Saturday, 18 April 2020

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் குறித்து


தொழில்நுட்பம், விஞ்ஞானத்தை ஆச்சரியப்படுத்தும் மகத்தான கலைப் படைப்பு 'தஞ்சை பெரியக் கோவில்'

உலகின் பாரம்பரியச் சின்னமாகவும், தமிழகத்தின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

விஞ்ஞானம் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. விஞ்ஞானம் வளராத காலத்தில், எவ்வித தொழில் நுட்பக் கருவிகளும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மகத்தான கலைப் படைப்பே தஞ்சை பெரிய கோவில்.

மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதை மானுடத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் அழகின் பேரழகு அது. அத்தகைய பெருமைக்கு முக்கியக் காரணம் காவிரி உருவாக்கிய வளமை தான். கண்ணை விரிய வைக்கும் காவிரியின் கலைப்பெருக்கத்தில் முதன்மையானதும், மனித உழைப்பின் மகத்தானதுமே தஞ்சை பெரிய கோவில்.

கண் எட்டிய தூரம் வரை மலைகளோ, குன்றுகளோ இல்லாத பெரும் சமவெளியே தஞ்சை. ஆனால் பெரும் கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலுக்கான கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது முதல் கேள்வியாக மனதில் எழுகிறது. இரண்டாவது எப்படிக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பதே.

சிறிய சக்கரம் மாட்டிய கைப்பெட்டியை இழுத்து வருவதற்குள் வேர்வை சிந்தும் மனிதர்களைப் பயணத்தின் பொழுது பார்த்திருப்போம். இது எப்படி சாத்தியமானது. கற்பனை செய்யவே மனம் அஞ்சுகிறது.

கற்கள் கொண்டு வந்து சேர்த்ததற்கான ஆய்வுகளைத் தேடினால் சில தரவுகள் கிடைக்கிறது.

திருச்சிக்கு அருகே மாமலை என்றொரு மலை இருந்ததாகவும், அந்த மலையை முற்றிலும் அறுத்து எடுத்து, யானைகள் மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மனிதர்கள் நினைத்தால் மாமலையும் கடுகு தான். திருக்கோவிலூர் என்ற ஊருக்கு அருகிலிருந்தும் கொண்டு வரப்பட்டதாகவும் சில ஆய்வுகள் சொல்கிறது.

கோவிலுக்குள் சென்றவுடன் உடல் சிலிர்க்கிறது. படைப்பின் பிரமாண்டத்தில். பொன் நகைகளில் செய்வதைப் போன்று கல்லில் நுட்பமான அழகிய வேலைப்பாடுகளை செதுக்கி வடித்திருக்கிறார்கள்.

உலகில் எத்தனையோ ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் தஞ்சை பெரிய கோவில் குறித்த ஆய்வுகளே அதிகமாக இருக்கிறது. அயல் நாட்டவர்களுக்கு தஞ்சை பெரிய கோவில் மாபெரும் வியப்பாகத்தான் அமைந்து போனது. இன்றைய இந்திய நிலப்பரப்பில் அன்று எழுந்த கட்டிடங்கள் பல.

கஜூராஹோ, புவனேஸ்வரத்தின் லிங்கராஜ் ஆகியவையும் தஞ்சை பெரிய கோவிலின் 11 ம் நூற்றாண்டைச் சார்ந்தது தான். ஆனால் அன்று எவ்வளவு கட்டிடங்கள் உருவானாலும் ஆலயங்களின் தலைவனாக தஞ்சை பெரிய கோவிலே பேசப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டது என்பது மூன்றாவது கேள்வி?

ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் கி.பி 985 முதல் கி.பி.1014 வரையிலானது. தஞ்சை பெரிய கோவில் கி.பி. 1003 ல் தொடங்கி கி.பி 1010 ம் ஆண்டில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. ஆலயத்தை உற்று நோக்கினால் ஏழு ஆண்டுகளில் கட்டியிருக்க முடியுமா என்று நான்காவது கேள்வி வந்து விழுகிறது. ஆனால் அதுவே உண்மையாகவும் இருக்கிறது.

மாபெரும் மனித உழைப்பும், கலைஞர்களின் சிந்தனை ஆற்றலும் இணைந்து இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இந்தக் கோவில் கட்டுவதற்கு எது காரணமாக இருந்தது என்ற ஐந்தாவது கேள்விக்கு, போர்களில் கிடைத்த வெற்றிகளை இறைவனுக்கு அர்ப்பணிக்கவே இராஜராஜன் ஆலயம் எழுப்பியதாக பதில் கிடைக்கிறது.

இக்கோவில் சிவலிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12.

சிவலிங்க பீடத்தின் உயரம் 18 அடி. தமிழின் மெய் எழுத்துக்கள் 18. கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216.சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247.

பக்தி இயக்க பரவலாக்கத்தில் மொழிக்கான முக்கியத்துவத்தை சைவம் உள்வாங்கியதன் வெளிப்பாடாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் உள்ள ஆலயங்களிலேயே தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியே இரண்டாவது பெரிய நந்தி. முதலாவது பெரிய நந்தி எது என்பது ஆறாவது கேள்வி.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள லேபாக்சி பாபனேஸ்வரர் ஆலயத்திலுள்ள நந்தியே இந்திய நிலப்பரப்பில் உள்ள கோவில்களில் முதலாவது பெரிய நந்தி. இதன் உயரம் 15 அடி. நீளம் 27 அடி. தஞ்சை பெரிய கோவில் நந்தியின் உயரம் 12 அடி. நீளம் 20 அடி. தஞ்சை நந்தியின் வேலைப்பாடும், கலை அழகும் தனித்துவமானது. இந்த நந்தி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது ஏழாவது கேள்வி.

பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட நந்தி இது. தஞ்சை கோவில் கட்டப்பட்டபோது வைக்கப்பட்ட நந்தி சிறு சேதாரம் அடைந்ததால் நாயக்கர் காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நந்தியே இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எட்டாவதாக ஒரு கேள்வி எழுகிறது. கோவில் கோபுரத்தின் அடித்தளம் பற்றிய கேள்வி. இத்தகைய பிரமாண்ட கோவில் கோபுரத்தின் ஆழம் 10 அடிகள் மட்டும் தான். தஞ்சை பெரிய கோவில் கோபுரம் என்றே இதை பலரும் அழைக்கிறார்கள். ஆனால் இது கோபுரம் அல்ல. விமானம் என்றும், கோவிலின் முகப்பில் அமைவதே கோபுரம் என்றும் கூறுகிறார்கள் கட்டிடக்கலை வல்லுநர்கள்.

இந்தக் கோவில் எதை முன்மாதிரியாக கொண்டு கட்டப்பட்டது என்ற ஒன்பதாவது கேள்விக்கான விடை மயன்.

தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை என மயன் புகழப்படுகிறான். மயன் கால பிரமிடுகளின் முன் மாதிரியே தஞ்சை பெரிய கோவில் என்கிறார் சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை தமிழகத்தின் கலைப் பொக்கிசங்களை உருவாக்கித் தந்த சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பிறந்த சிற்பி கணபதி ஸ்தபதி. கட்டிடக்கலையின் தாயகம் தமிழகம் தான் என்கிறது அவரது அனுபவ ஞானம்.

கருங்கற்களால் இரண்டு சுவர்கள் சுற்றி அமைக்கப்பட்டு கருவறையில் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உள் சுவரின் அகலம் 11 அடி. வெளிச்சுவரின் அகலம் 13 அடி. இந்த இரண்டு சுவர்களுக்கிடையேயான தூரம் 6 அடி. இந்தச் சுவர்களில் சோழர்களின் ஓவியங்கள் வியக்கத்தக்க வகையில் வரையப்பட்டுள்ளன. இந்த இரண்டு சுவர்களுக்குமான ஆற்றலை அறிந்தால் அதிர்ந்து தான் போக வேண்டியுள்ளது. 216 அடி உயரம் கொண்ட கருங்கற்களால் இழைக்கப்பட்ட விமானத்தின் ஒட்டு மொத்தச் சுமையையும் இந்த இரண்டு சுவர்களுமே தாங்கி நிற்கிறது.

கருவறை இருள் சூழ்ந்த இடம். உள்ளே எப்போதும் வெளிச்சம் பரவி நிற்க வேண்டும். ஏனெனில் லிங்கம் அங்கே இருக்கிறது. மனிதர்கள் இல்லாத போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட விளக்கு ஒன்று அமைக்கப்பட்டது.

இராஜராஜனின் சகோதரி குந்தவை ஏற்றிய விளக்கு அது. அது நந்தா விளக்கு என்கிறார்கள். நுந்துதல் என்பதற்கு தூண்டுதல் என்று பொருள். இவ்விளக்கின் சிறப்பு அமைப்பின் காரணமாக திரியை தூண்டுதல் அவசியமற்று இருப்பதால் நுந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது. நுந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது.

விமானத்தை பார்த்தால் பத்தாவது கேள்வி மட்டுமல்ல.பல கேள்விகள் எழுகிறது. அதற்கான பதில்கள் அனைத்தும் காவிரியின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் உழைப்பின் மேன்மையை உலகுக்கு பறைசாற்றும் உன்னதப் படைப்பல்லவா அது?

கருவறை மிகத் துல்லியமான சதுரமாக நான்கு பக்கமும் சிறிதும் பிசிரின்றி கட்டப்பட்டிருக்கிறது. இதேபோல் சிவலிங்கத்தின் மையப் பகுதியில் நூல்வைத்துப் பிடித்து, கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றால் அது கோபுரத்தின் துல்லியமான மையத்தில் இருக்கும். மரம், இரும்பு,காரை போன்ற பொருள்களைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது இந்தக் கோயில்.

இவை எல்லாவற்றையும் கடந்து கோபுர விமானத்தின் உட்புறம், ஒரு டம்ளரைக் கவிழ்த்து வைத்திருப்பது போன்ற உள்கூடாகக் காட்சியளிக்கும். கற்களை ஒன்றோடு இணைத்து, நுட்பமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது இந்தக் கோவில்.விமானக் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட பரத நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

உலகின் பாரம்பரியச் சின்னமாகவும், தமிழகத்தின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. கோயில் கட்டிடக் கலைஞரும், ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் இதையொட்டி கூறிய கருத்து முக்கியமானது.

"பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.

அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி, அதில் பரு மணலை நிறைத்து, அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.

இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம்" என்கிறார் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்.

பெரியகோவில் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் சொல்லப்பட்டு வந்துள்ளது. இந்தக் கதைகளின் உள்நோக்கம் என்னவென்று கூர்ந்து கவனித்தால் மூன்று விசயங்கள் வெளிப்படுகிறது.

1. அதன் பெருமையைப் புகழ்வதாக நினைத்து அறியாமல் பேசுவது.

2. பழமை குறித்த கதைகளை விஞ்ஞானம் மறுக்கும் போது, மக்கள் உண்மையை அறியவிடாமல் மூடத்தனங்களை ஊதிப் பெருக்குவது.

3. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விஞ்ஞான அறிவை இருட்டடிப்பு செய்வதன் மூலம் ஆதிக்கச் சிந்தனையாளர்களால் மூடத்தனங்களை பரப்புவதில் சுயநலம் அடங்கியுள்ளது.

மக்களிடையே பரப்பப்பட்டுள்ள கருத்துகள் சிலவற்றையும், அதன் உண்மைத் தன்மையையும் இங்கு பார்க்கலாம்.

1.`கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது’

2.விமானத்தின் உயரத்தில் இருக்கும் கல் 80 டன் கொண்ட ஒற்றைக் கல்.

3.கோவிலில் உள்ள நந்தி வளர்கிறது.

4. இரவு நேரத்தில் நந்தி எழுந்து மேய்வதற்குச் செல்கிறது.

5.நந்தி மேயச் செல்லாமல் இருப்பதற்காக முதுகில் கடப்பாரை கொண்டு ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள்.

6.சாரம் கட்டி கல்லை மேலே கொண்டு சென்றார்கள். இந்தக் கருத்துகளை கல்வெட்டு ஆய்வாளர் மணிமாறன் திட்டவட்டமாக மறுக்கிறார்.

`காலை நேரத்தில் கோபுரத்திற்குப் பின்பக்கமும், மாலை நேரத்தில் கோபுரத்தின் முன்பக்கமும் கோபுரத்தின் நிழல் தரையில் விழும். உயரே இருப்பது 80 டன் உள்ள ஒரே கல் அல்ல. பல கற்களை ஒன்றாக ஒட்டி வைத்திருக்கும் நுட்பமான வேலைப்பாடே. ஆரஞ்சு பழம் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருப்பதைப் போன்ற நுட்பமே அது. நந்தி வளரவும் இல்லை.மேய்வதும் இல்லை. ஆணி அடித்து அமர வைக்கவும் இல்லை.

ஐந்து முதல் ஆறு டன் எடையுள்ள ஒவ்வொரு கல்லையும் எப்படி உயரே கொண்டு சென்றார்கள்? மண்சாரம் அமைத்து என்கிறார்

சிற்பி கணபதி ஸ்தபதி. மண் சாரம் என்றால் என்ன? பெரிய கோவிலின் உயரம் எவ்வளவு உயர்கிறதோ அந்த அளவுக்கு சுற்றி மண்ணை சாய்வாக கொட்டிவிடுவார்கள். இதன் மலை போன்ற சாய்ந்த பகுதிகளில் கற்பாறைகளைக் கொண்டு சென்றிருப்பார்கள் என்கிறார்.

மழைநீர் தேங்கி ஆலயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இரண்டு வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது.வடக்கு பக்கத்தில் ஒன்றும், தெற்குப் பக்கத்தில் ஒன்றுமாக நீர் வெளியேறும் பாதைகள் உள்ளது.முதலில் அழுக்காக வரும் நீர் தெற்கு பக்கம் மூலமாக நந்தவனத்திற்கும், இரண்டாவது வரும் நல்லநீர் வடக்குப் பக்கமாக சிவகங்கை குளத்திற்கும் செல்லும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. முதல் மழைநீர் சேகரிப்புத்திட்டம் இதுதான்.

கோவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பம் போற்றிப் புகழப்பட வேண்டும்.

No comments:

Post a Comment