Thursday, 7 March 2019

பித்ரு தோஷ நிவர்த்தி தலம்

"ஆதி விநாயகர்"
பித்ரு தோஷ நிவர்த்தி தலம்
பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 58-வது தலமாக இருப்பது திருத்திலதைப்பதி. இதற்கு திலதர்ப்பணபுரி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இன்றைய நாளில் இத்தலம் செதலபதி என்று அழைக்கப்படுகிறது.
அரிசிலாறு, சோழ நாட்டின் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையை ஒட்டி ஓடிவரும் ஜீவநதி.
தேவர்களும் கந்தர்வர்களும் அங்கு வந்து புனிதமான அந்நதியில் நீராடி, இறைவனைத் தொழுது செல்வது வழக்கம்.
மந்தாரவனமாகிய இத்தலத்தில் அருள்வதால், இறைவன் மந்தாரவனேஸ்வரர், இறைவனுடன் அருளும் அன்னை, சுவர்ணவல்லி.
ஒரு சமயம், இறைவன் சிவலோகத்தில் இருந்து தனியே புறப்பட்டு உயிர்களின் நலம் கண்டுணர தேசங்கள் தோறும் சஞ்சாரம் செய்யலானார். அந்த சமயத்தில் ஒருநாள், அம்பாளோ நித்திய கடன் முடிக்க நீராடி வரச் சென்றாள்.
அன்று ஏனோ தனித்திருக்கும் தனக்கு காவலாக ஒருவர் இருந்தால் நல்லது என்று தோன்றியது. குளிக்கச் செல்லும் முன், காவலுக்கு பலம் பொருந்திய ஒருவரை நிறுத்தி விட்டுச் செல்ல எண்ணினாள். நீராடுவதற்காக எடுத்துச் சென்ற மஞ்சள் பொடியால், மங்களம் பொருந்திய சிறுவன் உருவமொன்று சமைத்து காவல் இருக்கச் செய்தாள்.
செல்லும் முன் சின்ன உத்தரவிட்டாள். “மங்கள மகனே, எவர்வரினும் உள்ளே அனுமதிக்காதே!’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள். அன்னை பார்வதியை வணங்கி “அவ்வாறே ஆகட்டும்’ என்றான், பாலகன்.
வலக்கால் தொங்க விட்டு, இடக்கால் மடித்து இடக்கையை இடக்காலின் மீது வைத்து, வலக்கையைச் சற்றுச் சாய்த்து அபயமுத்திரையினைக் காட்டியவாறு அமர்ந்து காவல் காக்கத் தொடங்கினான் அதேசமயம் உலா முடிந்து அந்த உமாபதி, அவசரமாக உள்ளே செல்ல முற்பட்டார். தடுத்தான், உமைபடைத்த பாலன். விக்னம் செய்த சிறுவன் மேல் சிவபிரானுக்கு சினம் ஏற்பட்டது. வாதம் செய்த அவனை வாதம் செய்ய முடிவு செய்தார். கோபம் மேலோங்க, அவனது சிரம் அறுத்து எறிந்தார்.
போரோலி போன்ற பேரொலி கேட்டு ஓடி வந்தாள், சிவகாமி. நடந்தது அறிந்து சினந்தாள். யார் அந்தப் பிள்ளை என்றார் மகேசன். “நான் படைத்த நம் மகன் என்றாள். அவனை உயிர்ப்பிக்க வேண்டுவது உம் கடன்!’ என்று ஈசனிடம் உரைத்தாள்.
சிறுவன் மேல் கொண்ட சினத்தை உணர்ந்த சிவபெருமான், தவறை நினைத்து வருந்தினார். பின்னர் கனங்களை அழைத்து, வடபுறம் தலைவைத்து இருக்கும் ஜீவனின் தலையைக் கொண்டுவந்து பொருத்துக என உத்தரவிட்டார். கிடைத்த யானையின் தலையைக் கொண்டுவந்து பொருந்தினர் கணங்கள். அதற்கு உயிர் அளித்தார் உலகேசன்.
அதுமுதல் யானை தலையும் மனித உடலுமாக உயிர்த்து எழுந்த கணேசன், பெற்றோரைப் பணிந்தான்.
சிவாலயங்களில் தனக்கெனத் தனியிடமும், அந்தஸ்தும் வேண்டுமெனக் கேட்டான். அதோடு, நான் உருவான இடத்தில் தன் பழைய உருவுடன் காட்சி தர வேண்டும் எனவும் வேண்டினான்.
சிவனார் தனது கணங்களுக்கு எல்லாம் அவனைத் தலைவனாக்கி கணபதி என அழைத்தார். அதோடு கணங்களுக்குத் தலைவன், கணேசன் எனவும் தெய்வ நிலையுடன் விளங்கச் செய்தார்.
அனைத்து சிவாலயங்களிலும் மூலக் கருவறையின் பின்புறம் தனிச் சன்னதி தந்ததோடு, திருவீதி உலாவில் பஞ்ச மூர்த்திகளுள் ஒருவராக எழுந்து அருளும் வாய்ப்பையும் நல்கினார்.
மற்றொரு வரத்தின்படி, மனிதர்கள் தொல்லைகளாகிய விக்னங்களில் இருந்து விடுபட்டு சுகமாக வாழவும், முன்வினைப் பயன்கள் தீரவும் அருள்பவராக அரிசிலாற்றங்கரையில் அமைந்த திலதர்ப்பணபுரியில் ஆதிவிநாயகராக பழைய திருமுகத்துடன் கணநாதனை அருள்புரியச் செய்தார். திலதைப்பதி என்றழைக்கப்பட்ட அத்தலம் முன்னோர்க்கு உரிய கடமைகளைச் செய்யும் தலைமாதலால் திலதர்ப்பணபுரி என்றாகியிருக்கிறது இன்று.
திலதர்ப்பணபுரியில் சிவனை நோக்கி அமர்ந்து மனித முகத்தோடு அருள் வழங்கி சிறப்பிக்கும் நரமுக கணபதியை என்று வழிபட்டாலும் பலப்பல நன்மைகள் கிட்டும். குறிப்பாக சதுர்த்தி தினங்களில் வழிபட ஏராளமானோர் குவிகின்றனர். விநாயகர் சதுர்த்தி பூஜை தனிச் சிறப்புடன் நடக்கிறது. என்றும் வழிபட்டு பேறு பெறலாம்.
திலதர்ப்பணபுரி இன்று மேலும் திரிந்து செதலப்பதி என திரிந்து வழங்குகிறது.
செதலப்பதி ஆதிவிநாயகனை மயிலாடுதுறை மாவட்டம் செதலபதியில் அமைந்து அருள்தரும் முக்தீஸ்வரர் திருக்கோயில் வாயிலில் தரிசனம் செய்யலாம்.
எப்படிப் போவது?
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோ மூலம் கோயிலுக்கு செல்லலாம். பூந்தோட்டம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆதிவிநாயகர் கோயில் என்று இக்கோயிலை அழைக்கிறார்கள். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் கூத்தனூர் சரஸ்வதி கோயில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்,
செதலபதி,
பூந்தோட்டம் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்.
திருவாரூர் மாவட்டம் – 609 503.
இக்கோயில், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

No comments:

Post a Comment