Tuesday, 5 May 2020

உங்கள் வீட்டின் நான்கு மூலைகளிலும் வைக்கவேண்டியது எவை? வைக்கக் கூடாதது எவை?

ஒரு வீடு சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டுமென்றால் அதற்கு வாஸ்து மிக மிக முக்கியம். வாஸ்துவின் படி ஒரு வீட்டின் நான்கு திசைகளிலும் என்ன இருக்க வேண்டும்? என்ன இருக்கக் கூடாது? என்பதை பற்றியும், ஒருவேளை வாஸ்து தவறி உங்களுடைய வீடு அமைந்து விட்டது, அந்த தோஷத்திற்கான பரிகாரத்தையும் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வாஸ்துவின் அடிப்படையில் ஒரு வீட்டின் நுழைவு வாயில், அதாவது முன் வாசல் கதவு, நில வாசப்படி எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம். வீட்டின்  தலைவாசல் பகுதி தென்மேற்கு திசை நோக்கி அமைந்து இருக்கக் கூடாது. ஏனென்றால், தீய சக்திகள் உள்ளே நுழையக் கூடிய திசையாக தென்மேற்கு திசை சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுடைய வீடு தென்மேற்கு திசை நோக்கிய வாசலில் அமைந்து விட்டது. என்ன செய்வது? உங்கள் வீட்டின் நுழைவு வாயிலில் அனுமனுடைய படத்தை டைல்ஸ் கல்லாக வாங்கி சுவற்றில் பதித்து விடுங்கள். எந்த ஒரு தீய சக்தியும் உள்ளே கண்டிப்பாக நுழைய முடியாது. அடுத்ததாக ஒரு வீட்டிற்கு மிகவும் முக்கியமானது பூஜை அறை. இந்த பூஜை அறை வட கிழக்கு திசையில் அமைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டின் நான்கு மூலைகள் என்று சொல்லப்படும் ஈசானிய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை, குபேர மூலை இந்த நான்கு மூலைகளிலும் வைக்க வேண்டியவை எவை என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.
ஈசானிய மூலை: வட கிழக்கு மூலையைதான் ஈசானிய மூலை என்று சொல்லுவார்கள். வீட்டிற்கு உள்ளே வரக்கூடிய அனைத்து விதமான ஐஸ்வரியங்களும், நல்லவைகளும் இந்த வழி மூலமாகத்தான் வீட்டிற்குள் நுழையும். இந்த மூலையை எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் நல்லது. குழந்தைகள், முதியவர்கள் தங்கும் அறை இவைகளை இந்த மூலையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த ஈசானிய மூலையில் அதிகமாக பளு இருக்கும் பொருட்களையும் வைக்கக்கூடாது. குளியலறை செப்டிக்டேங்க் கட்டாயம் அமைக்கக் கூடாது. உங்கள் வீட்டில் எதிர்பாராமல் பரணை ஈசானிய மூலையில் வரும்படி அமைந்துவிட்டால், அந்த இடத்தில் மட்டும் பொருட்களை வைக்காமல் இருப்பது மிக மிக நல்லது. ஈசானிய மூலையில் கிணறு, குடிநீர் தொட்டி போன்றவைகளை அமைத்துக் கொள்ளலாம். இந்த மூலையில் கட்டாயமாக கனமாக இருக்கும் பீரோவை வைக்கவே கூடாது.
குபேர மூலை: தென்மேற்கு மூலையில் உங்கள் வீட்டில் பீரோவை வைத்துக்கொள்ளலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் வடமேற்கு மூலையில் மேற்கு பார்த்தவாறு வைத்துக்கொள்ளலாம்.
அக்னி மூலை: வீட்டின் தென்கிழக்கு மூலை அக்னி மூலை என்று அழைக்கப்படும். ஒரு வீட்டின் சமையலறை கட்டாயம் அக்னி மூலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படி அக்னி மூலையில் அமைக்க முடியாதவர்கள், வாயுமூலையான வடமேற்க்கு மூலையில் சமையல் அறையை அமைத்துக் கொள்வார்கள். வாயு மூலையில் சமையலறை இருந்தாலும், உங்கள் வீட்டின் அக்னி மூலையான தென்கிழக்கு பகுதியில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் பொருட்களை வைக்க வேண்டியது மிக அவசியம். முடிந்தவரை ஒரு தீப்பெட்டியை யாவது அக்கினி மூலையில் வைத்துக்கொள்ளுங்கள். சிலரது வீட்டில் வடகிழக்கு மூலையில் சமையலறை அமைந்திருக்கும். வடகிழக்கு மூலையில் சமையலறை இருப்பது உகந்தது அல்ல. இப்படி அமைந்து இருந்தால் மூன்று வெங்கல செம்பினை, சமையல் அறையின் மேல் விட்டத்தில், கவிழ்ந்த மார்க்கமாக தொங்க விடுங்கள். அது கட்டாயம் அடுப்பின் மேல் பகுதியில் தொங்க விடக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வாயு மூலை: வாயு மூலை என்று சொல்லப்படும் வடமேற்கு மூலையில் குளியலறை கழிவறை இவைகள் அமைக்கப்பட வேண்டும். மாறாக வட கிழக்கு திசையில் குளியலறை கழிவறை இருந்தால் வீட்டில் பணப் பிரச்சனை குழந்தைகளுக்கு கல்வியில் பிரச்சினை உண்டாகும்.
நிருதி மூலை: ஒருவருடைய வீட்டில் நிருதி மூலையில் முதன்மை படுக்கை அறை அமைக்கப்பட வேண்டும். அதாவது தென்மேற்கு மூலையை நிருதி மூலை என்று சொல்லுவார்கள்.
இறுதியாக நம்முடைய வீட்டின் மையப் பகுதி. இந்த இடத்தை திறந்த வெளியாகவும், குப்பை கூளங்கள் உள்ளதாகவும் வைத்திருக்கக் கூடாது. வீட்டின் மையப்பகுதியில் சுவர் கட்டாயம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் சிறிய அளவிலான ஜீரோ வாட்ஸ், நீல வண்ண பல்பை 24 மணி நேரமும் எரிய வைப்பது நல்லது.

No comments:

Post a Comment