுட்பமான விஷயத்தை வாழ்ந்தறிந்து கருவிலிருக்கும் குழந்தையோடு எப்படிப்பழகினார்கள் என்பதற்கு சான்று மகாபாரதத்தில் கூறப்படும் அபிமன்யுவின் கதையே சான்று. 

மகாபாரதப் போர் துவங்கியபோது, அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு பதினாறு வயது. அபிமன்யுவும் போரில் ஈடுபட்டான். “கௌரவர்களின் சக்கர வியூகத்தை என்னால் உடைத்துக்கொண்டு போக முடியும்“ என்று கர்ஜனை செய்தவாறு உள்ளே நுழைந்து போரிட்டான். எதிரிகளை, எல்லோரும் வியக்கும்படி சின்னா பின்னமாக்கினான். ஆனால் உள்ளே போன அவனுக்கு வெளியே வரத் தெரியவில்லை; மாண்டான்.

சக்கர வியூகப் போர் முறையை யாருமே அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை; வியூகத்தை உடைத்துப் போவதை எப்படிக் கற்றான்? வெளியே வரும் முறையை ஏன் கற்கவில்லை?

அர்ஜுனன் கருவிலிருக்கும் போதே தன் மகனுக்கு போரின் போது சக்ரவியூகத்தை உடைத்து உள்ளே செல்வது எப்படி என்கிற வித்தையை வெளியிலிருந்து பேசிப்பேசியே கற்றுக்கொடுத்து இருக்கிறான். சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல கற்றுக்கொடுத்த அர்ஜுனன் அதிலிருந்து மீண்டு எப்படி வெளியேற வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்காமல் போய்விட்டான் என்கிறது பாரதம். ஆகவே அதை மட்டும் குழந்தையான அபிமன்யூ கற்றுக் கொண்டிருக்கிறான்! 

அதெப்படி முடியும் என்று குதர்க்க கேள்வி கேட்பவர்கள், இன்று உலகம் முழுவதும் நடந்து வரும் கருவிலிருக்கும் குழந்தைக்கு பாடம் சொல்லித் தருவது பற்றிய ஆராய்ச்சியை உற்று நோக்கினால் விடை கிடைக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கு பாடம் நடத்தும் பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது. கர்பினிப்பெண்கள் தங்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுதே புத்திசாலியாகப் பிறந்து உலக ஓட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆவலோடு இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்.

இது போன்ற தற்காலச் சான்றுகளே மகாபாரத அபிமன்யூவின் சக்கர வியூகப்பயிற்சி பொய்யில்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாகிறது. நமது இதிகாசங்களையும் சம்பிரதாய சடங்குகளையும் கேலிக்குரியவைகள், மூட நம்பிக்கைகள் என்று சித்தரிப்பவர்கள் அதையே வெள்ளைக்காரன் வேறு பெயரில் எடுத்துச் சொல்லும் போது கேட்டுவிட்டு மண்டையாட்டுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய நகைச்சுவை.

ஆக கருவிலிருக்கும் குழந்தை என்பது குடும்ப பட்ஜெட் போதவில்லை யென்பதால் கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல. அது ஒரு உயிர். நம்மோடு வாழ, நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்த நம் தாய்மார்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடிக் கொண்டாடி மகிழ்ந்ததே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு என்றால் மிகையாகாது. எனவே நமது தாய்மார்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்.

வரப்போகும் உயிர்களை குதூகலமாக வரவேற்க தயாராவோம். கருப்பை ஜீவன்களை கழுவிப்போடும் கசடாக நினைத்து கருக்கலைப்பு செய்பவர்களைக் கண்டிப்போம். கருவிலிருக்கும் உயிரையும் நம்மைப் போன்ற ஜீவனாக நினைப்போம். பாரம்பரிய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் காப்போம்.

2 comments: