Monday, 4 February 2019

கன்னிராசி

சாதுரியமாக பேசி காரியத்தை சாதிக்கக்கூடியவர்கள் இந்த ராசிக்காரர்கள்!
ஜோதிடத்தில் ஆறாவது ராசி கன்னி. தமிழ் மாதங்களில் புரட்டாசி ஆரம்பமாகும் ராசி இதுதான். மாதுலக்காரகன், வித்தைக்காரகன், வித்யாக்காரகன் என்றெல்லாம் போற்றப்படும் புத பகவானே இந்த ராசியின் அதிபதி. இது ஒரு பெண்தன்மைக் கொண்டராசி. திசைகளில் தெற்கை குறிக்கும். பஞ்ச பூதங்களில் மண்ணைக் குறிக்கும் ராசி இது.
கன்னிக்கு உரியத் தெய்வம் விஷ்ணு. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புரட்டாசி மாதம் சூன்யமாதம். அதனால் புரட்டாசி மாதத்தில் இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்குரிய எந்தச் சுபகாரியங்களும் செய்யக்கூடாது. கன்னியில் பிறப்பவர்கள் பொதுவாக நல்லவர்கள். தாய் தந்தையர் மீது தனி அன்பு செலுத்துவார்கள். இளமையில் கொஞ்சம் கஷ்டப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும். கன்னி ராசியின் அதிபதி புதன் ஆட்சி பெறுவது மட்டுமல்லாமல், உச்சமும் அடைகின்றார். அதனால் அவரின் பலமும் அதிகரிக்கின்றது.
அறிவாளிகள், அதிகம் யோசிப்பவர்கள், ஆளுமைத்திறன் மிக்கவர்கள். மிகத் தீர்க்கமாக முடிவெடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். எளிதில் மற்றவர்களைக் கவரும் தோற்றமும், ஈர்க்கும் அமைப்பையும் கொண்டவர்கள். எந்த நிலையானாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நல்ல உள்ளமும், எண்ணமும் உடைய இவர்கள் இனிமையான குரல் வளம் உடையவர்கள்.
எதிரிகளையும் திருத்தி தன் வசம் வைத்துக்கொள்ளும் சாதுர்யசாலிகள். எதிலும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளக்கூடியவர்கள். தர்ம சிந்தனையும், தானம் செய்வதிலும் ஈடுபாடு உடையவர்கள். சிந்தித்துச் செயல்படுபவர்கள். தவறுகள் ஏற்பட்டாலும் அதைச் சாமர்த்தியமாக சமாளிக்கும் திறமை உடையவர்கள். எடுத்த செயலில் உள்ள நிறை மற்றும் குறைகளை நன்கு அறிந்தவர்கள். சூழ்நிலைக்கேற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என எண்ணக்கூடியவர்கள். தன்னைப் பற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதில் அதிக விருப்பம் உடையவர்கள். ஆன்மீக பணிகளுக்கு செலவு செய்வதில் விருப்பம் உடையவர்கள். கௌரவமின்றி எந்தத் தொழிலாக இருந்தாலும் செய்யக்கூடியவர்கள். ஆனால், கௌரவம் குறையாதபடி நடந்து கொள்ளக்கூடியவர்கள். தனது வெற்றிக்கான ரகசியத்தை எவரிடமும் பகிரமாட்டார்கள். விகடகவியாகவும், சாதுரியமாகவும் பேசி தனது காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
அறிவுத்திறன் மிக்க துறைகளில் அதிகம் இருப்பார்கள். ஆசிரியராக இருப்பதும் இவர்களே. வங்கித்துறைகளிலும் இவர்கள் கால்பதிப்பார்கள். ஜோதிடம், எண்கணிதம், வானசாஸ்திரம் போன்ற துறைகளிலும் இருப்பார்கள். நடுத்தர வயதில் சில கண்டங்கள் ஏற்படும். இதைத் தாண்டினால் எழுவது வயது வரை வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.

No comments:

Post a Comment