Friday, 18 January 2019

மகா சனி பிரதோஷம் - விரதம் இருந்தால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும்

சென்னை: சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். இந்த நாளில் சிவனுக்கு உகந்த மகா பிரதோஷமும் வருவதால் சிவன், விஷ்ணு ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நாளைய தினம் ஜனவரி 19 ஆம் தேதி சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் சகல நன்மைகளை அடையலாம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வருவதால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. பிரதோஷ தரிசனம் காணும் வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும். சிவ தாண்டவம் ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள். புண்ணியம் சேரும் நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும். சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. பிரதோஷ வழிபாடு பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது. எப்படி வழிபடுவது சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். நன்மைகள் நடைபெறும் எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவங்களும் நீங்கும். சிவ அருள் கிட்டும். நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வளர்பிறையில் வருகிறது. இந்த சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் சிவாலயம் சென்று இறைவன் அருள் பெறலாம்

2 comments: