Saturday, 16 May 2020

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க -


உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க - Improve blood circulation

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கான எளிய வழிகள்

உடலில் இருக்கும் இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீர்குலைவு பல்வேறு நோய்களுக்கு வித்திடும். இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் இரத்த ஓட்ட குறைபாடுகளால் ஏற்படுகின்றன.

தலைவலி, கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்து போவது, அடிக்கடி ஏற்படும் தசை பிடிப்புகள், கடினமான தசைகள், பலவீனமாக உணர்வது, சலசலக்கும் காதுகள், ஆறாமல் இருக்கும் காயங்கள், நினைவிழப்பு ஆகியன இரத்த ஓட்ட குறைபாடுகளுக்கு அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இந்த அறிகுறிகளை லேசாக உணரும் போது, நாம் சந்தேகிக்க தொடங்க வேண்டும். இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யும் போது, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு சிக்கல்கள், ஆண்மையின்மை, மாரடைப்பு மற்றும் இறப்பு போன்ற மிகவும் தீவிரமான மற்றும் ஆபத்தான விளைவுகள் உண்டாகலாம்.

நம் உடலில் ஒரே சீராக இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த உணவை குறைத்தல், நார் பொருட்களை அதிக அளவில் உட்கொள்ளுதல், வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் இயற்கையான கூடுதல் பொருட்களை எடுத்துக் கொள்வது ஆகியன மிகவும் முக்கியமானவை. இப்போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் சில டிப்ஸ்களைப் பார்ப்போமா!!!


குளியல்
குளிர்ந்த நீர் குளியல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாகும். பாதிக்கப்பட்ட பகுதியை வெந்நீரில் கழுவும் போதும் அல்லது ஒத்தடம் கொடுக்கும் போதும், உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும். ஒரு உடனடி குளிர் குளியல், உள்ளுறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குளியலின் போது, உடலில் ஏற்படும் நடுக்கம், இரத்தம் சருமம் வழியே பாய்ந்து பிராண வாயுவை விட்டுச் செல்கிறது, என்பதற்கு அறிகுறியாகும். இந்த குளிர் நீர் சிகிச்சை முறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.



சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாய், இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது இதயத்தை பலப்படுத்துகின்றது. தமனிகளின் அடைப்பை நீக்குகின்றது. அத்துடன் எடை இழப்பிற்கும் உதவி புரிகின்றது.



மூச்சு பயிற்சி
பெரும்பாலான மக்கள், மோசமான சுவாச பழக்கங்களை கொண்டிருக்கின்றனர். நம்முடைய நுரையீரலில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, நுரையீரலின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். அதற்கு, ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். இது இரத்தம் அதிக அளவு பிராணவாயுவை பெற வழி வகை செய்யும். அத்துடன், கழிவு பொருட்களை நீக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.



மன அழுத்தத்தை தவிர்த்தல்
மன அழுத்தம், இரத்த ஓட்டத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் மிக முக்கியமான மற்றும் முன்னணி காரணங்களில் ஒன்றாகும். ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆட்படும் போது, முக்கிய உறுப்புகளுக்கு மட்டுமே ,ரத்த செல்லும். மற்ற உறுப்புகளுக்கு செல்லாது. இது மோசமான பின் விளைவுகளை உருவாக்கும். கைகள் மற்றும் கால்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படும். எனவே, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கு, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆழ்ந்து சுவாசிப்பது மற்றும் தியானம் செய்வது போன்ற எளிய நடைமுறைகள், மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.



பாதத்தை உயர்த்துதல்
குறுகிய கால அளவிற்கு பாதத்தை உயர்த்துதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயனுள்ள வழி ஆகும். படுக்கையில் படுத்துக் கொண்டு காலடியில் ஒரு தலையணை வைப்பதன் மூலம் இதை செயல்படுத்தலாம். இது இரத்தம், தலையை நோக்கி பாய்வதற்கு வழி வகுக்கும். இந்த செயல்முறையில், தரையில் படுத்துக் கொண்டு, ஒரு நாற்காலி அல்லது சோபா மீது கால்களை மாற்றி மாற்றி வைக்க வேண்டும். அவ்வாறு செய்வது, இரத்தம் கால்களை விட்டு நீங்குவதற்கு உதவும்.



உடற்பயிற்சி
உடல் உழைப்பு மட்டுமே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் மிக நிச்சயமான வழியாகும். பெரும்பாலான மக்கள், இன்று எந்த ஒரு உடல் உழைப்புமின்றி உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுகின்றனர். வழக்கமான, உடற்பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் மற்றும் ஓட்டப்பயிற்சி ஆகியன இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனினும், நடை பயிற்சியின் போது, நிலையான வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.



சமச்சீர் உணவு
உட்கொள்ளும் உணவு, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது கொழுப்பு மிகுந்த உணவை குறைத்துக் கொள்வது தான். இதனால் இரத்த ஓட்டம் உடலில் அதிகரிக்கும். குறைந்த கொழுப்பானது, இரத்தம், சிறிய நாளங்கள் வழியாக எளிதாக செல்ல உதவுகிறது. உணவில் நார்ச்சத்து மிகுந்த உணவை உட்கொள்வது, கொழுப்பை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

No comments:

Post a Comment