Thursday, 7 May 2020

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு

மிளகின் சிறப்பு

மிளகு கொடி வகையை சார்ந்தது. கொடியில் கனிகள் காய்ந்தவுடன் சிறந்த நறுமணத்தை தருகிறது. அதனால் மசாலாக்களில் தலைசிறந்த நறுமணப் பொருளாகிறது. உலகிலேயே கேரள மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது. பழங்காலத்தில் வணிகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருந்தது, மிளகு.

அதனால் இது கறுப்பு தங்கம் என்றழைக்கப்பட்டது. மிளகிற்கு பின்பு பல சுவாரசியமான வரலாற்று தகவல்கள் இருக்கின்றன. கேரளாவில் இருந்து அரபி கடல் வழியாக மிளகு அரேபியாவிற்கு ஏற்றுமதியானது. அங்கிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஐரோப்பியர்கள் நம் நாட்டின் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் மீது அதிக நாட்டம் கொண்டனர். அதனால்தான் கடல் வழியாக இந்தியாவை தேடிக் கண்டு பிடித்தனர். மிளகை வாங்க வந்தவர்கள் படிப்படியாக வியாபாரத்தை விரிவுபடுத்தி நம் நாட்டையே பிடித்து கொண்டனர்.

முற்காலத்தில் இருந்து நம் நாட்டில் கார சுவைக்கு நாம் மிளகைதான் பயன்படுத்தி வந்தோம். அதனால் சங்க இலக்கியங்களில் மிளகை பற்றிய குறிப்புகள் உள்ளன. சித்த மருத்துவத்திலும் மிளகிற்கு சிறப்பிடம் இருக்கிறது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்!’ என்பது பழமொழி. ஒவ்வாமைக்கு சிறந்த மருந்து மிளகு. சளி, இருமல், ஆஸ்துமா போன்றவைகளுக்கும் இது மருந்தாகின்றது. ஒவ்வாமையால் ஏற்படும் தொடர் தும்மலுக்கும் மிளகை பயன்படுத்தலாம்.

மருத்துவ குணங்கள்

1 தேக்கரண்டி மிளகை இடித்து, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து பனவெல்லம் அல்லது தேன் கலந்து குடிப்பது பலவித நோய்களை கட்டுப்படுத்தும். ஒவ்வாமை மற்றும் பூச்சி கடி காரணமாக தோலில் தடிப்பு, அரிப்பு உண்டாகும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகை பொடி செய்து, அருகம்புல் ஒரு கைபிடி அளவு சேர்த்து, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து குடிக்கவேண்டும். பூச்சி கடி மற்றும் ஒவ்வாமையால் அவதிப்படும்போது முதல் வேலையாக ஒரு தேக்கரண்டி மிளகை நீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து பருகிவிடவேண்டும்.

மழைக்காலத்தில் அடுக்கடுக்காக தும்மல், கண்களை சுற்றிய அரிப்பு, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகையும், ஒரு வெற்றிலையையும் நீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். தொண்டை கட்டு, குரல் கம்மல், தொண்டை வலி போன்றவை இருந்தால், ஒரு தேக்கரண்டி மிளகை நெய்யில் கருக வைத்து பொடித்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். விட்டுவிட்டு வரும் காய்ச்சலுக்கும் மிளகு கஷாயம் சிறந்தது.

ஜீரண சக்தியையும் மேம்படுத்தும். மிளகின் காரத்தன்மைக்கு ‘காப்சாய்சின்’ என்ற வேதிப்பொருள் காரணமாக உள்ளது. மிளகின் காரம் கொழுப்பையும் ஜீரணிக்கவைக்கும். இதனால் ரத்த குழாய்களில் கொழுப்பு படியாது. ரத்த குழாய் தடிமனாவதும் தவிர்க்கப்படும். உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் ‘ஆன்டி ஆக்ஸிடண்ட்’ தன்மையும் மிளகிற்கு உள்ளது. பசி குறைவாக உள்ள சமயங்களில், ஒரு தேக்கரண்டி மிளகு பொடியை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

மூல நோய்களுக்கு ஒரு தேக்கரண்டி மிளகு பொடியுடன், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். மிளகின் காரத்தன்மை மலத்தை வெளியேற்றும் சக்தி கொண்டது. பல் சொத்தை, பல் கூச்சம் ஏற்படும்போது, மிளகு பொடியுடன் உப்பு கலந்து பல் தேய்க்கவேண்டும். தலையில் சிலருக்கு புழு வெட்டு ஏற்படும்.

அவர்கள் மிளகுதூள், உப்பு, வெங்காயத்தை சேர்த்து அரைத்து பாதித்த இடத்தில் பூசினால், மீண்டும் முடி வளரும். தலையில் பொடுகு ஏற்படும்போது மிளகை அரைத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, ஆறவைக்கவேண்டும். பின்பு அதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு நீங்கும்.

No comments:

Post a Comment